குஜராத் குடியிருப்புப் பகுதியில் விழுந்த பயிற்சி விமானம்!
குஜராத்தில் குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அம்ரேலி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பயிற்சி நிறுவனத்தின் விமானம், பகல் 12.30 மணியளவில் சாஸ்திரி நகர் குடியிருப்புப் பகுதியில் விழுந்துள்ளது.
விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மரத்தில் மோதி, குடியிருப்புப் பகுதியில் இருந்த திறந்தவெளி நிலத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விமானத்தில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விமானத்தை இயக்கிய பயிற்சி விமானி சம்பவ இடத்திலேயே பலியானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்புப் பகுதியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை தரப்பின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.