பொது கழிப்பறைக்கு கக்கன், அண்ணா பெயர் - சர்ச்சையில் கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி 95 வது வார்டுக்குட்பட்ட , அண்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடம் உள்ளது. அண்மையில் அந்தக் கழிப்பிடம் புனரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. இந்நிலையில், கழிப்பறையின் முன்பக்கச் சுவரில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாதுரையின் பெயரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்த கக்கன் பெயரும் எழுதப்பட்டுள்ளது. நூற்றாண்டு கடந்து போற்றப்படும் அரசியல் தலைவர்களின் பெயரை கழிப்பறைக்கு சூட்டியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கண்டன அறிக்கையில், "கக்கன், அண்ணா போன்ற உயர்ந்த தலைவர்களின் பெயர் கழிப்பறைக்கு வைக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. எவ்வளவோ திட்டங்களுக்கு அவர்களின் பெயர் வைக்காமல் கழிப்பறைக்கு அவர்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது உள்நோக்குமாக பார்க்கப்படுகிறது. உடனடியாக தமிழக முதல்வர் இதில் தலையிட்டு அவர்களின் பெயர்களை அதிலிருந்து நீக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரனிடம் விளக்கம் கேட்டபோது, "15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. தற்போது இந்த கட்டடத்துக்கு புதிதாக வர்ணம் மட்டுமே பூசப்பட்டது. பெயர்கள் தற்போது எழுதப்படவில்லை." என்று கூறியிருக்கிறார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், கழிப்பறையில் தலைவர்கள் பெயர் எழுதபட்டு இருந்ததை மாநகராட்சி நிர்வாகம் அழித்துள்ளது.