CSK: '2010 ஆம் ஆண்டிலும் இப்படித்தான் ஆடியிருந்தோம். ஆனால்..!' - தொடர் தோல்வி கு...
Travel Contest: 'வழி தவறி நுழைந்த அடர் காடு; களிறுகளின் கால் தடம்' - பரம்பிக்குளம் திரில் அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அது ஒரு அழகிய புலர் காலைப் பொழுது.
காட்டின் நடுவே ஒரு சிற்றோடையில், அனைவரும் குளித்துக்கொண்டிருக்கையில், திடீரென ஒரு காட்டெருமைக் கூட்டம் எங்களை நோக்கி வேகமாக வந்தது.
காவலர் அக்கா எங்களை விரைந்து கரையேறக் கட்டளை இட்டார். நாங்கள் பதறிக்கொண்டு ஓடினோம்.
ஓடிய வேகத்தில், எங்கு ஓடுகிறோம் எனத் தெரியாமல், அடர் காட்டிற்குள் நுழைந்து வழியையும் தவற விட்டுத் தவித்தோம்.
ஓடிய களைப்பிலிருந்த எங்கள் கண் முன்னே களிறுகள் இரண்டு காட்டைக் கபளீகரம் செய்து கொண்டிருந்தன.

பெரிய தந்தங்கள் கொண்ட களிறு, அதன் பிடியுடன் (பிடி - பெண் யானை) நடந்து எங்களை நெருங்கிக்கொண்டிருந்தது.
சட்டென்று நின்ற அந்த களிறு, ஒரு பெரும் மரம் ஒன்றை, தனது துதிக்கையால் லாவகமாகப் பற்றி வேருடன் பிடுங்கி எரிந்தது.
ஒரு சில வினாடிகளில் நடந்துவிட்ட இந்த காட்சி, எங்களை நடுநடுங்கச் செய்தது.
"யானை தனியா இருந்தால்தான் ஆபத்து, இங்கு இரண்டு யானைகள் இருக்கின்றன. எனவே பயப்பட அவசியம் இல்லை. ஆனால், வழி தவறி, நாம் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டோம்.
எனவே இங்குச் சிறுத்தை மற்றும் புலிகளின் நடமாட்டம் இருக்கலாம். நாம் இங்கிருந்து உடனே வெளியேற வேண்டும்", என மேலும் பயத்தைக் கூட்டினார் காவலர் அக்கா.
"சிறிது தூரம் நடந்தால் அங்கு ஒரு ஏரி இருக்கும். அங்கே சென்றால், நாம படகில் ஏறிச் செல்லலாம்" எனக் கூறினார் காவலர் அக்கா.
சற்று தூரம் நடந்ததும், ஒரு அழகிய புல்வெளியும் அதையொட்டி ஒரு பெரிய நீர்நிலையும் தென்பட்டன.
அதுவரை இருந்த பய உணர்வு மெல்ல மெல்ல விலகி, பாதுகாப்பான இடத்திற்கு வந்தடைந்தது போல் உணர்ந்தோம்.
நீர்க்கரையின் ஓரத்தில் ஒரு சிறிய படகு புறப்படத் தயார் நிலையில் இருந்ததைக் கண்டு, காவலர் அக்கா படகிலிருந்தவர்களுக்கு எதோ சமிக்கை செய்தார்.
"சீக்கிரம் வாங்க, படகு புறப்படப் போகிறது" என்றார் காவலர் அக்கா.
"இதற்கு மேல் வேகமா நடக்க முடியவில்லை. அவர்களின் அலைபேசி எண் இருந்தால் அழைத்து, சற்று நேரம் காத்திருக்கச் சொல்லுங்கள்" என்றேன் நான்.

கைப்பேசி "விர்ர்ர்" என அலறியது. சத்தம் மெல்ல மெல்ல அதிகமானது, "அக்கா, நீங்கள் அழைப்பது என்னுடைய அலைபேசி எண், அவர்களின் அலைபேசிக்கு அழையுங்கள்" எனக் கூறி, அழைப்பைத் துண்டித்தேன்.
