வட கொரியாவுடன் நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள ரஷியா ஆயத்தம் -அமெரிக்கா
`மனைவி பர்தா அணியாதது ஒன்றும் கொடுமை அல்ல' - கணவர் விவாகரத்து கோரிய வழக்கில் அலகாபாத் நீதிமன்றம்
பொது இடங்களில் தனது மனைவி பர்தா அணிவதில்லை, பாரம்பர்ய பழக்கவழக்கங்களைச் சரியாக கடைப்பிடிப்பதில்லை என்று கணவர் விவாகரத்து கோரிய வழக்கில், கணவரின் கூற்றை மறுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இந்த வழக்கைப் பொறுத்தவரையில், கணவர் பொறியாளர், மனைவி ஆசிரியை. 1990-ல் இந்தத் தம்பதியினர் திருமணம் செய்துகொண்டு 1996 வரை ஒன்றாக வாழ்ந்தனர். அதன் பின்னர், பல்வேறு கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழத் தொடங்கினர். அதைத்தொடர்ந்து, கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்குச் சென்றார்.
2004-ம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனைவி விவாகரத்து தர மறுத்ததால் நீதிமன்றம் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இதனால், விவாகரத்து கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை, உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதையடுத்து, திங்கள்கிழமையன்று நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங் மற்றும் டொனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, மனைவியின் நடத்தை, ‘பர்தா’ அணியாமல் வெளியே செல்வது, சமூகத்தில் சுதந்திரமாகப் பழகுவது உள்ளிட்டவை தனது எதிர்பார்ப்புகளை மீறுவதாகவும், தனக்கு மனக் கொடுமையை ஏற்படுத்துவதாகவும் கணவர் வாதிட்டார்.
இதைக் கவனித்த நீதிமன்ற அமர்வு, ``கணவரின் விவாகரத்துக்கான காரணங்களில் நியாயமான தகுதி இல்லை. வாழ்க்கையைப் பற்றிய மாறுபட்ட கண்ணோட்டங்கள் தனிநபர்களின் வெவ்வேறு நடத்தைகளுக்கு வழிவகுக்கும். இத்தகைய கருத்து வேறுபாடுகள், நடத்தைகள் மற்றவரின் பார்வையில் கொடுமையாகத் தெரியலாம். ஆனால், அவை கொடுமை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கக்கூடியவை அல்ல.
மேலும் இதில் கணவரின் வாய்மொழியான அவமதிப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடன் மனைவிக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுகிறது. இருப்பினும், 23 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருப்பதும், ஒன்றாக வாழாததும் மனக் கொடுமைக்கான காரணிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது." என்று கூறி விவாகரத்து வழங்கியது.
மேலும், இரு தரப்பினரும் நிதி ரீதியாக சுதந்திரமாக இருப்பதால் ஜீவனாம்சத்திற்கான விதிமுறைகள் எதுவும் தேவையில்லை என்றும், கூடுதல் நிதி உரிமைகோரல்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் தீர்ப்பில் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...