இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!
Royal Enfield: `12 மாசத்தில் 12 புது பைக்' எலெக்ட்ரிக்கும் இருக்கு; 4-ம் தேதி அறிமுகம்
வரும் மாதங்களில் தொடர்ச்சியாக பைக்குகளைக் களம் இறக்குவதில் செம பிஸியாக இருக்கப் போகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இதில் 12 பைக்குகள் பற்றிய குறுந்தகவல்கள் நம் தகவலுக்கு வந்திருக்கின்றன. அது என்னனு பார்க்கலாம்! ஆனால், படங்கள் மட்டும் மாதிரிதான்! சாரி!
நவம்பர் 5-ம் தேதி இன்டர்செப்டர் 650 சிசி பைக்கில் ஒரு வேரியன்ட்டைக் களம் இறக்கப் போகிறார்கள். அதன் பெயர் இன்டர்செப்டர் பியர் 650 (Interceptor Bear 650). ராயல் என்ஃபீல்டின் முதல் ஸ்க்ராம்ப்ளர் வகை பைக் இதுவாக இருக்கும். அதேபோல் ராயல் என்ஃபீல்டின் எடை குறைந்த பைக்காகவும் இது இருக்கப் போகிறது. இந்த 650 ப்ளாட்ஃபார்மில்தான் இது ரெடியானாலும், சில கலர் ஸ்கீம்களில் விளையாடப் போகிறது இந்நிறுவனம்.
முன் பக்கம் USD ஃபோர்க்குகள் இருக்கும். இப்போதுள்ள இன்டர்செப்டரில் சாதா டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள்தான். TFT ஸ்க்ரீன் கொண்ட ட்ரிப்பர் டேஷ், சிங்கிள் எக்ஸாஸ்ட் பைப், டூயல் பர்ப்பஸ் டயர்கள் என்று கலக்க வருகிறது பியர் 650.
பியர் பைக்கோடு சேர்ந்து - கான்டினென்ட்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 ட்வின் பைக்குகளும் ஃபேஸ்லிஃப்ட் ஆக இருக்கின்றன. 600 சிசி பைக்கில் இவற்றுக்கு நல்ல மார்க்கெட் ஷேர் இருக்கிறது. அதனால் நிச்சயம் இந்த ட்வின் பைக்குகளை மாற்றும் ராயல் என்ஃபீல்டு. டூயல் டிஸ்க் செட்அப்புடன் இவை வரும். வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுடன் இந்த ட்வின் பைக்குகள் டெஸ்ட் ரைடு செய்யப்பட்டுக் கொண்டிருப்பது அங்கங்கே வலைதளங்கில் அடிபடுகிறது.
அடுத்ததாக, க்ளாஸிக்கில் ஒரு 650 சிசி பைக்கைக் கொண்டு வரப் போகிறார்கள். கவர்ச்சிகரமான டூயல் டோன் ஆப்ஷனில் இது வரும். பாபர் ஸ்டைலில் சிங்கிள் சீட்டரும் இருக்கும்; சாதா க்ளாஸிக் ஸ்டைலில் பில்லியன் சீட் மாடலும் இருக்கும். 350-ல் சிங்கிள் எக்ஸாஸ்ட் பைப் இருந்தால், இதில் டபுள் எக்ஸாஸ்ட் பைப்கள் ‛டப் டுப்’ எனச் சத்தம் போடக் காத்திருக்கின்றன.
இதைப் போலவே 650-ல் ஒரு புல்லட்டையும் கொண்டு வரப் போகிறது ராயல் என்ஃபீல்டு. இந்த 2025-க்கு நடுவில் இது லாஞ்ச் ஆகலாம். 350 சிசி புல்லட்டின் பல அம்சங்கள் இதில் இருக்கும். RE-ன் புதிய ட்வின் சிலிண்டர் செட்அப் இதில் இருக்குமா என்று தெரியவில்லை.
அடுத்ததாக, ஹிமாலயன் பைக்கில் மட்டும் 650 சிசி இல்லையென்றால் எப்படி? ஆஃப்ரோடிங்குக்கு இணையாக, இதில் டூரிங்கும் பண்ணுவதற்கு ஏற்ப, இந்த 650 ஹிமாலயன் வரப் போகிறது. கவாஸாகி வெர்சிஸ், பெனெல்லி TRK 502, சுஸூகி வி-ஸ்ட்ரோம் போன்ற பைக்குகளுக்குப் போட்டியாக இது வரப் போகிறது. நம் ஊர் வெள்ளத்துக்கு ஏற்றபடி பயணிக்க, Upswept எக்ஸாஸ்ட் இதில் இருக்கும். மேலும் டூயல் பெட்டல் டிஸ்க்கும் இதில் வைக்கப் போகிறார்கள். க்ளாஸிக் 650-யைத் தொடர்ந்து இதுவும் 2025 மத்தியில் லாஞ்ச் ஆகலாம்.