சற்று நேரம் அமைதியாக இருந்தது அந்த இடம். மறுபடியும் கைப்பேசி அலற ஆரம்பித்தது, "அக்கா, மறுபடியும் நீங்கள் அழைப்பது என்னுடைய அலைபேசி எண்" எனக் கூறி அழைப்பைத் துண்டிக்க கை மெல்ல நீண்டது.
"அண்ணா, அலாரம் இரண்டாவது முறையாக அடித்துக்கொண்டிருக்கிறது. மணி என்னவென்று பாருங்கள்" என்றது ஒரு குரல். சட்டென அலறி எழுந்ததுடன்தான் தெரிந்தது, இதுவரை கண்ட அனைத்தும் சொப்பனம் என்று.
கனவுகள் என்பது ஆழ்மனதில் ஆழப் பதிந்த நினைவலைகளால் உருவாக்கப்படும் காட்சிகள். அந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்பமுடியாத கற்பனை உலகத்திற்கு நம்மைக் கூட்டிச்செல்லும்.
அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான் அந்த கனவிலிருந்தது. முன்தினம் நடந்த நிகழ்வுகளும் இன்றைய நாளின் எதிர்பார்ப்புகளும் கலந்த நினைவலைகள், கனவாகத் தோன்றியிருக்க வேண்டும்.
"மணி 5.40 ஆச்சு, நான் சென்று பயணத்திற்குத் தயார் ஆகிறேன், நீ மற்றவர்களைக் கைப்பேசி மூலம் அழைத்து எழுப்பி விடு" என்றேன் சோம்பல் முறித்துக்கொண்டே.
"அலைபேசி மூலம் அழைத்து எழுப்பினால் மீண்டும் உறங்கி விடுவார்கள். நான் சென்று கதவைத் தட்டி எழுப்புகிறேன்" எனக் கூறி வெளியே சென்றான் தோழன்.
நான் குளியல் அரை சென்று காலைப் பரிகாரங்களை முடித்து, உடை மாற்றி, அறையை விட்டு வெளியேறி விடுதியின் முன்புறம் இருந்த தோட்டத்திற்குச் சென்றேன்.

தோட்டத்தில், மின் விளக்குகள் இன்னும் அணைக்கப்படாமல் இருந்தன. வானம், மிதந்துகொண்டிருக்கும் ஒரு மாயத் தட்டு, கற்பனைக்கு எட்டாத பேருலகு.
அந்தப் பேருலகில், கதிரவன் துயில் எழுந்து, காடெங்கும் ஒளிக்கீற்றைப் பரப்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.
இரவு லேசாகத் தூறல் சிந்தியதற்குச் சாட்சியாக, இலைகளிலும் மலர்களிலும் நீர்த்துளிகள், வெண் முத்துக்கள் போல் சிதறிக்கிடந்தன.
மலர்கள் தனக்கே உரித்தான தனித் தன்மைகளோடு பல வண்ணங்களில் மலர்ந்து உள்ளத்தையும் மலரச்செய்தன. அவை பரப்பிய நறுமணம் காடெங்கும் பரவிக் கிடந்தது.
புள்ளினங்களின் இன்னிசை, வண்டுகளின் ரீங்காரம், குயிலினங்களின் குழலோசை அனைத்தும் சேர்ந்து அங்கே ஒரு இசை அரங்கேற்றத்தை நடத்திக்கொண்டிருந்தன.
காலை நேரத்தின் குளிர்காற்று, மெல்லத் தவழ்ந்து வந்து உடலுரசிச் சென்றது. இப்படியொரு காலைப்பொழுதை இதுவரை நான் கண்டதில்லை.
