ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? ச...
மனு கொடுக்க வந்த மக்களை ஒருமையில் பேசி, அவமரியாதையாக நடத்திய காவலர் - ஆட்சியர், இதையும் கவனிக்கலாம்!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமையான நேற்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுத்தனர். இதில் பல மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
அப்போது, நீண்ட வரிசையில் மனு கொடுக்க நின்ற பொதுமக்களை அங்கிருந்த போலீஸார் ஒருமையில் மரியாதை குறைச்சலாக பேசினர். போலீஸாரின் இந்த செயலை கலெக்டரும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடைசியாக ஆட்சியர் கிட்ட வர்ரோம்!
இது குறித்து அங்கிருந்த சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர் கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுக்கின்றனர். வசிக்க வீடு இல்லாதவர்கள், பட்டா, மாற்று திறனாளிகள் , வாழ்வாதரம், கல்வி, வேலை, அரசு சார்பில் செய்யப்படும் உதவிகள், தங்களுக்கு நடக்கும் அநீதி என பலரும் ஒவ்வொன்றிற்காக மனு கொடுக்கின்றனர்.
எங்கும் அலைந்து திரிந்து விட்டு நல்லது நடக்காதா என்கிற ஏக்கத்துடன் கடைசி படியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகின்றனர் மக்கள். அப்படி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் அடிதட்டு மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்டவர்கள் தங்களது பிரச்னைகள் தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கையுடன் மனு கொடுக்க வரும் போது மரியாதை குறைச்சலாக நடத்துப்படுவது வேதனை. நேற்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மனு கொடுப்பதற்காக பதிவு செய்து ரசீது பெற்றுக்கொண்டு கூட்ட அரங்கிற்கு வந்தனர்.

இவற்றை முறைப்படுத்தும் பணியில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுப்பட்டிருந்தனர். கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அதிகாரிகள் வரிசையாக அமர்ந்து மனுக்கள் பெற்றனர். இதற்காக குறிப்பிட்ட அளவில் பொதுமக்களை உள்ளே அனுப்பி வரிசையில் நிற்க வைத்தனர். அப்போது பெண்கள், வயதானவர்கள் என பலரும் வரிசையில் நிற்க அவர்களை போலீஸார் ஒருமையில் மரியாதை குறைச்சலாக பேசினர். இங்க வந்து நில்லு, அங்க போ உனக்கு என்ன அவசரம், வாம்மா, போம்மா என்றெல்லாம் பேசுகின்றனர்.
வயதானவர்களுக்கு உரிய குறைந்தபட்ச மரியாதை கூட போலீஸ் கொடுக்கவில்லை. கலெக்டெருக்கு எதிரிலேயே போலீஸார் இப்படி நடந்து கொண்டனர், அவரும் இதை கண்டு கொள்ளவில்லை. கூட்டம் அதிகமாக வருகிறது குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இது போன்ற செயல்கள் நடப்பதாக சொல்கிறார்கள். கலெக்டர் இதில் கவனம் செலுத்தி வரும் வாரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். மக்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீஸார் குறைந்தபட்ச கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்” என்றனர்.