செய்திகள் :

Travel Contest : சிற்றோடைகள், அடர்ந்து வளர்ந்த காடுகள், அருவிகள்..! - உத்தரகாசி அற்புதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

2019 செப்டம்பர் 24-ஆம் தேதி மாலை டெல்லிக்கு விமானம் மூலம் சென்றடைந்தோம். தில்லியிலிருந்து ஹரித்வார் சுமார் 5 மணி நேர பயணம். ஹரித்வாரில் காஞ்சி சங்கர மட மேலாளர் திரு ரவிசங்கர் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார்.

நாங்கள் ஹரித்வாரை அடைந்த போது விடியற்காலை 4.30 மணி இருக்கும். கங்கையில் நீராடி, மற்ற பூஜைகளை முடித்துக் கொண்டு, காலை 8 மணிக்கு உத்தரகாசியை நோக்கி டெம்போவில் பயணத்தை தொடங்கினோம். வழிநெடுகிலும் காடுகள், மலைத்தொடர்கள், மேக மூட்டங்கள் என இயற்கையின் கைவண்ணத்தை ரசித்தபடியே பயணித்தோம்.

உத்தரகாசி சாலை

உத்தரகாசி

உத்தரகாசி ஹரித்வாரில் இருந்து சுமார் 210 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. உயர்ந்த மலைகளின் மீதேறி வளைவு நெளிவான சாலைகளில் பயணித்து செல்ல வேண்டும். வழி நெடுகிலும் பச்சைப் பசேல் என காடுகளும், அருவிகளும், சிற்றோடைகளும் காணப்படுகின்றன.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பயணித்து ஆன்மீக பிரயாணக் கட்டுரைகள் எழுதினார் திரு. பரணீதரன். அவர் அன்று பார்த்து எழுதிய காட்சிகளையே தான் நாங்களும் பார்த்தோம்.

சின்னஞ்சிறு மலைப்பாதையில் எங்கள் டெம்போ பயணித்தது. சிறு கிராமங்கள், தங்கும் விடுதிகள், நீண்ட பாலங்கள், பெரிய பள்ளத்தாக்குகள் என பலவற்றையும் பார்த்தபடியே ஏழு மணி நேரம் பிரயாணம் செய்தோம். அதுவரை எங்களுக்கு பனி கண்களில் தென்படவில்லை. இமயம் என்றாலே பனி என எண்ணுபவர்கள் உண்டு.

பாகீரதி வரவேற்பு தர நாங்கள் உத்தரகாசிக்குள் நுழைந்தோம்.

பாகீரதி - கோமுக்கில் தோன்றி, கங்கோத்ரியை கடந்து, உத்தரகாசியின் வழியாக பயணித்து, தேவப்பிரயாகையில் அலக்நந்தாவுடன் சங்கமிக்கும் நதி. சங்கமித்த பின்னர் கங்கை என்ற பெயரில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் வழியாக அலகாபாத் மற்றும் காசி போன்ற தலங்களுக்கு பாய்ந்து செல்கிறாள்.

பாகீரதி ஆர்ப்பரித்து பாயும் புண்ணிய நதிகளில் ஒன்று. உத்தரகாசியில் பாகீரதி பரந்து விரிந்து பயணிக்கிறாள். அவ்வூரில் பாகீரதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. என்ன ஒரு வேகம் அவளுக்கு? அவளது வேகத்தை அடக்கத்தானே சிவபெருமானே ஜடாதரனாய் வந்தார்? என்ன ஒரு தெளிவு? கரைக்கு பல அடி தூரத்தில் இருந்தே அவள் பாய்ந்து செல்லும் சத்தம் தெளிவாக கேட்கிறது.

ஊரையே அடித்துச் செல்லும் அளவிற்கு அவள் வேகம். அருகில் சென்று கால் வைத்து பார்க்கலாமா? என்ன ஒரு குளிர்ச்சி!

பாகீரதி

இமயமலையே என் பிறப்பிடம் எனக்குளிர்ச்சியூட்டி நம்மை சிலிர்க்க வைக்கிறாள். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும் வா என்னோடு என்று நம்மையும் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று விடுவாள்.

பாதுகாப்புக்காக உள்ள கைப்பிடிகளை பிடித்துக்கொண்டே படிக்கட்டுகளில் மேலும் இறங்குகிறோம்.