தோழர்கள், தோழிகள் மற்றும் எங்கள் பயணத்திற்குக் குறும்பு சேர்க்க வந்த குட்டிச் சுட்டி (நண்பரின் மகள்), அனைவரும் ஆயத்தமாகி அறை விட்டு வெளியே வந்தனர். காவலர் அக்காவும் வந்துவிட்டார்.
"வணக்கம், காபி, டீ லாம் குடிச்சுடீங்களா? கிளம்பலாமா?" என்றார் காவலர் அக்கா.
"இன்னும் இல்ல, இப்போ தான் சொல்லி இருக்கோம்" என்றோம் நாங்கள்.
"இன்று மழை வந்தாலும் வரும். நாம் துரிதமாகச் செல்ல வேண்டும். இல்லையேல் மழையில் சிக்கிக்கொள்ள நேரிடும்" என ஆகாயம் பார்த்து ஆருடம் கூறினார் காவலர் அக்கா.
அவரவர் விருப்பத்திற்கேற்ப தேநீர், கொட்டைவடிநீர் மற்றும் பால் வழங்கப்பட்டது. சில்லென வீசிய இளங்காற்று மனதையும் உடலையும் குளிர வைக்க, சுவை மிகுந்த தேனீர், நாவிற்குச் சுவை கொடுக்க, தேநீரின் இளஞ்சூடு, உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியூட்ட, அனைவரும், மலையேற்றத்திற்குத் (Trekking) தயாரானோம். எட்டடி எடுத்து வைப்பதற்குள், வான் விட்டு எட்டிப் பார்த்தன மழைத்துளிகள்.

"மழை வேகமா வராது. ஆனால் தூறல் இருக்கும். உங்களால் நடக்க முடியுமா? காட்டிற்குள் சென்ற பிறகு மழைக்கு எங்கும் ஒதுங்க முடியாது" என, எங்கள் விருப்பத்தைக் கேட்டார் காவலர் அக்கா.
காலை நேரம், சில்லெனக் காற்று, லேசான மழைத் துளி, காட்டின் நடுவே நடைப்பயணம், நினைக்கும்பொழுது மெய் சிலிர்த்தது. எனவே, அந்த அனுபவத்தைத் தவறவிட வேண்டாம் என முடிவு செய்தோம்.
எனினும், பாதுகாப்பு கருதி பயணத் தொலைவை மட்டும் குறைத்துக்கொள்ள எண்ணி எங்கள் விருப்பத்தைக் காவலர் அக்காவிடம் தெரிவித்தோம்.
"கரடிப்பாதை, யானைத்தடம், பக்மார்க் (Pugmark) மற்றும் காரியன்சோழா என 4 வகையான வழித்தடங்கள் உள்ளன. நாம் தூரம் குறைவாக இருக்கும் கரடிப் பாதையில் செல்லலாம்.
அதில் சென்றால் காட்டிற்குள் நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை. குறுகிய நேரத்தில் வாகனங்கள் செல்லும் தார்ச் சாலையை அடைந்து விடலாம்" என்றார் காவலர் அக்கா.
"சரி" என அனைவரும் ஆமோதித்தோம்.
குடைகள் விரிந்தன. காட்டின் அழகை இரசிக்கக் கண்களும் விரிந்தன. நடைப்பயணம் தொடங்கியது. சிறிது தூரம் தார்ச் சாலையில் சென்ற பிறகு, வலப்புறம் திரும்பி, காட்டிற்குள் செல்லும் ஒற்றையடிப் பாதையில் இறங்கினோம்.
அடர்ந்த மரங்கள் சூழ்ந்து இருந்ததால், நாங்கள் வந்த தார்ச் சாலை சிறிது நேரத்தில் எங்கள் பார்வையிலிருந்து மறைந்தது.
இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஒற்றையடிப் பாதையும் மறைந்தது. எங்களைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும் செடிகளும் மட்டுமே இருந்தன.
புற்களும் இலைச் சருகுகளும் படர்ந்த அடர் வனத்தில் பயணம் ஆரம்பம் ஆனது. மழைத்தூறல் நின்றுவிட்டதால், குடைகள் உள்ளங்கைக்குள் சுருங்கிக்கொண்டன.

