தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264
SIR Row : `குதிரைக்கு கொம்பு முளைக்குமா? - சிபிஐ(எம்) க.கனகராஜ் | களம் 02
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டாவது கட்டமாக நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரில் நடைபெற்றது முதல் கட்டம் என்கிறது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், அசாமில் மட்டும் இந்த திருத்த நடைமுறை இப்போது அறிவிக்கப்படவில்லை. இதை ஏதோ ஒரு மிகப்பெரிய பாஜகவின் கண்டுபிடிப்பு போல பேசிக்கொண்டிருக்கின்றனர்.
உண்மையில், 1951-ஆம் ஆண்டு தொடங்கி 2004-ஆம் ஆண்டு வரை 8 முறை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்துதல் நடைபெற்றிருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் இந்த ஒருமுறையில் மட்டுமே நடைபெறுவதில்லை. 18 வயது நிரம்பிய எந்தவொரு நபரும், எந்தவொரு நேரத்திலும் படிவம் 6 மூலம் தனது பெயரை இணையவழியின் மூலமாக இணைத்துக் கொள்ள முடியும். இரண்டாவதாக, ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது. மூன்றாவதாக, ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களின் போது சுருக்க வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, சிறப்பு தீவிர திருத்தம் மட்டுமே ஒரு வழி, அதை இப்போதிருக்கும் ஒன்றிய அரசாங்கம் செய்வது போல சொல்லிக்கொண்டிருப்பது ஒரு பம்மாத்து வேலையாகும்.

நிற்க, எதிர்க்கட்சிகள் கிட்டத்தட்ட ஒரே குரலில் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், முதல் கட்டமாக பீகாரில் இதை அறிவித்தபோது இந்த திருத்தமே வேண்டாம் என்று எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஜூன் 24ஆம் தேதி இதை அறிவிக்கும் போது கட்சிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பது மட்டுமே ஆரம்பக்கட்ட விமர்சனமாக இருந்தது. சிறப்பு திருத்தத்தை பொறுத்தமட்டில், இதர திருத்தங்கள் போல அல்லாமல் ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் புதிதாக படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களுடன் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும். அதில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையையோ அல்லது இந்திய அரசாங்கம் எல்லாவற்றுடனும் இணைக்க வேண்டும் என்று சொன்ன ஆதார் அட்டையோ ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.
2003க்கு பின்பாக பிறந்தவர்கள் தங்கள் தாய், தந்தையரின் பிறப்புச் சான்றிதழை இணைக்க வேண்டும், அதற்கு முன்பு பிறந்தவர்கள் பெற்றோர்களில் ஒருவருடைய பிறப்புச் சான்றிதழை இணைக்க வேண்டும் என்று சொன்னார்கள். இதுகுறித்து மிகக் கடுமையான விமர்சனங்களும், உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. பிறகு, ஆவணத்தை உடனே கொடுக்க வேண்டியதில்லை; படிவத்தை மட்டும் கொடுத்து விட்டு ஆவணத்தை எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.
உச்ச நீதிமன்றம் மூன்று, நான்கு முறை தலையிட்ட பிறகு தான் வேறுவழியின்றி 77 நாட்களுக்கு பிறகு ஆதாரும் ஒரு ஆவணம் என்று ஏற்றுக்கொண்டார்கள். 7.89 கோடி வாக்காளர்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியிருந்தார்கள். வரைவு வாக்காளர் பட்டியல் எந்திரங்களின் மூலம் தேடுவதற்கு வாய்ப்பற்ற முறையில் பதிவேற்றம் செய்திருந்தார்கள்.