அட! ஜில்லிப்பு தாங்க முடியவில்லை. ஐஸ் வாட்டரை விட பல மடங்கு குளிர்ச்சி. விட்டால் கால்கள் உறைந்து போய்விடும். லேசான மழையை பொருட்படுத்தாது பாகீரதியின் அழகை ரசித்தோம். மாலை நேரத்தில் விளக்கொளியில் அவளை தரிசிக்கிறோம்.

உத்தரகாசி

காசியில் உள்ளது போன்றே உத்தரகாசியிலும் விஸ்வநாதருக்கு ஒரு சிறு கோயிலும் ஒரு மணிகர்ணிகா காட்-ம் இருக்கின்றன.

குளிர் அதிகரிக்கிறது. இருள் முழுமையாக சூழ்ந்து விட்டது. பாகீரதி எதையும் சட்டை செய்யாமல் பாய்ந்து செல்கிறாள். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு நாங்கள் பாகீரதியை தரிசித்த வண்ணம் இருந்தோம்.

நாளை கங்கோத்ரியில் சந்திப்போம் என விடைபெற்றோம்.

கேதார்நாத்-ஐ நோக்கி

செப்டம்பர் 26 விடியற்காலை 5 மணிக்கு நாங்கள் கங்கோத்ரிக்கு புறப்பட்டோம். உத்தரகாசியில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் கங்கோத்ரி உள்ளது. கடினமான மலைப் பிரதேசத்தில் பயணிக்க வேண்டும் குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது ஆகும் என எங்கள் டெம்போ டிரைவர் கூறியிருந்தார்.

விடிவதற்குள் கிளம்பினால் மாலைக்குள் உத்தரகாசிக்கு திரும்பி, அங்கிருந்து கேதார்நாத் நோக்கி பயணத்தை தொடங்குவது என திட்டம் திட்டி இருந்தோம்.

ரம்மியமான காலைப்பொழுது, மேகமூட்டம், காடுகள், பாகீரதி என அனைத்தும் ஒன்று கூடி எங்கள் யாத்திரைக்கு துணை நிற்பதாகவே நினைத்தோம்.

கரடு முரடான சாலைகளில் எங்கள் Tempo செல்ல தொடங்கியது. சூரிய உதய காலத்தில் பாகீரதியின் அழகு, அவளது வேகம், தெளிவு என பலவற்றையும் ரசித்துக்கொண்டே சென்றோம்.

கங்கோத்ரியில் என்ன பார்க்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என திரு. பரணீதரனின் புத்தகத்தை படித்த வண்ணம் இருந்தேன்.

உத்தரகாசி ஊர் எல்லையை கடந்து கொஞ்சம் தூரம் சென்றிருப்போம். கங்கோத்ரி சாலையில் வனத்துறை அதிகாரிகள் சாலையை அடைத்து, மேலே செல்ல முடியாது என கூறிவிட்டனர்.

மணி அப்பொழுது காலை 6:30. எனக்குத்தெரிந்த ஹிந்தியில் அலுவலரிடம் பேசிப் பார்த்தேன்.

மலைச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் மேற்கொண்டு பிரயாணிப்பது பேராபத்து என்றும் கூறினார்.

“சற்று பொறுத்துப்பாருங்கள். சாலையை சரி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நேரத்தில் நிலைமை சரியானால், சாலை திறக்கப்படும்”, என்று கூறினார்.

‘சரி! கொஞ்சம் நேரம் ஆகட்டும். இன்னும் வாகன நெரிசல் எதுவும் ஏற்படவில்லை. பாகீரதியை ரசிப்போம்’ என எண்ணி எங்கள் tempoவை திருப்பிக் கொண்டு அரை கிலோ மீட்டர் பின்னோக்கி வந்தோம்.

ஆற்றங்கரை ஓரமாக இறங்கி நடக்க சிறியதொரு பாதை இருந்தது. ஒய்யாரியாக பாகீரதி பாய்ந்து செல்ல, நாங்களும் பாறைகளைக் கடந்து ஜம்மென்று ஆற்றில் இறங்கி கால் பதித்தோம்.

கண்ணில் பட்ட கோணத்தில் எல்லாம் புகைப்படம்  எடுத்துக் கொண்டோம்.  மணி 7:30  ஆனது.  அருகிலிருந்த  உணவகத்தில் காலை  சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக யாத்ரிகர்கள் வர தொடங்கினர்.

‘நிலச்சரிவு அதிகமாகவே உள்ளதாம், இன்னும் நேரமாகலாம்’ என செய்தி கிடைத்தது. நேரம் சென்று கொண்டேயிருந்தது. எங்களுக்கு கவலையாக இருந்தது.

மணி 8:30.  மேற்கொண்டு செல்ல முடியுமா?அதற்கு சாலை திறக்க வேண்டுமே?  அப்படியே சென்றாலும் நேரத்திற்கு திரும்பினால்தானே  குப்த காசிக்குச் செல்ல சரியாக இருக்கும்? மீண்டும் வனத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இன்னும் பாதை சீராகவில்லை என்றார்கள்.

  மணி 10:30. நிலைமை மாறவே இல்லை. “சரி.  இனி திட்டத்தை மாற்ற வேண்டியது தான்.  இதற்கு மேல் கங்கோத்ரிக்குச்  சென்றாலும், இரவு நேரத்தில் திரும்புவது  கடினம் தான்.  கேதார்நாத்துக்கு கிளம்பலாம்”,  என முடிவு செய்தோம்.

கங்கோத்ரியை காண வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அங்கே சென்று யாரிடமாவது கோமுக் யாத்திரை விவரங்களை சேகரிக்க எண்ணியிருந்தேன்.  பரவாயில்லை.  இது முதல் பயணம் தான். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என மனதை  தேற்றிக்கொண்டேன். உத்தரகாசிக்கு திரும்பினோம்.   

எங்கள் உடைமைகளை  எடுத்து வைத்துக் கொண்டு,  மதிய உணவையும் முடித்துக்கொண்டோம். நான் மட்டும் விஸ்வநாதர் கோயில் அருகே சென்று பாகீரதியை தரிசித்தேன். தேவையான அளவில் பாகீரதியின் நீரை எடுத்துக் கொண்டேன்.  கேதார்நாத்தில் அந்த நீருக்கு வேலை இருக்கிறது!


‘என்னால் உன்னை கங்கோத்ரியில் தரிசிக்க முடியவில்லை.  எனினும் அடுத்த முறையாவது வாய்ப்பு கொடு. எப்படியும் உன்னை தேவப்பிரயாகையில்  பார்ப்பேன்.  கங்கோத்ரியின்  பயணம் தான் ஈடேறவில்லை,  கேதார் மற்றும் பத்ரியையாவது நன்றாக தரிசிக்க அனுமதி தருவாயாக’ என பிராத்தனை செய்து விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பினேன்.

 பயணக்குழுவினர்  தயார். Tempo   குப்தகாசியை நோக்கி  பிரியாணிக்கத் தொடங்கியது. 

மலைகளின் உயரங்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. குறுகிய மலைப்பாதையில் எங்கள் tempo வளைந்து செல்கிறது. நிறையவே  சிற்றோடைகள்,  பாலங்கள்,  அடர்ந்து வளர்ந்து காடுகள்,  அருவிகள்  என பல காட்சிகளை தரிசித்துக் கொண்டே பிரயாணித்தோம்.

ஒரு மிகப்பெரிய   மலையின்  உச்சியில் பிரயாணம்.  கன மழை பெய்தது.  மீண்டும் கவலைப்படத் தொடங்கினோம். பயணக் குழுவினருக்கு கொஞ்சம் போர் அடிக்கவும் ஆரம்பித்து விட்டது.

இரவு 7.00 மணி. சாலையின் நடுவே ஒரு பாறாங்கல் சரிந்து விழுந்து சாலையை மறைத்துக்கொண்டிருந்தது. எங்களுக்கு முன்னால் பாறை. பின்னால் வரிசையாக வண்டிகள். ஏதோ  பயில்வான்கள் என்ற நினைப்பில் 20 பேர் ஒன்று சேர்ந்து அந்த பாறையை நகர்த்த முயன்றோம்.

‘   ‘நீங்களெல்லாம் எம்மாத்திரம்’  என அந்தப்பாறை அசையாமல் நின்றது.  மீண்டும் பாறையை நகர்த்த முயற்சித்தோம். ஊரிலுள்ள கடவுளர் பெயரை எல்லாம் சொல்லி ஆளாளுக்கு வசதிப்பட்ட  விதத்தில்  கைகோர்த்து பாறையை நகர்த்த முயற்சித்தோம்.

‘வேறு ஏதாவது செய்து பார்க்கவும்’  என அந்தப் பாறை பிடித்து வைத்த பாறாங்கல்லாய் உட்கார்ந்த இடத்திலேயே இருந்தது.

