செய்திகள் :

Travel contest: இரண்டரை நாள்களில் கர்நாடக மாநில முக்கிய கோவில்கள் யாத்திரை – முதல் பாகம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

பொதுவாக ஒரு மாநிலத்தின் முக்கிய கோவில்களுக்கு தரிசனம் செய்ய செல்வது என்றால் பெரும்பாலோர் ஒரு முக்கிய நகரத்தை தேர்ந்தெடுத்து அங்கிருந்து அருகில் இருக்கும் கோவில்களுக்கு போய்விட்டு வருவார்கள்.

உதாரணத்திற்கு, கும்பகோணத்திற்கு போனால் அங்கிருந்து காட்டுவாங்க அருகிலுள்ள சுவாமிமலை, வைத்தீஸ்வரன் கோவில், சிக்கல், திருவாரூர், நவகிரக கோவில்கள் மற்றும் பல புகழ்பெற்ற பழமை வாய்ந்த கோவில்களுக்கு போய் வருவது எளிதாக இருக்கும். 

அதுபோலவே, கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பெருமை வாய்ந்த கோவில்களான குக்கே சுப்பிரமணியா கோவில், தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில், கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில், உடுப்பி கிருஷ்ணர் கோவில், முருடேஸ்வர் கோவில் ஆகிய கோவில்களை இரண்டரை நாள்கள் பயணத் திட்டத்தில் எப்படி தரிசனம் செய்வது என்பது பற்றி இக்கட்டுரையில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

முதலில் மங்களூர் அல்லது மங்களூரு இந்த ஊர் தான் நம் பயணத்திட்டத்தின் மையப் புள்ளியாக இருக்கப்போகிறது.

மங்களூரை சென்னையிலிருந்து புறப்படும் பல இரயில்கள், பஸ்கள் மற்றும் விமானம் மூலம் சென்று அடையலாம். ரயில் மூலம் பயணம் செய்தால் சுமார் 16 மணி நேரம் எடுக்கும்.

சாலையில் பயணித்தால் சுமார் 13 முதல் 14 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

விமானத்தில் பயணம் செய்தால் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் விமான நிலையம் செல்லும் நேரம் அங்கு காத்திருக்கும் நேரம் ஆகியவைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே உங்களின் வசதி, தேவை, நேர அவகாசம் ஆகியவற்றை பொறுத்து நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மங்களூர் சென்று அடைய நீங்கள் திட்டமிட்டு கொள்ளலாம். நான் மங்களூரில் இருந்து செல்ல வேண்டிய கோயில்களுக்கான பயண விபரங்கள் மற்றும் அந்த கோயில்கள் பற்றிய விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.முதலில் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோவில்

மங்களூரில் இருந்து சுமார் 105 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சாலை வழியாக சென்றால் சுமார் இரண்டரை மணி நேரம் பிடிக்கும்.  சில பயணிகள் ரயில்களும் உள்ளன.

அவை குக்கே சுப்பிரமணியா ரோடு ரயில் நிலையம் வரை செல்லும். ஆனால் அவற்றின் கால அட்டவணை நம்முடைய பயணத்திட்டத்துடன் ஒத்து வருமா என்று பார்த்துக் கொள்வது முக்கியம். முதல் நாளில் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் இரண்டிலும் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் சுமார் காலை 8.00 மணிக்கு புறப்பட்டு வாடகை கார் மூலம் பயணம் செய்வது சரியாக இருக்கும். 

குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயில் பரசுராமர் அமைத்த ஏழு கோயில்களில் ஒன்றாகும். மாற்றாந் தாய் பிள்ளைகளான கருடனுக்கும், நாகங்களின் தலைவன் வாசுகிக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக வாசுகி  இங்கு வந்து தஞ்சம் அடைந்ததாக தல வரலாறு கூறுகிறது.

தாரகாசூரனையும் சூரபத்மனையும் போரில் வென்ற பிறகு முருகன் தன்னுடைய சக்திவேலை இங்குள்ள குமாரதாரா நதியில் சுத்தம் செய்ததாகவும், பரசுராமர் பல்வேறு அசுர குணம் கொண்ட அரசர்களை அழித்த பிறகு இந்த நதியில் தனது கோடாலியை சுத்தம் செய்ததாகவும் நம்பப்படுகிறது. 

