செய்திகள் :

Vijay TVK: `அரசியல் கட்சிகளும் அதன் முதல் மாநாடும்' - ஒரு விரிவான பார்வை

post image

இந்திய மாநிலங்கள் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. தேசிய கட்சிகளே மத்தியிலும், மாநிலத்திலும் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கதையே வேறு.

தமிழ்நாடு

தி.மு.க - அ.தி.மு.க

1952 முதல் 1967வரை தமிழ்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ யை ஓரம் கட்டிவிட்டு, 1967-ம் ஆண்டு அண்ணா தலைமையிலான ‘திமுக’ ஆட்சியைக் கைப்பற்றியது. அன்று முதல் இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டின் பெயர்  தனித்துவமாக ஒலிக்க ஆரம்பிக்கத் தொடங்கியது.  திமுகவிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் தலைமையில் உருவான ‘அதிமுக’ தமிழ்நாட்டு அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுத்தது. கடந்த 57 ஆண்டுகளில் ‘திமுக - அதிமுக’ இந்த இரண்டு திராவிடக் கட்சிகளே தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றன. தேசியக் கட்சிகளுக்கு இங்கு இடமில்லாமல்போனது. இதற்கிடையில் ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க, தே.மு.தி.க, நா.த.க, ம.நீ.ம உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசியலில் பெரும் அடையாளம் கொண்ட கட்சிகளாக ஆரம்பிக்கப்பட்டு அரசியலில் இயங்கி வருகின்றன.

இக்கட்சிகளெல்லாம் ஆரம்பிக்கப்பட்டபோது மாநாட்டில் தீப்பொறி பறக்கும் கொள்கை உரைகளை நிகழ்த்தியிருக்கின்றனர் ஆளுமை மிக்க அரசியல் தலைவர்கள். அவையெல்லாம் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கும், ஆட்சி மாற்றங்களுக்கும் வழிவகுத்திருக்கின்றன.

இக்கட்டுரையில் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அரசியல் களத்தில் உருவான கட்சிகள் மற்றும் அதன் மாநாட்டில் தலைவர்கள் நிகழ்த்திய ஆளுமைமிக்க உரைகளைப் பற்றிய ஓர் பார்வைதான் இது.

அண்ணா, விஜயகாந்த், விஜய்

தி.மு.க - அண்ணா

பெரியாரின் சமத்துவ, சமூக சீர்திருத்தக் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு அரசியலில் வளர்ந்த பேரறிஞர் அண்ணா, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் சமூக விடுதலைக்கு வழிவகுக்கும் என்று பெரியாரின் ‘திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949ஆம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி பெரியாரின் பிறந்த நாள் அன்று ‘திமுக’ வைத் தொடங்கி தேர்தல் அரசியலுக்கு விதையிட்டார்.

அடுத்த நாள், செப்டம்பர் 18ம் தேதி சி.என்.அண்ணாதுரை தலைமையிலான  ‘திமுக’வின் திமுகவின் தொடக்க விழா நடைபெற்றது. லட்சோப லட்ச தொண்டர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அண்ணாவின் உரையைக் கேட்க கொள்கை உறுதியுடன் நின்றிருந்தனர். அப்போது ‘திமுக’ தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணா, “திராவிடர் கழகத்தின் அடிப்படை கொள்கைகள் மீதே ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ தொடங்கப்பட்டிருக்கிறது. எங்கள் கட்சிக்குத் தலைவர் பெரியார்தான். எங்கள் இதயத்தில் குடி கொண்டிருக்கும் தந்தை பெரியாருக்கான தலைவர் நாற்காலியில் நாங்கள் யாரும் அமரப்போவதில்லை. அந்தத் தலைவர் நாற்காலிக்கான அவரது இடம் காலியாக வைக்கப்பட்டிருக்கும். படை வரிசை வேறாக இருந்தாலும் எங்களின் கொள்கை ஒன்றுதான். பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டுவிட வேண்டும். 

பேரறிஞர் அண்ணா - பெரியார்

நம் கொள்கைகளைப் பரப்புவதே நம் முதல் பணி. பழைமையும், பாசிசமும் முறியடிக்கப்படும் வரை ஒன்றாகச் சேர்ந்து ஓயாமல் உழைப்போம். அதன் பலனைக் காண்போம். பெரியார் நம்மை எண்ணிப் பெருமைப்படும் நாள் வரும். பேச்சுரிமை - எழுத்துரிமையைப் பறிக்காதே. புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே. பெரியாரே நீர் அளித்த பயிற்சியில் பக்குவம் பெற்ற நாங்கள் கட்சியின் தொடக்க நாளான இன்றே சர்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று உரையாற்றினார். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப்போட்ட உரை அது. 

