Soori: `தொடங்கியது சூரியின் அடுத்த படம்' பிரசாந்த் பாண்டிராஜ் - 'மாமன்' பட சுவாரஸ்யங்கள்
'விடுதலை பார்ட் 1'க்குப் பிறகு வியக்க வைக்கும் அவதாரம் எடுத்து வருகிறார் சூரி. 'கொட்டுக்காளி', 'கருடன்' படங்களை அடுத்து வெற்றிமாறனின் 'விடுதலை 2' நாளை மறுதினம் வெளியாகிறது.
அதனையடுத்து கதையின் நாயகனாக 'மாமன்' என்ற படத்தில் நடிக்கிறார் சூரி. 'விலங்கு' வெப்சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ், 'மாமன்' படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என முன்பே நம் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். நேற்று முன்தினம் படப்பூஜையுடன், படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது.
'விலங்கு' வெப்சிரீஸை இயக்குவதற்கு முன்னரே, சூரியும், பிரசாந்த் பாண்டிராஜும் ஒரு படத்தில் இணைவது குறித்துப் பேசி வந்தனர். அதன் முயற்சி சில மாதங்களுக்கு முன்னர் தான் கைகூடி வந்திருக்கிறது. 'கருடன்' படத்தைத் தயாரித்த குமாரின் தயாரிப்பில் மீண்டும் இணைந்திருக்கிறார் சூரி. ''விடுதலை'யில் தொடங்கி, நடித்து முடித்திருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' வரைக்கும் எல்லாமே அழுத்தமான கதைகளாக இருந்திருக்கிறது.ஒரு குறிப்பிட்ட வகை ஆடியன்ஸ்களிடம் தான் தன்னைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இனி குடும்பம் குடும்பமாக வந்து பார்க்ககூடிய ஒரு படமாக கொடுக்க வேண்டும் என விரும்பினார் சூரி. அதற்கேற்ப பிரசாந்த் பாண்டிராஜ், சொன்ன கதையைக் கேட்டு, பெரிதும் மகிழ்ந்த சூரி, ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தொடக்கச் சொல்லிவிட்டார்.
இடையே ஹாட் ஸ்டாருக்காக விகடன் தயாரித்து வரும் 'லிங்கம்' வெப்சிரீஸின் `Show Runner' ஆகவும் பிரசாந்த் பாண்டிராஜ் இருந்து வந்தார். அதன் படப்பிடிப்பை முடித்த பின்னரே, 'மாமன்' படத்திற்குச் சென்றார் பிரசாந்த். இதன் படப்பிடிப்பு நேற்று திருச்சியில் எளிமையான முறையில் தொடங்கியது. படத்தின் நாயகன், நாயகி உள்பட பலரும் பூஜையில் பங்கேற்றனர்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜின் சொந்த ஊர் திருச்சி என்பதால், கதைக்களனையும் திருச்சி பின்னணியில் அமைத்துள்ளார். சூரியின் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'லப்பர் பந்து' சுவாசிகா நடிக்கிறார். 'விலங்கு', 'லவ்டுடே', 'மகாராஜா' ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். `கொட்டுக்காளி' எடிட்டர் கணேஷ் சிவா. ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இப்படி கதைக்கான டெக்னீஷியன்களோடு கைக்கோத்திருக்கிறார் பிரஷாந்த். திருச்சியில் தொடர்ந்து சில வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் சொல்கிறர்கள்.