காடு மிகவும் தூய்மையான இடம் மட்டும் அல்ல, மனித இதயத்திற்கு மிகவும் நெருக்கமான இடமும் கூட.
எதிரில் பறந்து விரிந்த காடு, தூரத்தில் அருவியின் ஓசை, எங்கும் சிறகடித்துத் திரியும் பறவைகள், அவ்வப்பொழுது வீசிச்செல்லும் குளிர்காற்று, இவற்றுடன் தொடர்ந்தது எங்கள் நடைப்பயணம்.
மனித வழித்தடங்களின் வழியே நாம் காட்டில் நடந்திருப்போம். ஆனால், இது மனித வாசனை அதிகம் படாத அடர் காடு என்பதால், வழித்தடங்கள் எதுவும் ஏற்படவில்லை.
பாதுகாக்கப் பட்ட பகுதி என்பதால், மலைத்தொடர் முழுவதும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
காவலர் அக்காவின் துணை ஒன்று மட்டுமே எங்களுக்கு இருந்தது. சற்று தூரம் நடந்ததும், ஒரு காட்டாறு தென்பட்டது.
இரவு சொப்பனத்தில் கண்ட ஆற்றுக் குளியலும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் நினைவிற்கு வந்து சென்றன.
அந்த காட்டாற்றின் ஒரு பகுதி, மணற்பாங்காக இல்லாமல், கரும்பாறைகளாக இருந்தது. அந்தப் பாறைகளின் இண்டு இடுக்குகளில் நுழைந்து, வளைந்து வளைந்து ஓடிக்கொண்டிருந்தது தெள்ளெனத் தெளிந்த நன்நீர்.
மழைக்காலம் அப்பொழுதுதான் தொடங்கி இருந்ததால், காட்டாற்றில் நீர் பிரவாகம், குறைவாகவே இருந்தது.
அந்தப் பாறைகளின் மீது நடந்து காட்டாற்றைக் கடக்கலாம் என்றார் காவலர் அக்கா. பாறைகள் ஈரமாகவும், வழுவழுப்பாகவும் இருந்ததனால், சற்று வழுக்கவும் செய்தன. எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து சென்றோம்.

காட்டாற்றைக் கடந்ததும், காட்டில் மரங்கள் மேலும் அடர்ந்து காணப்பட்டன. கதிரவனைக் கருமேகங்கள் சூழ்ந்திருந்ததாலும், மரங்களின் கிளைகள் வனத்தைச் சூழ்ந்திருந்ததாலும், நன்கு விடிந்த பிறகும், அப்பகுதி வெளிச்சம் இல்லாமல், இருள் சூழ்ந்தே காணப்பட்டது.
அந்த இருளிலும், காவலர் அக்கா, ஆங்காங்கே சில விலங்குகளின் கால் தடங்களையும், சாணங்களையும் சுட்டிக் காட்டி காட்டி எங்களைத் திகிலடையச் செய்தார்.
எனவே, அந்த அடர் வனத்தைத் துரிதமாகக் கடக்க நினைத்தது எங்கள் மனம். மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட கால்களும் ஓட்டம் எடுக்கத் தொடங்கின.
சற்று நேரத்தில், ஒரு தார்ச் சாலையை அடைந்ததும். மனதில் மெல்ல அமைதி தோன்றியது. நீண்ட தூரம் நடந்ததால், கால்கள் சோர்வடையத் தொடங்கின. எனவே நடையின் வேகமும் குறைந்தது.
"இன்னும் எவ்ளோ தூரம் அக்கா நடக்கணும்?" எனக் கேட்க ஆரம்பித்தோம்.
"இவ்வளவு தூரம் காட்டில் நன்றாக நடந்தீர்கள். இன்னும் கொஞ்ச தூரம்தான். வாங்க சீக்கிரம் போய்விடலாம்" எனக் கூறி எங்களை உற்சாகப்படுத்தினார் காவலர் அக்கா.
அவர் சொன்னது சிறிது தூரம் என்றாலும், நாங்கள் களைப்படைந்திருந்ததால், வெகுதூரம் நடப்பது போலவே இருந்தது எங்களுக்கு.
பயணம் உடலுக்குக் களைப்பை ஏற்படுத்தினாலும், அந்த வனத்தின் அழகும், பச்சைப் பர்வதங்களும், மனதிற்குப் புத்துணர்ச்சி அளித்து, நடைக்குச் சற்று வேகம் கூட்டியது.
சிறிது நேரத்தில் நாங்கள் விடுதியை அடைந்தோம். மெய்சிலிர்ப்பு, புத்துணர்ச்சி, பயம், சோர்வு எனப் பல்வேறு அனுபவங்களை ஒருசேரக் கொடுத்த நடைப்பயணம் நிறைவடைந்தது.
"இப்பொழுது மணி 8.30, நீங்கள் காலை உணவு முடித்துவிட்டு ஆயத்தமாக இருங்கள், 10 மணிக்குப் படகு சவாரிக்குப் போகணும்" என அடுத்த பயணத்தின் விவரத்தைக் கூறினார் காவலர் அக்கா.

நாங்கள் சற்றுநேரம் விடுதியின் தோட்டத்தில் அமர்ந்து இளைப்பாறிய பிறகு, காலை உணவருந்தச் சென்றோம். இட்டிலி, தோசை, சாம்பார், இரண்டு வகை சட்டினி என அமர்க்களமாய் இருந்தது உணவு.
நீண்ட நேரம் நடந்த களைப்பில், பசியும் அதிகமாக இருந்ததால், அனைவரும் நன்றாக உணவருந்தினோம்.
அரை மணி நேரத்தில் ஆயத்தம் ஆக வேண்டும் என முடிவு செய்து அவரவர் அறைக்குச் சென்றோம். படகு சவாரி முடிந்த உடன் எங்கள் பரம்பிக்குளம் சுற்றுலாவும் முடிவடையும் என்பதால், எங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவது என முடிவு செய்தோம்.
அனைவரும் தயார் ஆனதும், விடுதியின் மேற்பார்வையாளர் மற்றும் அங்குப் பணி புரிந்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றோம்.
படகு சவாரி செய்ய, பரம்பிக்குளம் அணையின் நீர்த் தேக்கப் பகுதிக்குப் பயணம் செய்தோம். பயண வழி மிகவும் குறுகலாகவும், மேடு பள்ளமாகவும் இருந்தது.
எனவே சற்று கவனமாகவும், நிதானமாகவும் வாகனத்தைச் செலுத்த வேண்டியிருந்தது. வாகனம் நீர்த் தேக்கப் பகுதிக்குள் நுழைந்ததும், சொப்பனத்தில் கண்ட காட்சிகள் அனைத்தும் உண்மையில் கண்டேன்.
ஒரு புறம், மஞ்சளும் பச்சையும் கலந்த தங்க நிறத்தில் புல்வெளி, மறுபுறம் அலை அலை எனத் திரண்டிருந்த மலைத்தொடர், எதிர்புறத்தில் காற்று கூட நுழையச் சிரமப்படும் அவளிற்கு அடர்ந்து கிடந்த வனம்.
இவை அனைத்திற்கும் நடுவே அமைந்திருந்தது, கடல் போல் காட்சி அளித்த பரம்பிக்குளம் அணையின் நீர்த் தேக்கம்.
புல்வெளி, மலைத்தொடர், அடர்வனம், கடல் போல் இருந்த நீர்நிலை, இவை அனைத்தையும் ஒன்று சேர பார்ப்பதற்குக் கண்கள் கோடி வேண்டும்.
அதன் அழகை மேலும் கூட்டிக் காட்டியது மேகத்தைக் கிழித்து வெளியேறிய கதிரவனின் செந்நிறக் கதிர்கள்.