யார் நீக்கப்பட்டார்கள், என்ன காரணத்திற்காக நீக்கப்பட்டார்கள் என்று சொல்ல முடியாது என்று தேர்தல் ஆணையம் சண்டித்தனம் செய்தது. நீதிமன்றம் தலையிட்ட பிறகு வெளியிட்டார்கள். வெளியிட்ட பட்டியலில் உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் செத்துப்போனவர்கள் என்று நீக்கியிருந்தார்கள். செத்துப்போனதாக சொல்லப்பட்டவர்களை யோகேந்திர யாதவ் நீதிமன்றத்தில் கொண்டு சென்று இவர்கள் தான் ‘செத்துப்போனவர்கள்’ என்று அடையாளம் காட்டினார். அங்கங்கு சில தவறுகள் நடப்பது சாத்தியம் தான் என்று சப்பைக் கட்டுக் கட்டினார்கள். தவறுகள் நடக்கும் என்பதால் தான் அது வரைவு வாக்காளர் பட்டியல், திருத்தத்திற்கு உட்பட்டது என்று தெரிந்த பிறகும் யாரை என்ன காரணத்திற்காக நீக்கினோம் என்று சொல்ல மறுப்பது உள்நோக்கத்துடன் கூடிய செயல்தானே.
நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை!
இதேபோன்று, பெண்கள் வாக்குகள் மிக அதிகமாக நீக்கப்பட்டிருக்கிறது. 2020 தேர்தலில் பெண் வாக்காளர்கள் 59.7 சதவிகிதம் பேர், ஆண் வாக்காளர்கள் 54.6 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். 2024 தேர்தலில் கிட்டத்தட்ட இதே அளவிற்கு அதாவது, பெண் வாக்காளர்களில் 59.45 சதவிகிதமும், ஆண் வாக்காளர்களில் 53 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். 1.1.2025 வாக்காளர் பட்டியல்களில் 1000 ஆண் வாக்காளர்களுக்கு 914 பெண் வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், எஸ்.ஐ.ஆர். நடந்து முடிந்த பிறகு நான்கு மாத காலத்திற்குள் இந்த விகிதம் 1000த்திற்கு 894 என்று குறைந்திருக்கிறது. அதாவது 1000க்கு 20 பெண் வாக்காளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.
இன்னும் சொல்வதென்றால் இறுதிவாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களில் 59.7 சதவிகிதம் பேர் பெண்கள். இது எப்படி சாத்தியம். இடப்பெயர்வு என்று ஒற்றை வார்த்தையில் கடந்து போகிறது தேர்தல் ஆணையம். மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது ஆண்கள் தான் அதிகமாக இடம்பெயர்வார்கள். அல்லது குடும்பத்தோடு இடம் பெயர்வார்கள். பெண்கள் மட்டும் இடம்பெயர்வது அத்தனை இலகுவாக நடப்பது கிடையாது.

இதுஒருபக்கம் இருக்க, பீகார் இறுதி வாக்காளர் பட்டியலில் 14.35 லட்சம் வாக்காளர்கள் இரண்டு இடங்களில் இரண்டு வெவ்வேறு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சில பெயர்களில் வயதில் உறவினர் பெயரில் சின்ன சின்ன வித்தியாசங்கள் உள்ளது. ஆனால், 3.42 லட்சம் இரண்டு அடையாள அட்டை வைத்திருக்கக் கூடியவர்களின் வாக்குகள் வெவ்வேறு இடத்தில் இருப்பதோடு பெயர், உறவினர் பெயர், வயது என்று மொத்தமும் முழுமையாக ஒத்துப்போகிறது. இது தான் தேர்தல் ஆணையம் சொல்லும் “சுத்திகரிக்கப்பட்ட” வாக்காளர் பட்டியல். இதை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்.
மேலும், 20 வாக்காளர்களும் அதற்கு அதிகமானவர்களும் அதாவது, 865 பேர் வரை ஒரே எண் கொண்ட வீட்டில் இருப்பது 650க்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றிருக்கிறது. இப்படி மொத்தமாக வாக்காளர்கள் ஒரே முகவரியில் இருப்பவர்களுடைய எண்ணிக்கை 1.32 கோடியைத் தாண்டுகிறது. இதுவும் தேர்தல் ஆணையம் சுத்திகரித்தப் பிறகு நடந்திருப்பது தான். எனவே, தேர்தல் ஆணையம் நடுநிலையோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தற்போது தமிழ்நாட்டில் ஒரு மாத காலத்திற்குள் இதை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. பீகாரில் கூட ஒரு மாத காலத்திற்குள் இதை முடிக்க முடியவில்லை என்பது அனுபவம். அந்த ஒரு மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் பூத் லெவல் ஆபிசர் மூன்று முறையாவாது செல்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 30 முறை சென்றாலும் அந்த குறிப்பிட்டுள்ள வீட்டில் உள்ள ஒருவர் அந்த ஒரு மாதமும் வீட்டில் இல்லை என்றால் என்ன செய்வது. இது விதண்டாவாதம் என்று கூட தோன்றும். இந்திய நாடு முழுவதும் சரி, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள் என்று நமது பிள்ளைகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்க்கச் செல்கிற பெற்றோர்கள் மாதக் கணக்கில் இருந்து விட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. அவர்களை என்ன செய்வது. இதுபோன்ற காரணங்களில் தான் கடந்த காலங்களில் இரண்டு ஆண்டுகள் வரை இந்த சிறப்பு தீவிர வாக்காளர் சேர்ப்பு நடந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது கூட 2002 அல்லது 2004 வாக்காளர் பட்டியலில் இருக்கும் விபரங்களை படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் போது இணைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. காரணம் கடைசியாக அந்த ஆண்டுகளில் தான் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. அதாவது 234 தொகுதிகளிலும் ஒரே மூச்சாக நடத்த முடியாமல் இரண்டு பகுதியாக நடத்தப்பட்டிருக்கிறது. அதனால் தான் அப்போது அதை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை. ஆனால், தற்போது ஒரு மாதத்திற்குள் முடியும் என்றால் இது சாத்தியப்படாது.

அடுத்ததாக, 1.7.1987 மற்றும் 2.12.2004க்கு இடையே இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்றோரில் யாராவது ஒருவரின் பிறந்த தேதி மற்றும் இடத்திற்கான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. குறிப்பிடப்பட்டுள்ள அந்த காலத்தில் பெரும்பாலும் வீடுகளிலேயே பிரசவங்கள் நடந்திருக்கும். எனவே, அதிகாரப்பூர்வமான பிறப்புச் சான்றிதழை பெறுவது மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கும். ஆனால், அதேசமயம், ஒரு ஆவணத்தை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்புக்கு சென்றுவிடுவதால், வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்கும் நிலைமைகளும் இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்றைய தினத்தில் தமிழ்நாட்டில் வாக்காளர்கள் என்று யாருமே கிடையாது. ஏனென்றால் நேற்று நள்ளிரவோடு பழைய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துவிட்டது. எனவே, ஒவ்வொரு வாக்காளரும் தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கும் எல்லா தீக்குளிப்புகளையும் தாண்டித்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டியிருக்கிறது.
தேர்தல் ஆணையம் இந்த காலத்தில் முற்றிலும் ஆளும் கட்சியின் கைப்பாவை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. தேர்தல் ஆணையர் நியமனத்திலிருந்து இது தொடங்குகிறது.
கடந்த காலத்தில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்கட்சி தலைவர் இருவரோடு இந்திய தலைமை நீதிபதியும் ஒரு உறுப்பினராக இருந்து தேர்ந்தெடுக்கும் ஒரு முறை இருந்தது. பாஜக அரசாங்கம் அதை மாற்றி பிரதமர், எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர் என்று மாற்றிவிட்டது. அதாவது, இந்த தேர்வு முறையின்படி பிரதமர் நினைக்கிற ஒருவரே தேர்தல் ஆணையராக வர முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலைமையற்று நடந்து கொள்கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும்.

ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை சந்தித்த போது வெளிநாட்டவர்களை பட்டியலிலிருந்து நீக்குவது ஒரு நோக்கம் என்று குறிப்பிட்டது. அதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக பீகாரில் தங்கியிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. இடையில் தேர்தல் ஆணைய தகவல் முதல் கட்டமாக பல வெளிநாட்டினரே கண்டுபிடித்திருப்பதாக பத்திரிகைச் செய்திகள் வெளியாகிருந்தன. ஆனால், தேர்தல் ஆணையம் இதை மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.
இந்நிலையில் பலரும் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரத்தில் வெளிநாட்டவர் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. உண்மையில், வெளிநாட்டவர் இருக்கிறார்களோ இல்லையோ, இருக்கிறார்கள் என்று தேர்தல் ஆணையம் நம்பியதாக எடுத்துக்கொண்டால் கூட பிரமாணப் பத்திரத்தில் அவர்கள் அதை சொல்லியிருப்பார்கள். ஆனால், சொல்லவில்லை என்பதிலிருந்தே ஊடுறுவல்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் என்றாலே இஸ்லாமியர் என்ற பொருளில் பாஜக செய்து வரும் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் கிளிப்பிள்ளை போல சொல்லியிருக்கிறது என்பது தான்.
இத்தனைக்கும் மேலாக எஸ்.ஐ.ஆர். சம்மந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த தீர்ப்பு வருவதற்கு கூட இவர்கள் காத்திருக்க விரும்பவில்லை. இதன் மூலமாகவும் தேர்தல் ஆணையம் நடுநிலை மட்டுமின்றி சட்டப்படியான நடவடிக்கைகளிலிருந்தும் தவறுகிறது என்று சொல்ல முடியும்.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் தேர்தல் ஆணையத்தின் இப்போதைய இந்த முயற்சி பீகாரைப் போன்றே குளறுபடிகளை உருவாக்குவதாகத்தான் இருக்கும். எனவே, இப்போதைக்கு வழக்கமான தேர்தல் பட்டியல் சரிபார்த்தல் என்பதை செய்து விட்டு உரிய கால அவகாசம் கொடுத்து சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் தயாரிப்பை நடத்துவதே நியாயமான வழிமுறையாக இருக்கும். தேர்தல் ஆணையம் நடுநிலையானதாக இருந்தால் அதைத்தான் செய்யும்.
அப்படி நடக்கலாம் என்று நம்புவது குதிரைக்கு கொம்பு முளைக்குமா? என்று காத்திருப்பதற்கு சமானம்.


