இரவு 7.30 மணி.   அவசர எண்ணை தொடர்பு கொண்டோம்.  ‘அந்தப் பகுதி எங்கள் கண்ட்ரோலில் இல்லை’ என்று சொன்ன அதிகாரிகள் வேறு ஒரு எண்ணைத் தந்தார்கள். அந்த என்னை தொடர்பு கொண்டபோது, ‘கொஞ்சம் நேரம் கழித்து போக்ரேன் அனுப்புவதாக’ சொன்னார்கள்.  அவ்வழியே சென்ற  உள்ளூர் வாசிகள், ஊர் தலைவரை பார்த்து மேற்கொண்டு ஏதாவது செய்வதாக சொன்னார்கள்.  எங்கள் சாலையில் வலதுபுறம் பள்ளத்தாக்கு. 

இரவு 8.00 மணி. சாலையின் இடப்புறம் உள்ள காட்டுச் செடிகளை உடைத்து,   தற்காலிகமாக ஒரு சாலை அமைத்துக் கொண்டு “Ghansali” யை சென்றடைந்தோம்.

Ghansali - பிளங்கனா நதியோரம் அமைந்திருக்கும் சிற்றூர்.  சுமாரான வசதிகள் நிறைந்த ஒரு விடுதியில்  தங்கிக் கொண்டோம். அங்கே உணவருந்தியபோது இரவு 10 மணி.


செப்டம்பர் 27 -  காலை 7 மணிக்கு Ghansaliலியில்  இருந்து குப்தகாசியை நோக்கி பயணம் தொடங்கியது.  அடுத்து மூன்று மணி நேரத்திற்குள் நாங்கள் மந்தாகினியை தரிசிக்க தொடங்கினோம். 


மந்தாகினி பச்சை நிறத்தில் தோற்றமளித்தாள்.  பாகீரதிக்கு ஈடான வேகம். ‘மந்தாகினி’ என்ற சொல்லுக்கு  ‘மந்தமாக ( அ)  நிதானமாக செல்லும் நதி’ என்று பொருள்.


எனினும் ‘நான் கேதாரநாதரின் திருவடியில் பாய்பவள்.  எனக்கு நிதானமாக செல்லத்தெரியாது’  எனக்கூறும்  விதத்தில் ருத்ரபிரயாகையை நோக்கி செல்கிறாள்.  எங்கள் tempo  அகஸ்த்ய முனி என்ற ஊரைக் கடந்து பல போக்குவரத்து நெரிசல்களைக் கடந்து பகல் 12:30  மணிக்கு குப்தகாசியை அடைந்தது.


குப்தகாசி என்றால் ‘ரகசிய  காசி’ என்று பொருள். கேதார்நாத் இங்கிருந்து சுமார் 48 கி.மீ தூரத்தில் உள்ளது.  கேதார யாத்திரை முறைப்படி  இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. ஓர் அளவிற்கு வசதியான ஊர் தான்.

 குப்தகாசியில் எங்கள் விடுதியில் தங்கிக்கொண்டோம். மாலைப்பொழுதில் ஓய்வெடுத்தோம். 


செப்டம்பர் 28 குப்தகாசியில் உள்ள  விஸ்வநாதர்  கோவிலுக்கு சென்றோம்.  சின்னஞ்சிறு கோவில். கோயிலை வலம் வருகிறோம். சிறியதொரு கருடன் சந்நிதியையும் உடைந்த நிலையில் வேறு  சில சிலைகளையும் கண்டோம்.


பாண்டவர்களை சோதிக்க வேண்டி சிவபெருமான் காசியிலிருந்து உத்தரகாசிக்கு வந்ததாகவும்,  அங்கேயும்  பாண்டவர்கள் வந்துவிட,  குப்தகாசிக்கு வந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.   குப்தகாசியில் விஸ்வநாதர் கோயில் வளாகத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், நகுல சகதேவர்களின்  சின்னஞ்சிறு சிலைகள்,  உள்ளன. 

இதற்கும் ஒரு கதையை சொன்னார் அங்கே இருந்த ஒரு கோயில் சிப்பந்தி.  சிவபெருமானின் தரிசனம் கிடைக்காததால்,  பாண்டவர்களில் நகுல சகதேவர்கள் பார்வதி தேவியை நோக்கி தவமியற்றுகின்றனர். அவர்கள் தவத்தில் திருப்தி அடைந்த பார்வதி தேவி,  அவர்கள் வேண்டுதல் படி, சிவபெருமானிடம் பாண்டவர்களுக்கு தரிசனம் தரும்படி கூறினாராம். அப்படியும் சிவபெருமான் இணங்காமல் அர்த்தநாரீயாக மட்டும் தரிசனம் தந்தாராம்.