அ.தி.மு.க - எம்.ஜி.ஆர்

அண்ணாவின் மீது ஈர்ப்பு கொண்டு 1952 ஆம் வருடம் தி.மு.க-வில் இணைந்த எம்.ஜி.ஆர், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கலைஞருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் (அ.தி.மு.க) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அ.தி.மு.க-வின் முதல் பொதுக்கூட்டம் 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி  திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. முதல் பொதுக்குழுவையும், மாநில மாநாட்டையும் எம்.ஜி.ஆர் திருச்சியிலே நடத்தினார். எம்.ஜி.ஆரைக் காணப் பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர்

அப்போது பேசிய எம்.ஜி.ஆர், "தாய்மார்களே, பெருமைக்குரிய தமிழ்ப் பெருமக்களே, என் இரத்தின் இரத்தமான உடன்பிறப்புகளே... அண்ணா சொன்ன வழியில், அவரின் ஆட்சியை மீண்டும் கொண்டுவரத் தொடங்கப்பட்டதுதான் இந்த 'அ.தி.மு.க'. அண்ணாவின் பெயரில் ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் மக்கள் நலனுக்காகத் திட்டங்கள் வகுப்பதைவிட, தங்களுக்கு அதில் என்ன லாபம் இருக்கிறது என்றே திட்டங்கள் வகுக்கின்றனர். மக்களின் நலனுக்காகத் திட்டங்களை வகுத்த அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர்.

இந்தக் கொடுமையான நிலையை எண்ணி வருந்தி நான் சிந்தியக் கண்ணீரில் உருவானதுதான் 'அ.தி.மு.க'. அண்ணாவின் ஆட்சியை, லட்சோபலட்ச மக்களின் ஆட்சியை, லஞ்சம் லாவண்யம் இல்லாத ஆட்சியை, ஏழை எளியவர்களுக்கான தோழமைமிக்க ஆட்சியை, படித்தவர்களுக்கான பண்புமிக்க ஆட்சியை, நாடு போற்றும் நல்லாட்சியைக் கொடுக்கவே 'அ.தி.மு.க' தொடங்கப்பட்டிருக்கிறது" என்று தமிழ் நாடெங்கும் பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.

வைகோ

ம.தி.மு.க - வைகோ

1989-ல் 'விடுதலைப் புலிகள்' அமைப்பையும், பிரபாகரன் அவர்களையும் வைகோ சந்தித்தார். அதன்பிறகு, 1993 ஆம் ஆண்டு தி.மு.கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, 1994ம் மே 6ம் தேதி ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். அ.தி.மு.கவுக்கும். தி.மு.கவுக்கும் மாற்றாக 'ம.தி.மு.க'வை தொடங்கியதாகவும், விரைவில் ஆட்சியைக் கைப்பற்றி மாற்றத்தை நிகழ்த்துவோம் என்றும் சூளுரைத்திருந்தார் வைகோ.

தொல்.திருமாவளவன்

விசிக - திருமாவளவன்

ஈழத் தமிழர் பிரச்னைகள், ஒடுக்கப்டோரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த திருமாவளவன், 1990-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ம் நாள், மதுரையில் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்ற புதிய அமைப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார். தொடக்கத்தில் தேர்தல் அரசியலை விமர்சித்தும், புறக்கணித்தும் வந்த திருமா, 1999-ம் ஆண்டு ஜி.கே.மூப்பனாரின் உந்துதலின் பெயரில் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை 'த.மா.கா' கூட்டணியுடன் சேர்ந்து சந்தித்தார். 1999-ம் ஆண்டு, ஜூலை 23-ம் தேதி நெல்லை தாமிரபரணியில் நடந்த மாஞ்சோலைப் படுகொலை, திருமாவை தேர்தல் அரசியலுக்குள் இழுத்துவந்தது. மாநாடுகளில் 'சமத்துவம், சுதந்திரம்' என்பதையே முதன்மையான கொள்கையாக அறிவித்து பிரசார முழக்கங்கள் செய்தது வி.சி.க

ராமதாஸ் - அன்புமணி

பாமக - ராமதாஸ்

வன்னியர் சமுதாய மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்டதுதான் வன்னியர் சங்கம். அதன் தொடர்ச்சியாக, 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சி. சென்னை கடற்கரை சீரணி அரங்கில் தொண்டர்கள் படை சூழ மருத்துவர் ராமதாஸ் இக்கட்சியை அறிவித்து மாநாட்டை நடத்தினார். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை தங்களின் வழிகாட்டிகளாகவும் அறிவித்தார். வன்னிய சமுதாய மக்கள், ஒடுக்கப்பட்டோர் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போம், அதிகாரத்தைக் கைப்பற்றோம் என்று உறுதியெடுத்தது பாமக.

