Travel Contest: வால்பாறை - சாலக்குடி சாலை; காட்டுக்குள் சேட்டனின் சாயா; அதிரப்பள்ளி சுற்றுலா அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அதிரப்பள்ளி அருவி (Athirappilly Falls) என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு அருவியாகும்.
24 மீட்டர் உயரமுடைய இந்த அருவி சாலக்குடி ஆற்றில் வழச்சல் மற்றும் சோலையாறு காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ளது.
வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்த்திட வேண்டிய இயற்கையின் கொடை.
அதிலும் குறிப்பாக வால்பாறை - சாலக்குடி காட்டுப் பாதையின் வழியாக (வாய்ப்பிருந்தால் இருசக்கர பயணம் உங்கள் இன்பத்தை இரட்டிப்பாக்கும்.)
அலுவலக நண்பர்களுடன் முதல்முறையும், அறை தோழர்களுடன் இரண்டாவது முறையும், குடும்பத்தினருடன் மூன்றாவது முறையும் என மூன்று விதமான மனநிலையோடு பயணிக்கும் பாக்கியம் பெற்றவன் என்ற முறையில் இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.
வால்பாறையிலிருந்து சாலக்குடி வரை நீளும் கானகத்தின் ஊடே பயணிப்பது உங்கள் கண்களுக்கு ஒரு ஐஸ் கட்டிதான்.
கான்கிரீட், கம்ப்யூட்டர் காட்டிலிருந்து போனவனின் கண்களுக்கு மாமியார் வீட்டு விருந்துதான்.
கருவைக் காட்டுக்காரனான எனக்கும் அது சொர்க்கத்தின் வாசலைப்போல்தான் இருந்தது.
அதிரப்பள்ளியை ஓரே ஒரு வெள்ளி கம்பியைப் போலவும், ஆயிரம் கம்பிகள் ஒரு சேர கொட்டியது போலவும் கண்டிருக்கிறேன்.

நான் கடைசியாக குடும்பத்தினருடன் 2019ல் பயணப்பட்டேன். வால்பாறையில் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டமாக்கப்பட்ட தமிழக காடுகளின் வழியே சாலக்குடி சென்றடைந்தோம்.
அருவியை ரசித்துவிட்டு வெளியே வந்தால் அருவியைப் பார்த்தபடி பழபச்சியும், டீயும் அருந்த அழகான ஒரு டீக்கடை உண்டு .
அங்கிருந்து மாலையில் வால்பாறை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.
மாலையில் சிறிது தாமதமாகத்தான் நாங்கள் எங்கள் பயணத்தை அங்கிருந்து எங்களுடைய தங்குமிடமான வால்பாறைக்குத் தொடங்கினோம். வரும் வழியில் சிறு வாகன பழுது காரணமாக எங்கள் பயணம் இடையில் தடைப்பட்டது
அந்த இரவுதான் எனக்கு மனிதம் இன்னும் மரித்துப் போக வில்லை என்பதை உணர்த்தியது. எங்களுக்கு முன்பாகச் சென்ற வாகனத்தில் ஏற்பட்ட சிறு தவறின் காரணமாக எங்களுக்குப் பின்னால் ஒரு 20 வாகனங்கள் மாட்டிக்கொண்டன. ஐந்தரை மணிக்குப் பின்வரும் எந்த வாகனங்களும் அந்த காட்டுப்பாதை வழியாக அனுமதிப்பதில்லை.

