Relationship: ``நான் முக்கியமா, உங்க ஃபிரெண்ட்ஸ் முக்கியமா?'' - மனைவி சண்டை போட காரணம் என்ன?
‘நானா, அவனுங்களா... ரெண்டு பேருல உங்களுக்கு யாரு முக்கியம்னு இன்னிக்கு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்?’ - இந்தக்கால கணவன் - மனைவி பஞ்சாயத்தில் அடிக்கடி திட்டு வாங்குகிற அந்த ‘அவன்கள்’ கணவனின் நண்பர்கள்தாம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பெரும்பாலான ஆண்கள், தம் மனைவியிடம் வாங்கும் திட்டைவிட நண்பனின் மனைவியிடம் வாங்குகிற வசைதான் அதிகம். அந்தளவுக்கு, கணவர்களுக்கு ‘நண்பேன்டா’வாக இருப்பவர்கள், அந்தக் கணவர்களின் மனைவிகளுக்கு வில்லனாகத் தெரிகிறார்கள். இதற்கு காரணம், மனைவியின் பொசசிவ்னெஸ்ஸா அல்லது நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் கணவனின் இயல்பா.. அல்லது வேறு வலுவான காரணங்கள் இருக்கின்றனவா?
‘’தம்பதியருக்கு இடையே, கடந்த சில தலைமுறைகளாகத்தான் கணவனின் நண்பர்கள் சண்டை மூட்டி வருகிறார்கள்’’ என்கிற உளவியல் ஆலோசகர் கண்ணன், இதற்கான காரணங்களை அடுக்குகிறார். ‘’கூட்டுக் குடும்பங்கள் இருந்தவரைக்கும், வீட்டிலிருக்கிற மனைவியின் பேச்சுத்துணைக்கு ஆள்கள் இருந்தனர். அதனால், உழைத்துக் களைத்து வரும் கணவனை மட்டுமல்ல, ஆறு மணிக்கு வேலை முடித்து எட்டு மணிவரைக்கும் டீக்கடையில் நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வரும் கணவனைக்கூட ‘உழைச்சுக் களைச்சு வர்றார்’ என்று காபி டம்ளருடன் வரவேற்றார்கள் மனைவிகள். இன்று பெண்களும் வேலைக்குப் போவதால், ‘இந்த புராஜெக்ட்டுக்கு இவ்ளோ நேரம்தான் வேலை’, ‘மன்த் எண்டு டார்கெட் முடிஞ்சப்புறம் லேட்டாகாது’ என்பது போன்ற அஃபிஷியல் புள்ளி விவரங்கள் எல்லாம் மனைவிகளுக்கு அத்துப்படி ஆகிவிட்டது. அவர்களிடம் ‘ஆஃபீஸ்ல நிறைய வேலைம்மா. அதான் லேட்டு’ என்று சமாளித்தால், டீக்கடையில் கணவனுக்கு கம்பெனி கொடுத்த நண்பர்கள்மீது வெறித்தனம் வருவது இயல்புதானே.
கணவனின் நண்பர்களை வில்லனாக்கியதில் தனிக்குடித்தனங்களுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு என்று நாள் முழுக்க தனியாகச் சமாளிக்கிற மனைவி, தனக்கு எந்த உதவியும் செய்யவில்லையென்றாலும் கணவன் நேரத்துக்கு வீட்டுக்கு வந்துவிட்டால் ஆறுதலாக உணர்வாள். இதைப் புரிந்துகொள்ளாமல் நண்பர்களுடன் பொழுதைப் போக்கிவிட்டு வீட்டுக்குத் தாமதமாக வந்தால், மனைவி கோபப்படத்தான் செய்வாள். இதேபோல, அலுவலகம், வீடு என இரண்டு இடங்களிலும் உழைத்துக்கொண்டிருக்கும் மனைவிக்கு கொஞ்சம்கூட சப்போர்ட் செய்யாமல், நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, ‘இவருக்கு நான் முக்கியம் இல்ல’ என்று மனைவி நினைக்கிறார். அந்த நேரத்தில்தான் ‘உங்களுக்கு நான் முக்கியமா, இல்ல உங்க ஃபிரெண்ட்ஸ் முக்கியமா’ என்று சண்டை போட ஆரம்பிக்கிறார்கள்.
திருமணத்துக்குப் பிறகு கருத்தரிப்பது, குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு என்று பெண்கள் வீட்டைச் சார்ந்து அதிகம் இயங்குவார்கள். குடும்பத்தைப் பராமரிக்க, சம்பாதிக்க ஆண்கள் வெளியுலகம் சார்ந்து அதிகம் இயங்குவார்கள். தாய்வழி சமுதாயத்துக்குப் பிறகு நம் குடும்ப அமைப்பு பெரும்பாலும் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதனால், வீட்டுக்குள் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆணின் உளவியலில் இல்லை. கூட்டுக் குடும்பத்தில் சகித்துக்கொள்ளப்பட்ட இந்த விஷயம், தனிக்குடித்தனத்தில் மனைவிகளால் வெறுமையாக உணரப்படுகிறது. காலப்போக்கில் வெறுப்பாக மாறும் இந்த உணர்வை, கணவனிடம் நேரடியாகக் காட்ட முடியாதபோது அவனின் நண்பர்கள் மீது காட்ட ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு சில வீடுகளில் ‘நான் சம்பாதிக்கிறேன். வீட்டுக்குக் காசு கொடுக்குறேன். அதுக்கு மேல அனுசரணையா இரு; ஆதரவா இருன்னு எதிர்பார்க்காதே’ என்பதில் தெளிவாக இருப்பார்கள் கணவர்கள். இன்னும் சிலர், ‘வாரம் முழுக்க உழைக்கிறேன். சண்டே இஸ் மை டே. அதை என் ஃபிரெண்ட்ஸோட தான் கழிப்பேன்’ என்று கிளம்பி விடுவார்கள். இது அவர்களுடைய இயல்பு. இதற்கு அவர்களின் நண்பர்களைக் குற்றம் சொல்ல முடியாது.
எப்போதாவது குடிக்கிற ‘சோஷியல் டிரிங்க்கிங்’ பழக்கம் இன்று அதிகரித்துவிட்டது. எப்போதாவது குடித்தாலும் அதுவும் ஆரோக்கியக்கேடுதான். நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு குடிப்பார்கள். அந்த போதையுடனே வண்டியோட்டுவார்கள். கணவனின் உயிருக்கு உலைவைக்கிற இந்த விஷயத்தில் கணவனின் நண்பர்களை மனைவிகள் வெறுப்பதில் எந்தத் தவறுமில்லையே...
கணவனின் நண்பர்களை மனைவிகள் வெறுப்பதில் மனைவி தரப்பு நியாயங்கள் இருக்கட்டும், ‘நண்பர்களுடன் இருக்கும் சில மணி நேரம் கணவர் வேலைப்பளு, குடும்பச்சுமை பற்றிய கவலைகள் இல்லாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு வடிகால் அவருக்குத் தேவைதான் என்பதை மனைவிகளும் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, மனைவி என்பவள் குடும்பத்துக்காகவே நேர்ந்துவிடப்பட்டவள் அல்ல. அவளுக்கும் நட்பு வட்டம் இருக்கும். அவர்களுடன் நேரம் செலவழிக்கும்போது அவள் நிம்மதியாக உணர்வாள். அதற்கான ஸ்பேஸை கணவன் தன் மனைவிக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். அந்த நேரத்தில் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தமக்கிருப்பதை கணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். ஆணோ, பெண்ணோ நட்பு என்பது மனபாரங்களை மறக்கச்செய்கிற மேஜிக்கல் ரிலேஷன்ஷிப். வாழ்க்கையில் அதற்கும் ஒரு பங்கு கொடுங்கள்’’ என்கிறார் உளவியல் ஆலோசகர் கண்ணன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...