திருமணம் செய்ய சொன்ன பெண் எஸ்.ஐ; துண்டு துண்டாக வெட்டி கடலில் வீசிய இன்ஸ்பெக்டர் - தண்டனை விவரங்கள்
மும்பை கல்யாண்-ல் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அஸ்வினி. இவரை கடந்த 2016-ம் ஆண்டு தானே இன்ஸ்பெக்டர் அபய் குருந்தர் கடத்திச்சென்று படுகொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி கடலில் வீசிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு மும்பை அருகில் உள்ள பன்வெல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணையில் உதவி இன்ஸ்பெக்டரை கடத்தி கொலை செய்த இன்ஸ்பெக்டர் அபய்-க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபய்-க்கு தூக்குத்தண்டனை விதிக்கவேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால் இக்கொலை அபூர்வமானது கிடையாது என்பதால் தூக்குத் தண்டனை விதிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளர்.

நடந்தது என்ன?
உதவி இன்ஸ்பெக்டர் அஸ்வினி கடந்த 2016=ம் ஆண்டு திடீரென காணாமல் போனார்.இது குறித்து அஸ்வினியின் சகோதரர் தனது சகோதரியை காணவில்லை என்று அதே ஆண்டு ஜூலை மாதம் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் அப்புகார் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில போலீஸார் விசாரித்து வந்தனர்.
2017ம் ஆண்டு ஜனவரி மாதம் குடியரசுத்தின விழாவில் அபய்-க்கு ஜனாதிபதி சிறந்த போலீஸ் அதிகாரி என்று கூறி விருதும் கொடுத்து கெளரவித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அஸ்வினியின் போன் கடைசியாக இன்ஸ்பெக்டர் அபய் வீடு இருக்கும் பயந்தர் பகுதியில் காட்டியது. அஸ்வினி காணாமல் போன நான்கு நாட்கள் கழித்து அவரது மொபைல் போனிலிருந்து அஸ்வினியின் சகோதரி கணவருக்கு ஒரு வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்தது. அதில் தான் வட இந்தியாவிற்கு தியானத்திற்கு செல்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் விசாரணையில் இன்ஸ்பெக்டர் அபய்-க்கு அஸ்வினியுடன் திருமணம் தாண்டிய உறவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அஸ்வினியின் சகோதரர் கொடுத்திருந்த புகாரில் தனது சகோதரி இன்ஸ்பெக்டர் அபய்-டம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்ததால் அவரை கொலை செய்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அதே ஆண்டு இன்ஸ்பெக்டர் அபய் மற்றும் ராஜு பாட்டீல் ஆகியோர் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சரியான பதில் கொடுக்கவில்லை. கொலை செய்யப்பட்ட அஸ்வினியின் உடலை கண்டுபிடிக்க போலீஸார் கடல் பகுதி, கழிமுகப்பகுதி என பல இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் எங்கும் உடல் கிடைக்கவில்லை. 2018ம் ஆண்டு அபய் டிரைவர் குந்தன் மற்றும் அபய் நண்பர் மகேஷ் ஆகியோர் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட அபய் மற்ற மூவருடன் சேர்ந்து அஸ்வினியை பயந்தரில் உள்ள தனது வீட்டில் வைத்து கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்து ஒவ்வொன்றாக எடுத்துச்சென்று அங்குள்ள கழிமுகப்பகுதியில் போட்டுவிட்டதாக குறிப்பிட்டார். இவ்வழக்கில் கடந்த 5ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட அபய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். குற்றத்திற்கான தண்டனை இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இன்ஸ்பெக்டர் அபயிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ராஜூ பாட்டீல் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அபயின் மற்ற இரண்டு நண்பர்களுக்கு தலா 7 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு பேரும் ஏற்கனவே 7 ஆண்டு சிறையில் இருந்துவிட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நீதிபதி பல்தேவார் தனது தீர்ப்பில், போலீஸார் இவ்விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய ஒரு ஆண்டு எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிக்கு எதிரான சந்தர்ப்ப சாட்சியங்கள் போதுமானதாக இருக்கிறது என்றும், கொலை செய்யப்பட்ட அஸ்வினி தொடர்ந்து தன்னை திருமணம் செய்யும்படி நிர்ப்பந்தம் செய்ததால் அவரை இன்ஸ்பெக்டர் கொலை செய்திருப்பதாக சந்தர்ப்ப சாட்சியங்கள் கூறுகிறது. கொலை செய்யப்பட்ட அஸ்வினியின் உடல் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதிபடுத்த முடிகிறது என்று நீதிபதி குறிப்பிட்டார்.