அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி....
The Wire: பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக 'தேச துரோக' வழக்கு - விரிவான தகவல்கள்!
அசாம் மாநில காவல்துறை தி வயர் தளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பியிருக்கும் விவகாரம் நாடு முழுவதும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
ஏனென்றால் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி உச்ச நீதிமன்றம் வரதராஜனுக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அசாம் காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்தது. எனினும் நீதிமன்ற தீர்ப்புக்கு புறம்பாக மற்றொரு மாவட்டத்தில் வழக்கு பதிந்து சம்மன் அனுப்பியிருக்கிறது காவல்துறை.

The Wire தளத்தின் செய்தி அறிக்கை
இந்த தேச துரோக வழக்கு வயர் தளத்தில் வெளியான ஆப்பரேஷன் சிந்தூர் பற்றிய கட்டுரைக்காக போடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா பயன்படுத்திய IAF ஜெட் விமானங்கள் மற்றும் ராணுவ தந்திரோபாயங்கள் பற்றிய இந்தோனேசியாவுக்கான இந்தியாவின் ராணுவ இணைப்பாளரது கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
இதனை "இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும்" செயலாகக் கருதி பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152 இன் கீழ் தேசத்துரோக வழக்காக பதிவு செய்துள்ளது அசாம் காவல்துறை.
அசாம் காவல்துறை நடவடிக்கை: கைது அபாயம்
முன்னதாக கடந்த ஜூலை 11ம் தேதி பாஜக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 152ன் கீழ் சித்தார்த் வரதராஜன் மற்றும் வயர் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அசாம் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 12ம் தேதி உச்ச நீதிமன்றம் வரதராஜன் மற்றும் வயர் பத்திரிகையாளர்கள் மீது எந்தவித கட்டாய நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கியது.

கடந்த செவ்வாய் அன்று, அசாம் காவல்துறை எந்த காரணமும் குறிப்பிடாமல் மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. மேலும் வரதராஜனும் கரண் தாப்பரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி குவஹாத்தியில் உள்ள குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது. மீறினால் கைது செய்யப்படும் அபாயமும் இருக்கிறது.
ஒரு செய்தி அறிக்கைக்கு எதிராக தேசதுரோக வழக்கு பதிவு செய்வது, அரசு இயந்திரத்தை பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஏவுவது, அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் நடைமுறைக்கு மாற்றானதாகவும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பத்திரிகை சங்கங்கள் குரல்
அசாம் காவல்துறையின் நடவடிக்கையை முன்னதாக இந்திய பத்திரிகையாளர் மன்றம் (PCI), இந்திய பெண்கள் பத்திரிகையாளர் குழு (IWPC) மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் கண்டித்துள்ளன.
PCI மற்றும் IWPC இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அசாம் காவல்துறையின் செயல்பாடுகள் அரசு பத்திரிகையாளர்களுக்கு எதிராக கட்டவழித்துவிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கூறியுள்ளன.

மேலும் BNS பிரிவு 152 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும், அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19(1)-ல் சொல்லப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்கு எதிராக உள்ளதாகவும் அமைப்புகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.
பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த வழக்குகள் சுயாதீன பத்திரிகைகளை திறம்பட முடக்குகின்றன. அறிவிப்புகள், சம்மன்களுக்கு பதிலளிப்பதும் நீண்டகால நீதி விசாரணையை எதிர்கொள்வதுமே தண்டனையாக மாறிவிடுகின்றன." எனக் கூறியுள்ளனர்.
நிறுத்தப்பட்ட சட்டத்தின் மறுவடிவம் பிரிவு 152!
கடந்த 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பல்வேறு கவலைகளையும் கேள்விகளையும் முன்வைத்து கொடூரமான தேசத்துரோகச் சட்டம் (IPC பிரிவு 124A)-ஐ நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
பாஜக அரசாங்கம் நீதிமன்றம் எழுப்பிய கவலைகளுக்கு நிவாரணம் தேடாமல், புதிய குற்றவியல் சட்டங்களை (பாரதிய நியாய சன்ஹிதா) அறிமுகப்படுத்தும்போது அப்படியே IPC பிரிவு 124A-ஐ மறுவரைவு செய்து BNS பிரிவு 152-ஆக நடைமுறைப்படுத்தியுள்ளது. குற்றத்தின் பெயரை ராஜ துரோகம் என்பதிலிருந்து தேச துரோகம் என மாற்றினாலும் தவறாக கையாளுவது தொடர்கிறது.
அசாம் காவல்துறையின் சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் வரதராஜன். நாளை (ஆகஸ்ட் 22) பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து காண வேண்டும்.