RapteeHV: `எலெக்ட்ரிக் கார் பிளக் மூலம் பைக் சார்ஜ்; புதுமைகள் பல கொண்ட T30’ - என்ன ஸ்பெஷல்?
RapteeHV T30 Electric Bike | Jayapradeep Vasudevan - Raptee.HV
எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களுக்கான மார்க்கெட் விரிவடைகிற சூழலில் புதிய ஸ்டார்ட்-அப்கள் புதுபுது சாத்தியங்களோடு களமிறங்குகின்றன. அவற்றில் எலெக்ட்ரிக் பைக் இண்டஸ்ட்ரி ஒட்டுமொத்தமாக சந்திக்கும் சவால்களை கையாளும் வகையில் அறிமுகமாகும் புது அறிமுகங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
சென்னையை மையமாக கொண்ட RapteeHV தயாரிப்பில் உருவாகியுள்ள T30 பைக், எலெக்ட்ரிக் கார் டிஎன்ஏவை பைக்கில் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த எலெக்ட்ரிக் பைக் உருவாக்கம் குறித்து அந்த நிறுவனத்தின் Chief Business Officer ஜெயபிரதீப் வாசுதேவனிடம் பேசினோம்.
``எலெக்ட்ரிக் கார் காம்போனண்ட்ஸ் பைக்கில் பயன்படுத்தும் ஐடியா எங்க இருந்து ஆரம்பிச்சது?"
``எம்ஐடி குரோம்பேட்டை கல்லூரியில் படித்த மூவரும் என்.ஐ.டி மாணவர் ஒருவருமாக சேர்ந்து தொடங்கிய நிறுவனம் இது. சரியாக இப்போது ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நிறுவனர்களில் ஒருவரான தினேஷ், அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்த கையோடு டெஸ்லாவில் பணியாற்றினார். அப்போது உருவானதுதான் இந்த ஐடியா.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 10 ஆண்டுகளாக இங்கிருக்கிறபோதும் அண்டர் பவர், ஸ்லோ ஸ்பீட், பேட்டரி லைப் இவற்றில் சிக்கல் இருந்தது. இதனை மாற்றவும் தற்போதைய ஐசி இன்ஜின் பயனர்களுக்கு ஒரு அப்கிரேட் ஆகவும் இதனை உருவாக்க முனைந்தார்கள். ஹை-வோல்டேஜ் டெக்னாலஜி என இதனை சொல்வோம். கார்களில் இந்த தொழில்நுட்பம் உண்டு. அவற்றின் கம்போனண்ட்ஸ்களை பைக்கில் பயன்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. அதனாலேயே ஒரு முழு வடிவாக இந்த பைக் கொண்டுவருவதற்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டது."
`என்ன மாதிரியான சிக்கல்கள் இருந்தன?'
`பொதுவாக கார் காம்போனண்ட்ஸ் காஸ்ட்லியானவை. அதனை பைக்குக்கு பயன்படுத்தும்போது பைக்கின் காஸ்ட் என்பது மிக அதிகமாக இருக்கும். ஏற்கெனவெ சந்தையில் இருக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்படும் பிஎம்எஸ், மோட்டர் கண்ட்ரோலர் போன்றவை வெண்டர்களிடம் இருந்து எளிதாக பெற்று பைக் கம்போனண்ட் ஆக பயன்படுத்த முடியும். ஆனால் புதிய வடிவமைப்பு என்று போகும்போது அதற்கான காலம் எடுக்கும். அதனை சிறப்பாக செய்ததாலேயே ARAI (Automotive Research Association of India) அமைப்பின் கிராண்ட் பெற்ற சில ஸ்டார்ட் அப்களில் நாங்களும் ஒருவர்."
``எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதே மக்கள் மத்தியில் இரண்டாவது வாய்ப்பாகதான் பார்க்கப்படுகிறது. எல்லோரிடமும் ஒரு நார்மல் பைக் இருக்கும், வீட்டு உபயோகத்துக்கு ஸ்கூட்டர் வைத்திருப்பார்கள். உங்களை இந்த சந்தையில் எங்கு பொருத்த முடியும் என நினைக்கிறார்கள்?"
