BB Tamil Day 86: புஸ்ஸான முத்துவின் ஸ்டார்டஜி; மஞ்சரியின் திட்டம் என்ன? - வெல்லப்போவது யார்?
பிக் பாஸ் டாஸ்குகளும் இந்திய ஜனநாயகம் போலத்தான் போல. தனித்து பெரும்பான்மையை ஈட்டுவதுதான் கெத்து என்றாலும் கூட்டணி இல்லாமல் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை. கூட்டணி அமைத்தாலும் கூட கோட்டை விட்டு விடுகிறார்கள். முத்துவிற்கு நிகழ்ந்தது அதுவே.
‘அவரோட ஸ்ட்ராட்டஜி அவருக்கே பேக் ஃபயர் ஆயிடுச்சு’ என்று பவித்ரா சொன்னது நெத்தியடி ஸ்டேட்மென்ட்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 86
TTF-ன் இரண்டாவது ரவுண்டு. ஒருவரின் புகைப்படத்தை எரித்து விளையாடுவதெல்லாம் கொடுமையான ஆட்டம். எல்லா சீசன்களிலும் இந்தக் கொடுமை நடக்கிறது. யாரை அவுட் ஆக்க விரும்புகிறோமோ, அவருடைய புகைப்படத்தைப் பறித்துக் கொண்டு சுத்தியலால் மணியை அடித்து தகுந்த காரணத்தைச் சொல்லி விட்டு புகைப்படத்தை எரித்தால், சம்பந்தப்பட்ட நபர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார். பத்து சுற்றுகள் நடக்கும். இறுதி ஐந்தில் வருபவர்களுக்கு மதிப்பெண் உண்டு.
‘உங்களால ஆட முடியுமா?” என்று ராணவ்விடம் கேட்டு பாதுகாப்பாக உத்தரவாதம் வாங்கிக் கொண்டார் பிக் பாஸ். ராணவ்வும் சளைக்காமல் கலந்து கொண்டது நல்ல ஸ்போர்டிவ்னஸ். தனது பிரத்யேகமான பாணியில் கலகத்தையும் விளைவித்து ஆட்டத்தை திசை மாற்றி தன்னுடைய முத்திரையைப் பதித்து விட்டார் ராணவ்.
ஆக்ரோஷமாக விளையாடிய முத்து. ஆனால்?...
ஆரம்பத்திலிருந்தே முத்து துறுதுறுப்பாக ஆடினார். அவர் ஆடிய வேகத்தைப் பார்த்தால் அவர்தான் முன்னணி மதிப்பெண்களைப் பெறுவார் என்று தோன்றியது. ஆனால் முதல் லெவலின் இறுதியில் ஜீரோ மதிப்பெண்களை மட்டுமே முத்துவால் எடுக்க முடிந்தது, பிக் பாஸ் ஆட்டத்தின் விந்தை.
முதல் சுற்றில் ராணவ்வின் புகைப்படத்தை எடுத்த முத்து “கை காயப்பட்டிருக்கும் அவரை வைத்துக் கொண்டு ஆடுவது சிரமம். மேலும் அவருக்கு 2 பாயின்ட்டுகள் ஏற்கெனவே இருக்கின்றன” என்கிற காரணத்தைச் சொல்லி ராணவ்வின் புகைப்படத்தை எரித்து அவரை அவுட் ஆக்கினார். ‘உனக்கு திருஷ்டி கழிந்தது’ என்கிற சமாளிப்பு வேறு.
இரண்டாவது சுற்றிலும் முத்துதான் முன்னிலை. அருணை அவுட் ஆக்கி எல்லைக்கோட்டிற்கு அனுப்பினார். மூன்றாவது சுற்றிலிருந்து ரயானின் வேகம் ஆரம்பித்தது. கீழே விழுந்து வாரினாலும் இறுதிவரை அந்த வேகம் குறையவில்லை. தொடர்ந்து முத்து, விஷால், தீபக், மஞ்சரி என்று வரிசையாக காலி செய்து கொண்டே வந்தது சிறப்பு. மின்னல் வீரன் ரயான்.
ஆண்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்தால் பெண்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பது ரயானின் கணக்கு போல. “என்னடி.. இவன்.. வரிசையா காலி பண்ணிட்டே வரான். எதையாவது செஞ்சு இவனை நிறுத்தணும். ஆட்டத்தை மாத்தணும்” என்று பவித்ராவிடம் டீல் போட்டார் ஜாக்குலின். சவுந்தர்யாவும் இந்தக் கூட்டணியில் இணைந்தார். ஆனால் unstoppable ரயானை ஒன்றுமே செய்ய முடியவில்லை. பெண்கள் வழிமறித்தாலும் உள்ளே புகுந்து மணியை அடித்து எல்லோரையும் அவுட் ஆக்கி முதல் இடத்திற்கு வந்தார். அவருக்கு ஐந்து மதிப்பெண்கள் கிடைத்தன. அடுத்ததாக வந்த சவுந்தர்யாவிற்கு 4 மதிப்பெண்கள்.
முத்துவின் வேகத்தை முந்திய ரயான்
தனது வேகம் மற்றும் விவேகம் காரணமாக இந்தச் சுற்றில் ரயான் முன்னுக்கு வந்தது இனிய ஆச்சரியம். “இனிமே மூளைக்குத்தான் வேலை” என்று பதட்டப்பட ஆரம்பித்தார் முத்து. (எனில் முதல் சுற்றில் அதை பயன்படுத்தவில்லையா?) “எனக்குல்லாம் அது கிடையாதுப்பா. அந்த விஷயத்துல நீதான் கில்லி” என்று சரண் அடைவது போல் பாவ்லா காட்டினார் தீபக். “அப்படில்லாம் சொல்லாதண்ணே.. நீயும் ஒரு ஃபைனலிஸ்ட். எழுதி வெச்சிக்கோ” என்று ஆதரவு தந்தார் முத்து.
இரண்டாவது லெவல் ஆரம்பித்தது. இதில் டாப் 3-க்கு மட்டும்தான் மதிப்பெண்கள். எனவே சர்வைவல் வேகம் அதிகமாகும். தனது கூட்டணி உபாயத்தை தகுந்த சமயத்தில் எடுத்து வலைவிரிக்க ஆரம்பித்தார் முத்து. அதன்படி அந்த வலையில் விஷால், அருண், ராணவ், தீபக் ஆகிய நான்கு மீன்கள் மாட்டின. “நம்ம கிட்ட பாயிண்ட்ஸே இல்லை. மொதல்ல அவங்களை காலி பண்ணுவோம். அதற்கப்புறம் நாம அஞ்சு பேரும் தனியாட்டம் ஆடலாம். யாரு முதல்ல வரோமோ.. பார்த்துக்கலாம்” என்று முத்து போட்டு வைத்த திட்டத்திற்கு அனைவரும் ‘ஓகே கண்மணி’ என்று தலையாட்டினார்கள்.
தன்னைத்தான் டார்கெட் செய்வார்கள் என்று ரயானுக்கு உறுதியாகத் தெரியும். எனவே அவர் பெண்களுடன் கூட்டணி அமைத்து ‘போட்ட திட்டங்கள் கைகூடும் நாள் வந்தது’ என்கிற பாடலைப் பாடி கோவா கேங்கிற்கு தற்காலிகமாக உயிர் தந்தார். இரண்டாவது லெவல் ரணகளமாக இருந்தது. முதல் சுற்றில் முத்துவைத் தடுப்பதற்காக மஞ்சரி ஆக்ரோஷமாக போராடினார். என்றாலும் தனது மெயின் டார்கெட்டான ரயானை குறி வைத்து தூக்குவதில் வெற்றி பெற்றார் முத்து.
முத்து போட்ட கூட்டணி ஐடியா அவரைக் காப்பாற்றியதா?
அடுத்த சுற்றில் ராணவ் சுத்தியலைக் கைப்பற்றிக் கொள்ள அவரிடமிருந்து அதை பறிப்பதற்காக பெரும் போராட்டம் நடந்தது. ‘அய்யோ கை..’ என்று அவர் அலற “அப்படின்னா விட்டுடு” என்று கத்தினார்கள். அடிபட்டவருடன் இப்படியொரு ஆட்டத்தை ஆடுவது எல்லோருக்குமே பதட்டத்தைத் தரும். ‘அடிபட்ட கையை நான் இன்வால்வ் பண்ணவேயில்ல” என்று ராணவ் சொன்ன பிறகு ஆட்டம் தொடர்ந்தது. இந்தச் சுற்றில் மஞ்சரியை அவுட் ஆக்கினார் முத்து. அடுத்தடுத்த சுற்றுகளில் ஜாக்குலின் மற்றும் சவுந்தர்யா அவுட்.
‘உங்க போட்டோவை நீங்களே எடுக்கக்கூடாது’ என்று எச்சரிக்கை அறிவிப்பு செய்தார் பிக் பாஸ். ‘பவித்ராவை தூக்குங்க’ என்று முத்து சொன்னதின் பேரில் அருண் அந்தக் காரியத்தைச் செய்தார். ஆக மீதமிருப்பவர்கள் கூட்டணி வைத்திருந்த ஐந்து ஆண்கள் மட்டுமே. இனிமேல் தனியாட்டம் நடக்குமா?
வேகமாக ஓடி வந்த ராணவ் சுத்தியலைப் பறித்தார். அடுத்து வந்த அருணிடம் சுத்தியலை தர அதை வைத்து முத்துவை அவுட் ஆக்கினார் அருண். ‘போட்டு வைத்த திட்டம் தவிடுபொடியான கோபத்தில் ‘this is unethical. சுத்தியல் பக்கம் போகக்கூடாதுன்னு நாம முதல்லயே பேசிக்கிட்டோம்” என்று ராணவ்வை கடிந்து கொண்டார் முத்து. “இதுல என்ன unethical? Individual game ஆடலாம்ன்னுதானே பேசிக்கிட்டோம்” என்று பதிலுக்கு மல்லுக்கட்டினார் ராணவ். சுத்தியல் பக்கம் செல்லாமல் ஆர்டராக செல்ல வேண்டும் என்கிற சமாச்சாரம் ராணவ்விற்கு சொல்லப்பட்டதா, இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. “ரைட்டு.. விடு.. என்னதான் பிளான் போட்டாலும் இப்படித்தான் ஆகும்” என்கிற மாதிரி முத்துவை சமாதானப்படுத்தினார் தீபக்.
எதிர் தரப்பை முதலில் வீழ்த்தி விட்டு பிறகு நாம் தனியான ஆட்டம் ஆடலாம் என்று முத்து சொன்ன பிறகு, ராணவ் தனக்கான ஸ்ட்ராட்டஜியை யோசிப்பதில் பிழையில்லை. அடிபட்டிருப்பதால் அவர் மற்றவர்களிடம் போராடி ஜெயிக்க முடியாது. ஏதாவது தந்திரங்களைத்தான் யோசிக்க வேண்டும்.
தீபக்கை நடிகர் அஜித் காரெக்டருடன் ஒப்பிட்ட விஷால்
அடுத்த சுற்றில் வெறியுடன் விளையாடிய தீபக், அருணை அவுட் செய்து முத்துவின் வயிற்றில் பாலை வார்த்தார். அடுத்த சுற்றில் தீபக்கை அவுட் செய்த விஷால், ‘மங்காத்தா’ திரைப்படத்தின் காரெக்டரை குறிப்பிட்டு (விநாயக் மகாதேவன்) அவரைப் போல் சைலண்ட்டாக தீபக் வெற்றி பெறுவார்” என்று அவுட் ஆக்கிய காரணத்தைச் சொன்னது சுவாரசியம்.
இறுதிச் சுற்றில் ராணவ் மற்றும் விஷால் இருந்தார்கள். ராணவ் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள விஷால் சுத்தியலைக் கைப்பற்றினார். Chronological order-ல்தான் செய்யணும்’ என்று மஞ்சரி சுட்டிக் காட்ட, ‘புலி ஆடு புல்லுக்கட்டு’ ஆட்டத்தின் பாணியில் சுத்தியலை கீழே போட்டு விட்டு ‘இப்ப ஓகேவா’ என்று கேட்டு மணியை அடித்து ராணவ்வை அவுட் ஆக்கியது விஷாலின் புத்திசாலித்தனம். ‘ராணவ்வோட ஸ்ட்ராட்டஜியை ராணவ்விற்கே பயன்படுத்தினேன்’ என்று இதற்கு காரணம் சொன்னார் விஷால். இந்த லெவலில் விஷால் 3 மதிப்பெண்கள் பெற்று முதலில் வந்தார். அடுத்து வந்த ராணவ்விற்கு 2 மதிப்பெண்கள் கிடைத்தன.
முத்துவுடன் ஒட்டிக் கொள்ள நினைக்கிறாரா மஞ்சரி?
“அருண் கிட்ட ஏன் சுத்தியலை கொடுத்தே? இது கூட்டணி தர்மம் இல்லை’ என்கிற பஞ்சாயத்தை முத்து மீண்டும் துவங்க அது தொடர்பான விவாதம் சூடாக சுழன்றது. “அருண் கையில் என் போட்டோ இல்லை. அதனாலதான் கொடுத்தேன். நான் அவுட் ஆகலை. அது எனக்கு போதும்’ என்று ராணவ் சொன்ன காரணம் சரியாகத்தான் இருந்தது.
‘உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறு ரூவை மறந்துடாதீங்க’ காமெடி மாதிரி “உங்க கூட்டணில என்னை ஏன் சேர்க்கலை?” என்று முத்துவிடம் மல்லு கட்டினார் மஞ்சரி. முத்துவுடன் ஒட்டிக் கொண்டே சென்றால்தான் ரன்னர்-அப் ஆக முடியும் என்கிற கனவில் மஞ்சரி இருக்கிறாரோ?!
“பாயிண்ட் இல்லாதவங்க கூடத்தான் கூட்டணின்னா, 2 பாயிண்ட் ஆல்ரெடி வெச்சிருந்த ராணவ்விற்குப் பதிலாக என்னை சேர்த்திருக்கலாமே?” என்று மஞ்சரி கேட்பது சரியான லாஜிக். ஆனால் மஞ்சரியை ஓரங்கட்ட முத்து நினைக்கிறாரோ என்னமோ?! “அந்தச் சமயத்தில் ராணவ்தான் பக்கத்தில் இருந்தான்” என்று சமாளிப்பான காரணத்தைச் சொன்னார்.
“ஏண்டி இவளே.. இந்த முத்து இருக்கானே.. யப்பா.. என்னமா டீம் சேக்கறான் பாத்தியா?” என்று பவித்ராவிடம் சவுந்தர்யா புறணி பேச “இவனுங்க தனியா ஆடியிருந்தாலே வந்திருக்கலாம். முத்துவிற்கு பாயிண்ட் வேணும்ன்றதால இந்தக் கூட்டணி. ஆனா அது அவனுக்கே பேக் ஃபயர் ஆயிடுச்சு” என்று சொல்லி மகிழ்ந்தார் பவித்ரா.
இந்த ஆட்டத்தின் முடிவில் ஐந்து புள்ளிகளுடன் ரயான் முன்னணியில் இருந்தார். அடுத்ததாக 4 புள்ளிகளுடன் சவுந்தர்யா (பார்றா!). முத்து ஜீரோ நிலையில் இருந்தார்.
விளக்கு அணைந்தால், வெற்றியும் அணையும்
கேப் விடாமல் TTF - 3 ம் சுற்றை சுடச்சுட ஆரம்பித்தார் பிக் பாஸ். தனது உயரத்திற்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் விளக்கை விரலால் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும். லைட் ஆஃப் ஆனால் அவுட் என்று பொருள். இதில் டாப் 3-ல் வருபவர்களுக்கு மட்டுமே மதிப்பெண். அரைமணி நேரத்திற்குள் ரயான், ஜாக்குலின், அருண், பவித்ரா, ராணவ், சவுந்தர்யா, மஞ்சரி ஆகியோர் வரிசையாக அவுட் ஆனார்கள். விளக்கை ஆஃப் செய்து ஆஃப் செய்து விளையாடினார் சவுந்தர்யா.
இந்த ஆட்டத்திலாவது முதல் மதிப்பெண்ணை பெற வேண்டும் என்கிற ‘விடாமுயற்சி’யுடன் (படம் தள்ளிப் போயிடுச்சாமே?) போராடிய முத்துவிற்கு ‘பல்பு’ கிடைத்தது. அடுத்ததாக கவனச்சிதறல் காரணமாக தீபக்கும் அவுட். ஆக இந்தப் போட்டியில் முதலிடத்திற்கு வந்து 3 மதிப்பெண்களைப் பெற்றார் விஷால். தீபக் 2 மதிப்பெண்கள் பெற்றார். முத்து ஒரு மதிப்பெண்ணைப் பெற்று தன் கணக்கை வெற்றிகரமாகத் துவக்கினார்.
இன்றைய பிரமோவில் ரயானிற்கும் முத்துவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதைப் பார்க்க முடிந்தது. யார் வெல்வார் TTF? பொறுத்திருந்து பார்ப்போம்.
வாசக நண்பர்கள் அனைவருக்கும் விகடன்.காம் சார்பில் என்னுடைய மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.