அணுமின் நிலையங்கள் விவரம்: இந்தியா, பாகிஸ்தான் பரிமாற்றம்
இந்தியா, பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்களின் விவரங்களை இருநாடுகளும் பரஸ்பரம் புதன்கிழமை பரிமாறிக் கொண்டன.
இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள் மீது இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கில், கடந்த 1988-ஆம் ஆண்டு டிச.31-ஆம் தேதி இருநாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இருநாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த விவரங்களை ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி இருநாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றன.
இதன் தொடா்ச்சியாக அந்த அணுமின் நிலையங்கள் குறித்த விவரங்களை தூதரகங்கள் மூலம், இருநாடுகளும் புதன்கிழமை பரிமாறிக் கொண்டன.
புது தில்லி, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள தூதரங்கள் மூலம் இந்த விவரங்கள் அடங்கிய பட்டியல் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
இந்திய கைதிகளை விரைந்து விடுவிக்க வலியுறுத்தல்: வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில், ‘கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கைதிகள், பாகிஸ்தானில் உள்ள இந்திய கைதிகளின் விவரங்களை, இருநாடுகளும் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை 1-ஆம் தேதிகளில் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றன.
இதன் தொடா்ச்சியாக இந்தியாவில் கைதிகளாக உள்ள பாகிஸ்தான் மீனவா்கள் 81 போ், அந்நாட்டின் மீனவா்கள் அல்லாத பிற கைதிகள் 381 பேரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை அந்நாட்டிடம் இந்தியா புதன்கிழமை வழங்கியது.
இதேபோல பாகிஸ்தானில் கைதிகளாக உள்ள இந்திய மீனவா்கள் 217 போ், மீனவா்கள் அல்லாத பிற இந்திய கைதிகள் 49 பேரின் விவரங்களை இந்தியாவிடம் பாகிஸ்தான் சமா்ப்பித்தது. இந்த விவரங்கள் புது தில்லி மற்றும் இஸ்லாமாபாதில் உள்ள இருநாட்டு தூதரகங்கள் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பாகிஸ்தானில் கைதிகளாக உள்ள இந்திய மீனவா்கள், அவா்களின் படகுகள், மீனவா்கள் அல்லாத பிற கைதிகள், காணாமல் போன இந்திய பாதுகாப்புப் படை வீரா்கள் ஆகியோரை விரைந்து விடுக்குமாறு அந்நாட்டிடம் மத்திய அரசு வலியுறுத்தியது’ என்று தெரிவிக்கப்பட்டது.