இந்தக் கோயில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. நாகதோஷம் அல்லது சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் அது நீங்கும் என்று நம்பப்படுகிறது.

கோவிலின் கோபுரம் வெள்ளை நிறத்திலும், கோவிலின் முன்புறம் உள்ள தேர் பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டு நம்மூர் தேர்கள் போல கூம்பு வடிவில் இல்லாமல் நடுவில் பருத்து வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

குக்கே சுப்பிரமணியா கோவில் காலை 6:30 மணியிலிருந்து மதியம் 1:30 மணி வரையிலும் மாலை 3:30 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இது முருகர்/சுப்பிரமணியர்/கார்த்திகேயர் கோவிலாக இருந்தாலும் முருகன் மூலவர் விக்ரகம் தனியாக பெரியதாக இல்லை. ஐந்து தலை வாசுகி நாகம் ஈரடுக்கில் கருவறையில் உள்ளது. அதன் மேல் சிறிய மயில்வாகனராக சுப்ரமணியர் காட்சி தருகிறார்.

இங்கு ஆதி சுப்பிரமணியர் கோவிலும் உள்ளது அருகிலுள்ள குமாரதாரா நதியில் நீராடி அங்குள்ள படித்துறை அருகே நீரின் உள்ளே இருந்து ஏழு கூழாங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக வீடு போல் அடுக்கி வைத்தால் விரைவில் வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இங்கு தரிசனத்திற்கு பிறகு அடுத்த பயணம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் சிவன் கோவில். மதிய உணவும் வழியிலேயே எடுத்துக் கொள்ளலாம். 

இரண்டாவதாக தர்மஸ்தலா மஞ்சுநாதர் சிவன் கோவில்

குக்கே சுப்பிரமணிய கோவிலில் இருந்து புறப்பட்ட பின் தர்மஸ்தலா சென்றடைய சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிட சாலை பயணம் செய்ய வேண்டும். இதற்கான தூரம் 54 கிலோ மீட்டர். 

தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா சிவன் கோயில் பல விதங்களில் சிறப்பு கொண்டுள்ளது. இது நேத்ராவதி நதியின் கரையில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் பொன்னால் செய்யப்பட்டது. நிர்வாகிகள் சமணர் அதாவது ஜெயின் சமூகத்தினர். ஆனால் பூஜைகளை மேற்கொள்வது வைஷ்ணவர்களான மாத்வ சமூகத்தினர் என்பது ஒரு வியப்பான செய்தி.

தர்மஸ்தலா மஞ்சுநாதர் சிவன்

இந்த கோவிலின் முன்புறம் இருந்து பார்த்தால் ஒரு கோவில் போன்ற அமைப்பே தோன்றாது. ஒரு பெரிய மாளிகை போன்ற தோற்றமே தென்படுகிறது. நாம் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் கூட எழும்.

மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை தர்மஸ்தலா அளவின்றி இலவச உணவு வழங்கும் ஒரு இடமாகத்தான் பலராலும் அறியப்படுகிறது. மஞ்சுநாதர் சிவன் கோவில் அங்கு உள்ளது பற்றி பலரும் அறிவதில்லை. பெரிய அன்னதான கூடம் உள்ளது உண்மை என்றாலும் திருமலை போன்ற பெரிய கோயில்களிலும் அது உள்ளது.

இங்குள்ள சிவலிங்கம் ஹெக்டே குடும்பத்தை சேர்ந்த அன்னப்பா என்பவரால் இங்கு கொண்டு வந்து நிறுவப்பட்டது. இது கத்ரி (கோபால்நாத் நினைவிருக்கிறதா?) கோவிலில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட பின் அன்னப்பா மாயமாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

800 ஆண்டுகளுக்கு முன் குடுமா என்றும் மல்லர்மாடி என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்த கிராமம் இங்குள்ள இறைவன் தர்மத்தின் காவலனாக கருதப்படுவதால் தற்போது தர்மஸ்தலா என்று அழைக்கப்படுகிறது.

தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் திறந்திருக்கும் நேரங்கள்: காலை 6.30 முதல் 11.00 மணி வரை; மதியம் 12:15 மணி முதல் 2.30 மணி வரை; பின்னர் மாலை 5.00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. நடுவில் சிறப்பு பூஜைகளுக்காக நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அவ்வப்போது காத்திருக்க நேரலாம். 

ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு கோயில்கள் மட்டுமல்ல, மற்ற மூன்று கோயில்களின் உள்புறமும் கேரளாவில் உள்ள கோவில்கள் போன்றே வடிவமைப்பு கொண்டுள்ளன.

இதற்கு என் நண்பர் ‘கொங்கண் என்று அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலை கடற்கரையோரம் இந்த கோவில்கள் உள்ளதால் அந்த கலாச்சாரங்கள் ஒன்றுபட்டுள்ளன’ என்று விளக்கம் அளித்தார் நானும் அது அப்படி இருக்க வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன். 

அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில் முகப்பில் உள்ள வீரேந்திர ஹெக்டே அவர்களின் மெழுகுச் சிலை உயிருள்ள மனிதர் போன்றே தோற்றமளித்து நம்மை வரவேற்கும்.

மஞ்சுஷா அருங்காட்சியகம் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதால் குக்கே சுப்பிரமணியா கோவிலில் இருந்து தர்மஸ்தலா வந்தவுடன் நேரடியாக அங்கு சென்று பொறுமையாக காட்சிப் பொருள்களை பார்த்த பிறகு மஞ்சுநாதர் கோவிலில் தரிசனம் செய்தால் சரியாக இருக்கும். ஏனென்றால் கோவில் நடை மாலை 5.00 மணிக்குதான் திறக்கும்.

மஞ்சுஷா அருங்காட்சியகத்தின் முன்புறம் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய தேர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு நம்மை ஏற்கின்றன இந்த அருங்காட்சியகத்திற்குள் நாம் நம் காலணிகளை அணிந்து கொண்டு செல்லலாம்.

முக்கியமான ஒரு விஷயம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மறந்து விட்டேன். குக்கே சுப்பிரமணியா கோவில், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயில்களில் மட்டுமல்லாமல் இதர மூன்று கோயில்களிலும், கேரளாவில் உள்ள சில கோவில்கள் போன்றே ஆண்கள் சட்டை, பனியன், டி-ஷர்ட் போன்ற மேலாடைகள் அணிந்து கொண்டு உள்ளே செல்ல அனுமதி இல்லை. எனவே நீங்கள் புறப்படும் முன் அதற்கு ஏற்றவாறு உடையணிந்து கொள்ள வேண்டும்.

மஞ்சுநாதர் கோவிலில் தரிசனம் முடிந்த பிறகு பொறுமையாக இரவு உணவு முடிந்தவுடன் அங்கிருந்து புறப்பட்டால் சரியாக மங்களூர் சென்று சேர முடியும். 

இத்துடன் கட்டுரையின் நீளம் கருதி முதல் பாகத்தை, முதல் நாள் பயணத்துடன் முடித்துக் கொள்கிறேன் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாளின் முற்பகல் பயணத்தை, நான் இரண்டாவது பாகத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

நன்றி. 

இரண்டாம் பாகத்தில் சந்திப்போம்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest: கடல் கன்னியம்மனுக்கு ஓர் திருவிழா!; ஆச்சரியமூட்டும் மாமல்லபுரம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : `புது உலகத்துக்குள் வந்து விட்டது போன்ற உணர்வு!' - இத்தாலி கேப்ரி ஐலண்ட் விசிட்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க

Travel Contest : சிற்றோடைகள், அடர்ந்து வளர்ந்த காடுகள், அருவிகள்..! - உத்தரகாசி அற்புதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? சூப்பர் பட்ஜெட் spot!

கோடைக்காலம் தொடங்கிவிட்டது, பலரும் இந்த சம்மருக்கு எங்கு சுற்றுலா செல்லலாம் என்று பிளான் செய்து கொண்டிருப்பார்கள். குறைந்த விலையில் நமக்கு அருகே இருக்கும் அழகான சுற்றுலா தலங்களை பார்க்க வாய்ப்பு கிடைத... மேலும் பார்க்க

Travel contest: 'த்ரில்லிங்கான வாகமன் ஜீப் சவாரி' - முதல் சுற்றுலா அனுபவத்தைப் பகிரும் பள்ளி மாணவி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: வால்பாறை - சாலக்குடி சாலை; காட்டுக்குள் சேட்டனின் சாயா; அதிரப்பள்ளி சுற்றுலா அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க