பல்லடம் அரசு மருத்துவமனையில் இயங்காத ஜெனரேட்டர்; செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம்!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், முதியவர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அந்த நேரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் அது இயங்கவில்லை. இதையடுத்து, செல்போனில் உள்ள டார்ச்லைட் உதவியுடன் முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பாக பல்லடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "பல்லடம் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களே அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் எரிபொருளுக்கு நிதி ஒதுக்காததால், மின்சாரம் இல்லாத பெரும்பாலன நேரங்களில் ஜெனரேட்டர் இயக்கப்படுவதில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் விசாரித்தோம். "முறையான பராமரிப்பு இல்லாததாலும், எரிபொருள் இல்லாததாலும் ஜெனரேட்டர் இயங்கவில்லை. உடனடியாக ஜெனரேட்டர் சரி செய்யப்படும்" என்றனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காமல் செல்போன் லைட் வெளிச்சத்தில் முதியவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம், திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.