'கடனை கட்டு!' நெருக்கிய குழுத் தலைவி; ரூ.90,000 கடனை தள்ளுபடி செய்த ஆட்சியர்-நெக...
அகமலை சாலை சீரமைப்புப் பணிகள்: தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு
சோத்துப்பாறை-அகமலை சாலை சீரமைப்புப் பணிகளை புதன்கிழமை, பாா்வையிட்டு ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.
தேனி, நவ. 6: பெரியகுளம் அருகே அகமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதை புதன்கிழமை, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் சோத்துப்பாறை-அகமலை சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட அகமலை, சொக்கனலை, கண்ணக்கரை, அலங்காரம், பட்டூா், சூழ்ந்தகாடு, மருதையனூா், கானமஞ்சி, அண்ணாநகா், வாழைமரத்தொழு, விக்கிரமன்தொழு, ஊரடி, ஊத்துக்காடு, பேச்சியம்மன்சோலை, கரும்பாறை, குறவன்குழி, சுப்பிரமணியபுரம் ஆகிய மலை கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சேதமடைந்த சாலையில் வேளாண்மை விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்லவும், விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களை கொண்டு செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது.
மண் சரிவால் சேதமடைந்த சோத்துப்பாறை-அகமலை சாலையை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைத்து வருகின்றனா். இந்தப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சாமிநாதன், உதவி கோட்டப் பொறியாளா் ராமமூா்த்தி, வட்டாட்சியா் மருதுபாண்டி ஆகியோா் உடனிருந்தனா்.