விஸ்வநாதர்  கோயிலின் முன்பு  மணிகர்ணிகா என்ற சிறு குளம் உள்ளது.  ஒருபுறம் பசுவின் முகத்திலிருந்தும் மறுபுறம் யானை முகத்திலிருந்தும் நீர் வெளியேறுகிறது.  அடுத்ததாக,  எங்கள் திட்டப்படியே குப்தாகாசியிலுள்ள ஹெலிபேட் சென்றோம்.  குப்தகாசியிலுருந்து கேதார்நாத் செல்ல ஹெலிகாப்டரில் சுமார் 10 நிமிட பயணம். சாலை வழியே சென்றால் Phata  மற்றும் Sersiயிலும் ஹெலிபேட் வசதிகள் உண்டு.

GMVN இணையதளம் மூலம் ஹெலிகாப்டர் பயணத்தை நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம். அனைவரையும் ஒரே குழுவாக அழைத்துச் செல்லாமல் தனித்தனி பிரிவுகளில் தான் ஹெலிகாப்டரில் அழைத்துச்சென்றார்கள்.


காலை 10 மணி  சுமாருக்கே  ஹெலிபேடை அடைந்தோம்.  எனினும் 2 மணிக்கு மேல் தான் எங்கள் முறை வந்தது.  அதிலும் 4 மணிக்குத்தான் கடைசி ஆளாக நான்  கேதார் சென்றடைய முடிந்தது.


ஹெலிகாப்டர் பயணம் மறக்க முடியாத அனுபவம். 

 சுமார் 1000 அடி  உயரத்தில் பறந்தோம்.  அந்த உயரத்திலிருந்து பார்க்கும் பொழுது எல்லாமே சிறியதாகத்தான் தோன்றியது.  இரண்டு மலைகளுக்கு நடுவே ஹெலிகாப்டர் பறந்தது. கேதாரை நெருங்கினோம், குளிர் அதிகரிக்கத்தொடங்கியது.  உடல் நடுங்கியது.  Pilot ஒரு கருவியை இயக்கினார்.  வெளிப்புற வெப்பம் 4°C எனக்காட்டியது அந்த கருவி.


பனிச்சிகரங்கள் தெரியத்தொடங்கின. திடீரென்று வெளிச்சம் குறைந்தது.  எங்கும் பனிமூட்டமாக தென்பட்டது. இதோ கேதார்நாத் ஊர் தெரிகிறது.  ஹெலிகாப்டர் கீழே இறங்குகிறது.  நான் ஆசை ஆசையாய் பார்க்க நினைத்த கேதாரம்! கேதார்நாத் ஹெலிபேடிலிருந்து இருந்த சுமார் 10 நிமிடம் நடை பயணத்தில் கேதாரநாதரின் திருக்கோவில்.

என் கண்களில் ஆனந்தக் கண்ணீர். உள்ளம் ஆர்ப்பரித்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோயிலை நோக்கி நடக்க தொடங்கினேன்.  மந்தாகினி ‘வருக! வருக!’ என வரவேற்க, கேதார்நாத் கோயிலை நோக்கி சென்றேன்,  கண்டறியாதன கண்டேன்!

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel contest: இரண்டரை நாள்களில் கர்நாடக மாநில முக்கிய கோவில்கள் யாத்திரை – முதல் பாகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: கடல் கன்னியம்மனுக்கு ஓர் திருவிழா!; ஆச்சரியமூட்டும் மாமல்லபுரம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : `புது உலகத்துக்குள் வந்து விட்டது போன்ற உணர்வு!' - இத்தாலி கேப்ரி ஐலண்ட் விசிட்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க

ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? சூப்பர் பட்ஜெட் spot!

கோடைக்காலம் தொடங்கிவிட்டது, பலரும் இந்த சம்மருக்கு எங்கு சுற்றுலா செல்லலாம் என்று பிளான் செய்து கொண்டிருப்பார்கள். குறைந்த விலையில் நமக்கு அருகே இருக்கும் அழகான சுற்றுலா தலங்களை பார்க்க வாய்ப்பு கிடைத... மேலும் பார்க்க

Travel contest: 'த்ரில்லிங்கான வாகமன் ஜீப் சவாரி' - முதல் சுற்றுலா அனுபவத்தைப் பகிரும் பள்ளி மாணவி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: வால்பாறை - சாலக்குடி சாலை; காட்டுக்குள் சேட்டனின் சாயா; அதிரப்பள்ளி சுற்றுலா அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க