ஒருவழியாக அங்கிருந்த சேட்டன்கள் வந்து எங்கள் வாகனத்தைச் சரி செய்து, அங்கிருந்து எங்களுடைய வாகனங்களை நகர்த்தி விட்டு, அதன் பின் எங்கள் குடும்ப உறுப்பினர்களை வேறு ஒரு வாகனத்தின் மூலம் வால்பாறை செல்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டு, நானும் எனது நண்பர்களும் ஏதாவது தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று தேடத் தொடங்கினோம்.
ஆனால் அந்த காட்டில் எங்களையும், இரவின் தனிமையும், குளிரையும் தவிர வேறேதுமில்லை. ஏன் என்றால் அது ஆளரவமற்ற காடு.
இரவு ஆறரை மணிக்குப் பின்பாக எந்த ஒரு வாகனங்களுக்கும், ஆட்களுக்கும் அங்கு அனுமதி இல்லை. எப்போதாவது வந்து செல்லும் காவல்துறையின் வாகனத்திற்கு மட்டுமே அனுமதி.
நாங்கள் இரவை அந்த கானகத்தின் ஊடாக கடக்கத் தொடங்கினோம். இரவும் இசையும் எங்களுக்கு வழி கொடுத்தது.
அங்கிருந்து சற்றேறக்குறைய நான்கு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வலச்சல் என்று ஊரிலிருந்த அனல் மின் நிலையத்தினுடைய காவல் அறையில் ஒரு காவலாளி இருந்தார்.
அவர் பெயர் துளசிதரன் (அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் - கேரளாவில் தொடுபுழா என்ற ஊரைச் சேர்ந்தவர்) அவருக்கென்று ஒரு சிறு அறை இருந்தது.
அந்த அறையில் தனி ஆளாக அந்த மின் நிலையத்தின் உடைய காவல் பணியை அவர் செய்து கொண்டிருந்தார். ஒரு வாரம் ஒரே ஒரு தனி நபராக அவர் அந்த வேலையைத் தொடர வேண்டும். ஒரு வாரத்திற்கு பின்புதான் அவர் தன்னுடைய வேலையை முடித்து ஊருக்குச் சென்று திரும்புவார்.
அவரிடம் இருந்தது அந்த ஒரு வாரக் காலத்திற்கான உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய சின்ன பொருட்களும் ஒரே ஒரு காரும் மட்டும்.
அந்தச் சிறிய அறை அவருக்கும் அவருடைய பொருட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இருந்த பொருட்களும் ஒரு வாரக் காலத்திற்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே போதுமானதாக இருந்தன.

இருந்தாலும் பசியிலிருந்த எங்களைக் கண்டவுடன், அவருக்காக வைத்திருந்த தேநீரில் எங்களுக்கும் சிறிதளவு எடுத்து அதனுடன் அவருக்காக வைத்திருந்த கடலைகளைச் சமைத்து எங்கள் பசியை ஆற்றினார்.
இந்த உலகத்தினுடைய ஆகச்சிறந்த இரவு உணவு அதுவாகத்தான் இருக்கும்.
எனக்குச் சிறிதளவும் ஐயமில்லை. தன் தேவைக்கே இருக்குமா இருக்காதா என்ற ஒரு நிலையில் இருக்கும் ஒருவன், அடுத்தவரின் தேவையை அவன் கண் கொண்டு பார்த்து அதைத் தீர்த்து வைப்பது என்பது மனிதம் நிலைத்திருப்பதற்கான சாட்சி என நான் எண்ணி முடிக்குமுன், அவர் ஒரு காரியம் செய்தார்.
குளிரில் வாடிக் கொண்டிருந்த எங்களைப் பார்த்ததும், உள் சென்று அவருடைய காரின் சாவியைக் கொண்டுவந்து அதனுள் தூங்குமாறு வேண்டிக் கொண்டார்.
என்னுடைய அறை சிறியது. அதனால் உங்களை என்னுடைய அறையில் தங்க வைக்க இயலாது. எனவே இன்று இரவை இதில் கழியுங்கள் என்று கூறி, உள் சென்றார்.
யாரென்றே தெரியாத மூன்று நபர்களுக்குத் தன்னுடைய காரின் சாவியைக் கொடுத்து இரவு முழுவதும் தங்கச் சொல்வதற்கு ஒரு ஆகச்சிறந்த மனம் வேண்டும். அந்த மனம் அவருக்கு வாய்த்திருந்தது.
மனித இனத்தின் ஆகச் சிறந்த பண்பு விருந்தோம்பல்தான் என்பதை என்னுடைய நெற்றிப்பொட்டில் மீண்டும் ஒருமுறை நிரூபித்த பயணம் அது.
பயணங்கள்தான் இத்தகைய தேவர்களையும், மனிதர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும்.
பயணம் பக்குவப்படுத்தும்
பயணப்படுவோம்...
இப்படிக்கு
இரா. சிலம்பரசன்
புலியூர்
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.