``இந்தியாவை பொறுத்த வரை பைக் தான் பெரிய மார்க்கெட். ஐசி இன்ஜின் பைக்குகளுக்கு மாற்றாக அல்லாமல் அடுத்த அப்கிரேடாக T30 பைக்கை பொருத்த விரும்பினோம். அதனை சாத்தியமாக்கியுள்ளோம். 22 கிலோவாட் பேட்டரி திறனால் 30 ஹெச்.பி அளவுக்கு பவர் உற்பத்தி செய்ய இயலும். 250 சிசி முதல் 300 சிசி வரையிலான வழக்கமான ஐசி இன்ஜின் பைக்குகள் என்ன விலை வருமோ அந்தளவிலேயே இருக்க வேண்டும் என ரூபாய் 2.39 லட்சம் என தீர்மானித்தோம். இது ஐசி பைக்கின் ஆன் ரோடு விலையை விட குறைவு, பியூயல், சர்வீஸ் உள்ளிடவற்றில் மிச்சமாகும் தொகை கஸ்டமர்ஸுக்கு சேவிங்ஸ் தான். இப்படியான செலவினங்கள் குறைவதும் சேமிப்பும் மிக குறைந்த போட்டியாளர்கள் உள்ள சந்தையில் எங்களுக்கு முக்கியமான இடத்தை ஏற்படுத்தி தரும் என நம்புகிறோம்."
``உங்களின் இன்னொரு அறிவிப்பு- வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவது இந்த ஐடியா எப்படி வந்தது?"
``மெக்கானிக்கல் அஸ்பெக்ட் பிரச்னைகளுக்கு மட்டுமே சர்வீஸ் செண்டர்களுக்கு போக வேண்டிய தேவை இருக்கும். எலெக்ட்ரிக் பைக்குகள் பொருத்தவரை அவற்றில் எலெக்ட்ரானிக் மற்றும் சாப்ட்வேர் பங்குதான் அதிகம். அவற்றில் சிக்கல் ஏற்பட்டால் அதனை வீட்டிலேயே சரி செய்ய முடியும். இதை மனதில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிட்டோம்."
``நிச்சயமாக. எங்களின் பிரதான குறிக்கோளாக அதுதான் இருந்தது. உதாரணத்திற்கு ஐசி பைக்கில் எந்த மாதிரியான பிக் அப், பைக் கண்ட்ரோல் இருந்ததோ அதனைவிட துல்லியமாக வேகமும், கட்டுப்பாடும் எலெக்ட்ரிக் பைக்கில் இருக்க வேண்டும். முன்னமே சொன்னதுபோல ஐசி இன்ஜின்களுக்கு ஒரு அப்கிரேட் ஆக தான் இதனை பார்க்கிறோம். 0-60 கிமீ வேகத்தை 3.5 நொடிகளில் T30 பைக் எட்டும். அதிகபட்ச வேகம் மணி நேரத்திற்கு 135 கிமீ ஆக உள்ளது. டெஸ்ட் டிரைவில் கஸ்டர்மஸ் இதனை உணர முடியும்."
``பொதுவாக இவி மோட்டர்சைக்கிள்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களான ரேஞ்ச் ஆன்சைட்டி, பேட்டரி டியூராபிளிட்டி.. இவற்றை எந்த மாதிரி கையாண்டுள்ளீர்கள்?"
``இதனோடு பிரைசிங் என்பதையும் சேர்த்துக்கலாம். ரேஞ்ச் ஆன்சைட்டி என்பதற்காகவே பப்ளிக் கார் சார்ஜிங் ஸ்டேஷனில் இந்த பைக்கை சார்ஜ் செய்துக்கொள்ளலாம். நீங்கள் சார்ஜிங் கேபிள் கொண்டுசெல்ல வேண்டியதில்லை. யூனிவர்சல் சார்ஜிங் இதற்கு பொருந்தும். வீட்டில் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஆகும், பப்ளிக் ஸ்டேஷன் எனில் அதே சார்ஜிங் 35 முதல் 40 நிமிடங்களில் ஏறிவிடும். ரேஞ்ச் 200 கிமீ கிடைக்கும். பேட்டரி லைப் நாங்கள் கணக்கிட்டுள்ளது 12 ஆண்டுகள். அதனாலேயே 8 ஆண்டுகளுக்கு வாரண்டி கொடுக்கிறோம். பிரைசிங் விஷயத்திலும் ஐசி இன்ஜின்களுக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால் சேமிப்பில் கூடுதலாக தரக்கூடியது."
ரேப்டார் டைனோசர் உருவமைப்பில் இன்ஸ்பயர் ஆன இந்த T30 எலெக்ட்ரிக் பைக் ரேப்டார் போலவே சிறகு இல்லாமல் சந்தையில் பறக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு ரைடு ரிவ்யூக்கு இப்போதே சம்மதம் வாங்கிக்கொண்டு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.