காற்றும், நீரும் மாசடையக் கூடாது என்பதற்காக, அங்கு இயந்திரப் படகுகளுக்கு அனுமதி இல்லை. அதற்கு மாற்றாக, மூங்கில்கள் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது அந்த படகு.
படகு மிகவும் விசாலமாக இருந்தது. படகின் இருபுறமும் இருக்கைகள் அமைக்கப் பட்டிருந்தன.
நாங்கள் படகில் ஏறி அமர்ந்ததும் நால்வர் கொண்ட குழு படகைச் செலுத்த ஆரம்பித்தனர். சிற்றலைகள் எழும் அந்த நீர் நிலையில் மெல்ல மிதந்து சென்றது படகு.
இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போல் இருந்தது அந்த பயணம். 15 நிமிட பயணம் அது, ஆனால் அப்படி ஒரு அனுபவத்தை நாங்கள் எங்கள் வாழ்நாளில் பெற்றதில்லை.
கரை வந்து சேர்ந்ததும், படகு செலுத்திய குழுவிற்கு நன்றி கூறி விடைபெற்றோம். அனைவரும் வாகனத்தில் ஏறி பரம்பிக்குளம் நுழைவு வாயிலை நோக்கிப் பயணித்தோம்.
அதே நுழைவுவாயிலை நோக்கி முன்தினம் செய்த பயணம், எண்ணற்ற எதிர்பார்ப்புகளுடனும், கனவுகளுடனும் இருந்தது.
இன்று அதே வழியில், மனம் முழுவதும் எண்ணற்ற நினைவுகளையும், புதிய அனுபவங்களையும் தாங்கிச் செல்கின்றோம்.

புள்ளி மான்களும், கலை மான்களும், பிரிந்து செல்லும் எங்களை ஏக்கத்துடன் பார்த்தன.
நீல வண்ண மஞ்ஞைகள் (மயில்கள்), தோகை விரித்து ஆடியும், நீண்ட கழுத்துப் பகுதியை மேலும் நீட்டிப் பார்த்து, மீண்டும் வருக எனக் கூறி வழி அனுப்பின.
புள்ளினங்களும், வண்டினங்களும் இட்ட சப்தம், "எங்களை விட்டுச் செல்லாதீர்கள்" எனக் கூறுவது போல் இருந்தது.
காட்டெருமைகளும், கருநிற களிறுகளும், நாங்கள் பிரிந்து செல்வதால், எங்கள் மீது கோபம் கொண்டு எங்களை வழி அனுப்ப வரவேயில்லை.
சுமார் 1 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, பரம்பிக்குளம் நுழைவுவாயிலை அடைந்தோம்.
காவலர் அக்கா எங்களை விட்டுப் பிரியும் நேரமும் வந்தது. பழகிய அந்த இரண்டு நாட்களில், அவர் எங்களிடத்தில் காட்டிய அக்கறையும் அன்பும் அளவற்றது.
அந்தக் காட்டில் அவருக்கு இருந்த அனுபவம், எங்களை ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியப்படுத்தியது. அனைவரும் வாகனத்திலிருந்து இறங்கி அவருக்கு விடை கொடுத்தோம்.
அலை அலை எனத் திரண்டிருந்த மலைத்தொடர்கள், கடல் போன்ற நீர்நிலைகள், வான் நோக்கி நீண்டு நெடிந்து வளர்ந்திருந்த மரங்கள், எண்ணற்ற உயிரினங்கள், அனைத்தும் கொண்ட பரம்பிக்குளம், எங்கள் மனம் முழுவதும் பரவிக்கிடக்க, இயற்கை அன்னை அளித்த பசுமையான நினைவுகளுடனும், புதுமையான அனுபவங்களுடனும், பிரிய மனம் இல்லாமல், பிரியா விடை கொடுத்து, இனிதே முடிவடைந்தது எங்கள் பயணம்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.