ஹிமாலயன் பைக்கில் 450 சிசி-க்கு என்று இப்போதும் லவ்வர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் 450 சிசியில் ஒரு ஹிமாலயன் ராலி பைக்கும் வரப் போகிறது. இது இப்போதுள்ள ஹிமாலயன் பைக்கின் ஆஃப்ரோடு தன்மையைவிட இன்னும் ஆஃப்ரோடு அம்சங்களோடு வரப் போகிறது. ரியர் பேனலில் Rally என்கிற பேட்ஜ் இருக்கும். ராலி பைக் என்பதால் Knuckle Guard, ஹேண்டில்பார் ரைஸர், அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் செட்அப், மோனோ ஷாக் சஸ்பென்ஷன், அப்ஸ்வெப்ட் எக்ஸாஸ்ட் போன்றவை உண்டு. என்ன, இதிலும் ஸ்போக் வீல் என்பதால், பஞ்சர் பயமும் இருக்கிறது.
மீட்டியார் பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் ஒன்றும் 2025 ஆரம்பத்தில் வரக் காத்திருக்கிறது. மீட்டியார்தான் ராயல் என்ஃபீல்டின் 4-வது பெஸ்ட் செல்லிங் பைக். அதே எல்இடி ஹெட்லாம்ப், பைலட் லாம்ப், ட்ரிப்பர் பாட் நேவிகேஷன், 349 சிசி, சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் போன்றவற்றுடன் - இதில் எக்ஸ்ட்ரா கலர் ஸ்கீம்களைக் கொண்டு வரப் போகிறார்கள்.
இதைத் தொடர்ந்து புல்லட் 350 சிசியிலும் ஒரு ஃபேஸ்லிஃப்ட் வரக் காத்திருக்கிறது. புது சேஸியுடன், அப்கிரேட் செய்யப்பட்ட புது இன்ஜினுடன் இதை அடுத்த செப்டம்பர் மாதத்துக்குள் கொண்டு வரப் போகிறார்கள். போன முறைதான் டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் USB போர்ட் போன்றவை சேர்க்கப்பட்டன. இதிலும் அந்த வசதிகள் இருக்கும்.
‛நான் மட்டும் என்ன தொக்கா?’ என்று ஹன்ட்டர் பைக்கும் களத்தில் வரப் போகிறது. ஆம், ஹன்ட்டர் 350 சிசி பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வரப் போகிறது. இதுதான் இந்நிறுவனத்தின் இரண்டாவது செல்லிங் மோட்டார் சைக்கிள். இப்போதுள்ள ஹாலோஜன் லைட், புது ஹன்ட்டரில் எல்இடியாக மாறும். அதேபோல் இதன் ரைடு குவாலிட்டி பற்றிப் பலர் சொன்னதால், இதன் பின் பக்க சஸ்பென்ஷன் செட்அப்பையும் கொஞ்சம் ட்யூன் செய்யப் போகிறார்கள். மெட்ரோ வேரியன்ட்டுக்கு உட்பட்டுத்தான் இந்த மாற்றங்கள் இருக்கும். அதே 349 சிசி இன்ஜின்தான் இந்த ஹன்ட்டரிலும் இருக்கும்.
இனிமேல்தான் விஷயமே! ஆம், எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதை உறுதி செய்து விட்டது ராயல் என்ஃபீல்டு. அதைத் தொடர்ந்து RE-ன் முதல் எலெக்ட்ரிக் பைக் என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். Electrik 01 என்கிற கான்செப்ட் பைக் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தோம். இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட Flying Flea எனும் மோட்டார் சைக்கிளை லிங்க் செய்து இதைக் கொண்டு வரப் போகிறார்கள். வட்ட வடிவ ஹெட்லாம்ப்ஸ், சென்டர் கன்சோல் மற்றும் ரியர்வியூ மிரர்கள், க்ரோம் வேலைப்பாடுகள், Girder ஃபோர்க்குகள், கண்ணீர் வடிவ பெட்ரோல் டேங்க் என்று இதன் டிசைன் செம கிளாஸிக்காக இருக்கப் போகிறது.
புல்லட்டின் தோற்றம் மிஸ் ஆகிவிடக் கூடாது என்பதற்காக இதைப் பார்த்துப் பார்த்து டிசைன் செய்திருந்தாலும், கொஞ்சம் ஒல்லியான புல்லட் மாதிரி இருக்கிறது இந்த எலெக்ட்ரிக் புல்லட். குறுகலான டயர்கள் மற்றும் ஒல்லியான பாடி இதில் இருக்கும். நாளை மறுநாள் இதை அறிமுகப்படுத்த இருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
இதைத் தொடர்ந்து ஹிமாலயன் பைக்கிலும் ஒரு எலெக்ட்ரிக் வெர்ஷனைக் கொண்டு வரும் ஐடியாவில் இருக்கிறதாம் RE. இப்போதுதான் இதன் ப்ரோட்டோ டைப் ரெடியாகி இருப்பதால், இது தயாரிப்பு மாடலாக வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டுக்கு மேலேயே ஆகலாம் என்கிறார்கள்.