Hero Vida Z: அட்டகாச லுக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... நம்ம ஊருக்கு எப்போ வரும் தெரியுமா? | EICMA
EICMA ஷோவில் ஹோண்டா ஆக்டிவாவை அறிமுகப்படுத்தி அதகளம் செய்தது மாதிரி, ஹீரோ மோட்டோ கார்ப்பும் தன் பங்குக்கு விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் Z எனும் மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது.
இதை ‛இஸட்’ என்று சொல்லக்கூடாது. ‛ஸீ’ என்றே சொல்வது சரியாக இருக்கும்.
மினிமலிஸ்ட்டிக் டிசைனில் பார்ப்பதற்கே கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்போல் இருக்கிறது விடா Z. அகலமான சீட், பில்லியனருக்கு பேக்ரெஸ்ட், டிஎஃப்டி டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே என்று ஒரு வாட்டமான ஃபேமிலி ஸ்கூட்டராக மட்டுமில்லை; மாடர்ன் ஸ்கூட்டராகவும் ஜொலித்தது. பில்லியனருக்கு பேக்ரெஸ்ட்டெல்லாம் க்ரூஸர் பைக்குகளில் இருக்கும் அம்சம்.
ஆக்டிவாவைப்போலவே இதிலும் கழற்றி மாட்டிக் கொள்ளக்கூடிய பேட்டரி வசதி கொடுத்திருக்கிறார்கள். இதிலுள்ள PMSM (permanent magnet synchronous motor) ஒரு 125 சிசி ஸ்கூட்டரின் பெர்ஃபாமன்ஸைத் தரும்.
இது மாடுலர் ஆர்க்கிடெச்சர் எனும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. 2.2kWh மற்றும் 4.4kW என 2 பேட்டரி பேக்குகளையும் இந்த மோட்டார் சப்போர்ட் செய்யும். உங்கள் மொபைல் போனில் விடா ஆப்பை இன்ஸ்டால் செய்து கொண்டு சார்ஜிங், சர்வீஸ் முதல் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளலாம். கனெக்டிவிட்டி வசதிகளும் உண்டு. OTA (Over The Air) அப்டேட்டும் இருக்கிறது. வண்டி திருடுபோனால் அலெர்ட் செய்யும் ஜியோஃபென்சிங், இன்ஜின் இம்மொபைலைஸர் போன்ற அம்சங்கள் கொடுத்திருக்கிறார்கள்.
நிற்க! இப்போதைக்கு இந்த விடா Z மாடல் ஐரோப்பா மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகளில் விற்பனைக்கு வருமாம்! ‛அப்போ இந்தியாவுக்கு?’ என்கிற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, ‛அடுத்த ஆண்டு வந்தாலும் வரும்’ என்று சூசமாகச் சொல்லியிருக்கிறது ஹீரோ.