தே.மு.தி.க - விஜயகாந்த்

14.9.2005ம் தேதி அன்று மதுரை திருநகரில் விஜயகாந்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பேசிய விஜயகாந்த், "நாம் யார்? எப்படிப்பட்டவர்கள் என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்திய நாட்டுக்கே தெரியப்படுத்த வேண்டும். திராவிடம் என்றால் தமிழ் மட்டும்தான் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் 4 மொழிகள் சேர்ந்ததுதான் திராவிட நாடு. திராவிட நாடு தேசியத்துக்குள் அங்கம் வகிக்க வேண்டும் என்பதால் தேசியத்தை சேர்த்து உள்ளோம். இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க தேசியம் அவசியம்.

விஜயகாந்த்

முற்போக்கு என்பதற்கு காரணம், இன்னும் கல்வி, பொருளாதாரம் போன்ற விஷயங்களில் நாம் பின்தங்கியே இருக்கிறோம் என்ற நிலை மாற, முற்போக்குத்தனமான கொள்கைகள் இருக்க வேண்டும். சிந்தனைகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் முற்போக்கு என்ற வார்த்தையை கட்சியின் பெயரில் சேர்த்துள்ளோம். 90 சதவிகித மக்கள் நிச்சயமாக என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது." என்று 'தே.மு.தி.க'வை ஆரம்பித்தார் விஜயகாந்த்.

நாம் தமிழர் கட்சி - சீமான்

நாம் தமிழர் கட்சி  2010 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் தொடங்கப்பட்டது. தமிழின மீட்சி, ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண தனித்தாயகத் தமிழீழத் தனியரசு, மாநில தன்னுரிமை போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிட்டு வருகிறது.

மக்கள் நீதி மய்யம் - கமல்

2018 பிப்ரவரி 21-ம் தேதி, மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மாநாடு கூட்டி 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை ஆரம்பித்தார் நடிகர் கமல்ஹாசன். அதன் முதல் மாநாட்டில் பேசிய கமல், "தரமான கல்வி எல்லோருக்கும் வேண்டும், சாதி - மதத்தைச் சொல்லி விளையாடிய அரசியல் விளையாட்டுகளை நிறுத்த வேண்டும், ஊழலற்ற ஆட்சி வேண்டும். இடதுசாரி - வலதுசாரி அரசியலைக் கடந்து 'CENTRISM' எனச் சொல்லப்படும் மய்யக் கொள்கைக் கொண்டு செயல்படுவோம். அதனால்தான் கட்சிக்கு 'மக்கள் நீதி மய்யம்' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கான நீதியின் குரலாக, உரிமைக் குரலாக ஒலிக்கும் 'மக்கள் நீதி மய்யம்'" என்று உரையாற்றி கட்சி தொடங்கினார் கமல்.

TVK Vijay | த.வெ.க - விஜய்

த.வெ.க - விஜய்

2024, பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று விஜய், தனது அரசியல் கட்சியான 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியை அறிவித்தார். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வி.சாலை பகுதியில் மிக பிரமாண்டமான மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவிருக்கிறது. 'த.வெ.க'வின் இந்த முதல் அரசியல் மாநாடும், விஜய்யின் உரையும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய தொடக்கமாக கால்பதிக்கவிருக்கிறது.

இந்தக் கட்சிகளின் மாநாடுகள் குறித்தும் அதன் பிறகான நிகழ்வுகள் குறித்துமான உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Aadhar: `ஆதார் அடையாள சான்று மட்டும்தான்...' - உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?!

``ஆதார் அட்டை 'அடையாள சான்று' மட்டுமே... வயதை சொல்லும் ஆவணம் இல்லை" என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.2015-ம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக்கைச் சேர்ந்த சிலாக் ராம் ... மேலும் பார்க்க

திருவாரூர்: "பஸ் ஸ்டாப் இருந்தும் பஸ் நிற்காது..." - அரசுக் கல்லூரி மாணவர்கள் வேதனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, தண்டலைச்சேரி பகுதியில், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் பிரதான சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி தொடக்கத்தில் பாரதி... மேலும் பார்க்க

ஈரோடு: ரக ரகமாக துப்பாக்கிகள்; ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள் - காவல்துறை கண்காட்சி Photo Album

துப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சி... மேலும் பார்க்க

``112 நாடுகளில் ஆய்வு; இந்தியாவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகம்..'' -ஐ.நா அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி (OPHI) இணைந்து ஒரு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில், உளகளவில் 112 நாடுகளில் சுமார் 100 கோடிக்கும... மேலும் பார்க்க

`தீபாவளி' ரெய்டு: அதிகாரிகள் காட்டில் பணமழை; விடாமல் துரத்தும் விஜிலென்ஸ் - ஒரே நாளில் இவ்வளவா?!

தீபாவளி நெருங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தி... மேலும் பார்க்க