அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, நாள்தோறும் முட்டை! புதுவை பட்ஜெட்டில் அறிவிப்...
Tesla : ஐரோப்பிய நாடுகளில் ‘டெஸ்லா’ வீழ்ச்சி... ட்ரம்ப் கூட்டுறவால் எலானுக்கு சரிவா? - ஓர் அலசல்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா நிறுவனம், அதன் உரிமையாளரான எலான் மஸ்க்கின் அரசியல் நடவடிக்கையால் ஐரோப்பிய சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.
ஐரோப்பிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (ACEA), ஜனவரி 2024 மற்றும் ஜனவரி 2025-க்கு இடையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம், ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டீன், நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்லா பதிவுகள் நேரடி ஒப்பீட்டில் 45% குறைந்துள்ளதாக தரவுகளுடன் சுட்டிக் காட்டியுள்ளது.
இது ஒரு கடுமையான சரிவாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்தப் பகுதிகளில் ஒட்டுமொத்த மின்சார வாகன விற்பனை 37% அதிகரித்துள்ள போதும், டெஸ்லாவின் இந்த கவலைக்குரிய சரிவு கவனிக்க வைக்கிறது.
இதே காலகட்டத்தில் தனித்தனி நாடுகளிலும் கூட டெஸ்லா விற்பனை சரிந்துள்ளது. முன்பு வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஐரோப்பாவின் மிகப் பெரிய மின்சார வாகன சந்தையான ஜெர்மனியில் டெஸ்லா விற்பனை கிட்டத்தட்ட 60% குறைந்துள்ளது, பிரான்ஸ் மற்றும் நார்வேயிலும் பெரிய சரிவுகள் காணப்படுகின்றன.

இந்த திடீர் சரிவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக டெஸ்லா நீண்டகாலமாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வரும், மலிவான வாகனத்தை இன்னும் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தவில்லை.
இன்னொரு பக்கம், சீனா நிறுவனங்களிடமிருந்தும் போட்டி தீவிரமடைந்து வருகிறது. ஜனவரி மாதத்தில், ACEA தரவுகளின்படி, சீன வாகன உற்பத்தியாளரான MG உள்ளிட்ட பிராண்டுகளின் விற்பனை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
`காரணம் எலான் மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைகளா?’
வணிகரீதியான இதுபோன்ற வழக்கமான காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட, டெஸ்லாவின் இந்த பின்னடைவுக்கு காரணம் எலான் மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைகளே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி 20 அன்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவியேற்பை தொடர்ந்து, எலான் மஸ்க் தனது உரையின் போது, இரண்டு முறை ஹிட்லரின் நாஜி சல்யூட் போன்று சைகை செய்த விதம் இணையத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பலரும் மஸ்க் ஒரு நாஜி ஆதரவாளர் என்று சாடினர்.

தொடர்ந்து ஜனவரி மாத இறுதியில் ஜெர்மனியின் வலதுசாரி AfD கட்சிக்கான பிரச்சார நிகழ்வில் ஆன்லைன் வழியாக தோன்றிய மஸ்க், “ஜெர்மனி கடந்த கால குற்ற உணர்ச்சியை கடந்து வரவேண்டும்” என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். இதனையடுத்து, போலந்து அரசாங்கம் டெஸ்லா வாகனங்களைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தது.
எலான் மஸ்க்கின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளை ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மிக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து உலகம் முழுவதும் டெஸ்லா பங்கு விலைகள் மூன்றில் ஒரு பங்கு குறைந்த நிலையில், ஐரோப்பாவில் டெஸ்லாவின் இந்த வீழ்ச்சி எலான் மஸ்க்குக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ப்ளூம்பெர்க் கணக்கீடுகளின்படி, டெஸ்லா கடந்த மாதம் ஜெர்மனியில் 1,277 புதிய கார்களை மட்டுமே விற்றது. இது ஜூலை 2021-க்குப் பிறகு மிகக் குறைந்த மாதாந்திர விற்பனையாகும். ஆகஸ்ட் 2022-க்குப் பிறகு பிரான்சில் விற்பனை 63% சரிந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் இந்த நிலையென்றால், அமெரிக்காவில் டெஸ்லாவின் மிகப் பெரிய சந்தையான கலிபோர்னியாவில் கூட, அதன் விற்பனை 2024-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் கிட்டத்தட்ட 8% மற்றும் அந்த ஆண்டில் 12% குறைந்துள்ளது.
`வலதுசாரி கொள்கையின் சின்னமாக டெஸ்லா’
ஒரு காலத்தில் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் பிராண்டாகவும், தெளிவான தாராளவாத ஆதரவைப் கொண்டதாகவும் இருந்த டெஸ்லா, தற்போது வலதுசாரி கொள்கையின் சின்னமாக பார்க்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மஸ்க் மீது அதிருப்தி அடைந்த மக்கள் சிலர் டெஸ்லா சார்ஜிங் ஸ்டேஷன்கள், ஷோரூம்கள் மற்றும் கார்களை சேதப்படுத்தி வருகின்றனர். நியூ ஆர்லியன்ஸில் ஒரு அணிவகுப்பின்போது நான்கு சைபர் டிரக்குகள் சேதப்படுத்தப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெஸ்லா கார் வைத்திருக்கும் சிலர் தங்கள் கார்களில், “மஸ்க் ஒரு பைத்தியக்காரர் என்று தெரியும் முன்னர் நான் இந்த காரை வாங்கினேன்” என்று ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது. இத்தாலியின் மிலன் நகரிலும் மஸ்க், ட்ரம்ப்புக்கு எதிராக டெஸ்லா ஷோரூமை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
2025-ஆம் ஆண்டில் டெஸ்லா கார்களின் உலகளாவிய விற்பனை அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் ஜனவரி மாத தொடக்கத்தில் கூறியிருந்தது. வால் ஸ்ட்ரீட் வல்லுநர்களும் டெஸ்லா இந்த ஆண்டு 2 மில்லியனுக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்யும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர். ஆனால், அந்த கணிப்புகள் எல்லாம் ஒரே மாதத்தில் தலைகீழாக மாறும் என்பதை மஸ்க் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
சீனாவில் விலை குறைந்த மின்சார வாகன நிறுவனங்களால், குறிப்பாக BYD நிறுவனத்திடமிருந்து, டெஸ்லா பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. டெஸ்லாவின் இரண்டாவது பெரிய சந்தையான, சீனாவில் பிப்ரவரியில் 49% குறைந்துள்ளது. இது ஆகஸ்ட் 2022-க்குப் பிறகு மிகப்பெரிய சரிவாகும். இது டெஸ்லா முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மஸ்க்கின் திடீர் தீவிர வலதுசாரி பாசம், ட்ரம்ப்புக்கு அளிக்கும் கண்மூடித்தனமான ஆதரவால் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள், மின்சார வாகன பயன்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் இன்று வேறு தேர்வுகளை நாடுவதாக தெரிகிறது. இன்னொருபக்கம் மஸ்க்குக்கு எதிரான போராட்டங்களும் திவீரமடைந்து வருகின்றன. இவை அனைத்தும் மஸ்க்கை கத்தி மேல் நடக்கும் சூழலுக்கு தள்ளியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும், இங்கிலாந்தில் ஜனவரில் சரிந்த டெஸ்லா பங்குகள் பிப்ரவரியில் மெல்ல மீண்டுள்ளன. இதே போக்கு மற்ற நாடுகளில் நீடிக்குமா? இல்லை, மஸ்க்கின் இமேஜை போலவே டெஸ்லாவின் பங்குகளும் போகப் போக பாதாளத்துக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
