ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? சூப்பர் பட்ஜெட் spot!
கோடைக்காலம் தொடங்கிவிட்டது, பலரும் இந்த சம்மருக்கு எங்கு சுற்றுலா செல்லலாம் என்று பிளான் செய்து கொண்டிருப்பார்கள்.
குறைந்த விலையில் நமக்கு அருகே இருக்கும் அழகான சுற்றுலா தலங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? கோடை விடுமுறை என்றாலே ஊட்டி தான் நினைவிற்கு வரும். ஆனால் தருமபுரியில் இருக்கும் இந்த மினி ஊட்டி பற்றி உங்களுக்கு தெரியுமா?
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு கிடைத்த ஒரு இயற்கையின் வரம் என்றால் அது வத்தல்மலை தான்.

தருமபுரியில் இருந்து வெறும் 20 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த வத்தல்மலை அமைந்துள்ளது.
வத்தல்மலையை தான் ”மினி ஊட்டி” என்கிறார்கள். ஊட்டியை போலவே இதமான வானிலை, கொண்டை ஊசி வளைவுகள், அழகான வியூ பாய்ண்டுகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், தோட்டங்கள் என சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்த பல இடங்கள் உள்ளன.
மக்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் இருந்த இந்த வத்தல்மலை கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலா தலமாக மாறி பலரும் இங்கு வருகை தருகின்றனர்.
இந்த வத்தல் மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போலவே இந்த இடம் உங்களை பிரமிக்க வைக்க தவறாது.
தனியாக பைக்கில் ரைடு போக வேண்டும் என்று நினைத்தாலும் இந்த இடம் சூப்பர் சாய்ஸாக இருக்கும். மலையின் உச்சி அடைய 24 ஹர்பின் பெண்டுகள் இருக்கும். ஆங்காங்கே நிறுத்தி அதன் நியூ பாய்ண்ட்களை நீங்கள் ரசிக்கலாம். அப்புறம் என்ன இந்த சம்மருக்கு மினி ஊட்டி செல்லலாமா?