UP: 10 குழந்தைகளை பலி கொண்ட தீ விபத்து... ஜன்னலை உடைத்து காப்பாற்றிய இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பெரும்பாலான குழந்தைகளை காப்பாற்றியவர் யாகூப் மன்சூரி என்ற இளைஞர். ஆனால் இவரது இரட்டைக் குழந்தைகளை இவரால் காப்பாற்ற முடியாமல் போனது சோகத்தின் உச்சம்.
மகாராணி லஷ்மி பாய் மெடிக்கல் காலேஜில், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மையத்தில் (neonatal intensive care unit - NICU) இரவு 10:45 மணியளவில் தீப்பற்றியதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார் மாவட்ட மஜிஸ்திரேட் அவினாஷ் குமார்.
தீப்பற்றியபோது NICU வார்டில் கிட்டத்தட்ட 54 குழந்தைகள் இருந்துள்ளனர், இவர்களில் 44 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த ஒருவாரமாகவே தனது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் மன்சூரியும் அவரது மனைவியும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருந்துள்ளார்.
தீப்பற்றியபோது, யாகூப் NICU வார்டின் ஜன்னலை உடைத்து தன்னால் முடிந்தவரை பல குழந்தைகளைக் காப்பாற்றினார். உயிரிழந்த குழந்தைகளில் 7 பேரின் சடலங்கள் மட்டுமே உடனடியாக அடையாளம் காண முடிந்துள்ளது. அவற்றில் யாகூபின் இரட்டைக் குழந்தைகளும் அடக்கம்.
மற்ற சடலங்களை அடையாளம் காண டி.என்.ஏ டெஸ்ட் மேற்கொள்ளப்படலாம் என்கின்றனர்.
உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் துணை முதல்வர் பிரஜேஷ் பதக் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, "சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மட்டத்தில் முதற்கட்ட விசாரணை சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்படும். விபத்துக்கான காரணம் கண்டறிய இரண்டாம் கட்ட விசாரணையை காவல்துறை சார்பிலும், மூன்றாம் கட்ட விசாரணை நீதித்துறையாலும் நடத்தப்படும். அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு, விபத்திற்கு காரணம் என்னவாக இருந்தாலும், அது பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்," என்று கூறியுள்ளார்.
ஆக்ஸிஜன் செறிவூட்டியில் ஏற்பட்ட ஷார்ட்-சர்க்யூட் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மூத்த காவல் கண்காணிப்பளர் சுதா சிங், 16 குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும், அவர்களது உயிரைக் காக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் தீ பிடிக்கும்போது எழ வேண்டிய அபாய ஒலி வேலை செய்யவில்லை என்று கூறப்படும் விமர்சனங்களை அரசு மறுத்துள்ளது.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு 5 லட்சமும் காயமடைந்துள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கு 50,000-ம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார் யோகி ஆதித்யநாத். பிரதமர் மோடி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 50, 000ம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb