செய்திகள் :

BB Tamil 8 Day 87: `நீ என்ன ரூல்ஸ் சொல்றது?’; முற்றும் பகை; முத்துவிற்கு எதிராக ஒலிக்கும் குரல்கள்

post image

முத்துவிற்கு கடுமையான போட்டியாக, ரயான் களத்தில் குதித்தது ஒரு சுவாரசியமான ட்விஸ்ட். வல்லவனுக்கு வல்லவன் உதித்தால்தான் போட்டி சுவாரசியமாகும். மஞ்சரியும் ஜாக்குலினும் முத்துவின் வேகத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஆட்டத்தை இன்னமும் சுவாரசியப்படுத்துகிறது. TTF-ஐ யார் வெல்லுவார் என்பதுதான் இப்போதைய கேள்வி.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 87

“ராணவ் பண்ணது எத்திக்கல் இல்லைன்னா, நீ பண்ணதும் எத்திக்கல் இல்லை. ஐந்து போ் கூட்டணி அமைத்து ஆடினீங்க?” என்று முத்துவின் ஸ்ட்ராட்டஜி பற்றி கடுமையாக விமர்சித்தார் ரயான். இருவருக்கும் தொடர்ச்சியான விவாதம் நடந்தது. “அப்ப நீ பயந்துட்டேன்னுதானே அர்த்தம்?” என்று ரயான் கேட்டதில் முத்து டிரிக்கர் ஆகி விட்டார். முத்துவிடம் இப்போதெல்லாம் சமநிலை தவறுவதை அதிகமாகக் காண முடிகிறது. அழுத்தம் அதிகமாக அதிகமாக அவரிடம் பொறுமை காணாமல் போவதையும் காண முடிகிறது. 

பிக் பாஸ் வீட்டில் ரயான், ஜாக்குலின்
ரயான், ஜாக்குலின்

“பாயிண்ட்ஸ் டேபிள்ல யார்லாம் மேல இருக்கறாங்களோ, அவங்களை கீழே கொண்டு வருவதுதான் பிளான். என்னை பிரவோக் பண்ணாத. நான் பயப்படற அளவுக்கெல்லாம் நீ பெரிய ஆள் இல்லை” என்று ரயானிடம்  வார்த்தைகளை இறைத்தார் முத்து. ரயான் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்வதால் ‘அப்ப.. நாங்க என்ன தக்காளி தொக்கா..’ என்று மஞ்சரி, ஜாக் உள்ளிட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். 

ரயான் - முத்து - கடுமையான விவாதம்

“அவனும்தானே மொதல்ல பசங்களை அவுட் பண்ணிட்டு அப்புறம் பொண்ணுங்களை டார்கெட் பண்ணி அவுட் பண்ணான்.. அது மட்டும் என்னவாம்?” என்கிற மாதிரி முத்து விவாதம் செய்தார். ‘பயந்துட்டே’ என்று ரயான் சொன்ன வார்த்தை அவரை அதிகமாக பாதித்திருக்கிறது. 

‘ஐந்து பேரைக் கொண்டு கூட்டணி வைத்து ஆடினாய், நான் தனியாக ஆடினேன்’ என்று  ரயானால் முத்துவிடம் அத்தனை உறுதியாக விவாதிக்க முடியாது. ஏனெனில் ‘முத்து தன்னை டார்கெட் செய்வார் என்று  உறுதியாக எதிர்பார்த்ததால், பெண்களுடன் கைகோத்து கூட்டணி அமைத்திருந்தார் ரயான். எனவே இதே உத்தியை அவரும் பயன்படுத்தியிருக்கிறார். 

பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன்
முத்துக்குமரன்

இருவருக்குள் துவங்குகிற ஒரு சண்டை என்பது சரவெடி மாதிரி பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பற்றிக் கொள்ளும் என்பதுதான் நடைமுறை. இங்கேயும் அப்படி ஆயிற்று. ரயானுக்கும் முத்துவிற்கும் இடையே ஆரம்பித்த விவாதம் பக்கத்திலும் பரவியது. ‘பயந்துட்டே’ன்னு நீ சொல்றது சரியில்லை’ என்று ரயானை கண்டித்தும் முத்துவிற்கு ஆதரவாகவும் மஞ்சரி மற்றும் ஜாக்குலின் பேசினார்கள். ஆனால் “என்னை நீ தப்பா சித்தரிக்கிறே” என்று ஜாக்குலினுடன் சூடான மோதலை ஆரம்பித்தார் முத்து. ‘ஏன் ரெண்டு பேரையும் தப்பா சொல்ற.. என் பக்கம் தப்பு கிடையாது’ என்று முத்து சாதிக்க, அதனால் ஜாக்கிற்கு கோபம் வந்தது. 

“பயந்துட்டே’ன்னு  நான் சொன்னது தப்புதான். க்ரூப்பா விளையாடினா பவர் அதிகமாகுதுல்ல. அதைத்தான் மீன் பண்ணேன்” என்று ரயான் இறங்கி வர “நானும் ஸாரி’ என்று சமாதானம் அடைந்தார் முத்து. ஆனால் இந்த ஈகோ வெடிகுண்டு தற்காலிமாக அணைந்தாலும் பிறகு மீண்டும் வெடித்தது. 

‘சோறு வேணுமா, பாயிண்ட் வேணுமா?’

மார்னிங் ஆக்டிவிட்டி என்கிற பெயரில் 3 பாயிண்ட்டுகளை தர முடிவு செய்தார் பிக் பாஸ். ‘சோறு வேணுமா, பாயிண்ட் வேணுமா?’ என்றால் பாயிண்ட் வேணும் என்கிற வெறியில் இருக்கிற போட்டியாளர்கள் நிமிர்ந்து அமர்ந்தார்கள். “நான் இதற்கு எப்படி தகுதியானவன்?’ என்று ஒவ்வொருவரும் பேச வேண்டும். இதற்கான கால அளவை ‘ஸடார்ட் மற்றும் ஸ்டாப்’ சொல்வதன் மூலம் பிக் பாஸ் நிர்ணயம் செய்வார். 

“உடல் மற்றும் மனரீதியாக நான் பலம் மிக்கவன்” என்று பெருமையடித்துக் கொண்டார் முத்து. அதை தன்னம்பிக்கை என்றும் சொல்லலாம். ‘என் பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல’ என்கிற மாதிரி தன்னை ரிஜிஸ்டர் செய்தார் மஞ்சரி. அவருடைய பேச்சுதான் பலருக்கும் பிடித்தது என்பதால் பெரும்பான்மை அடிப்படையில் மூன்று பாயிண்ட்டுகள் மஞ்சரிக்கு சேர்ந்தன. முத்துவிற்கு எதிர்வாக்கு அளிக்க விரும்புபவர்கள் கூட மஞ்சரிக்கு வாக்களித்திருக்கலாம்.

பிக் பாஸ் வீட்டில் பவித்ரா
பவித்ரா

 TTF-ன் ஐந்தாவது சவாலை அறிவித்தார் பிக் பாஸ். ‘நான் சொன்னா நீ கேட்பியா, மாட்டியா?’ என்றொரு நண்பனிடம் கேட்கும் வசனம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தில் வரும். நட்பிற்கு மரியாதை தருவான் என்கிற அசாத்திய நம்பிக்கையில் நண்பன் இதைக் கேட்க, என்ன —--------க்கு அதைக் கேட்கணும்?” என்று டிவிஸ்ட் தருவான் ஹீரோ. இந்த டாஸ்க்கும் அதைப் போன்றதுதான். ‘யார் தான் சொன்ன டாஸ்க்கை செய்து முடிப்பார், யாரை நம்ப வேண்டும், நம்பக்கூடாது’ என்கிற அடிப்படையிலானது. 

டாஸ்க் செய்யப் போகும் நண்பர் அதை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டால் மூன்று பாயிண்ட்டுகள் கிடைக்கும். ஒருவேளை யாருமே அதை செய்ய முன்வரவில்லையென்றால் அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார். ‘அவருக்கு ஒரு மதிப்பெண் தரப்படும்’ என்று விதியை தவறாக வாசித்து விட்டார் தீபக். மஞ்சரி லாஜிக்கல் பிழையைச் சுட்டிக் காட்டியவுடன் ‘சாரி பிக் பாஸ். மைனஸ் மார்க்கை ஹைபன்னு நெனச்சிட்டேன்” என்றார். 

போட்டியாளர்களை தண்ணி குடிக்க வைத்த பிக் பாஸ்


‘போன் டாஸ்க்’ என்பது முந்தைய சீசன்களில் பார்த்து நமக்குப் பழக்கமானதுதான். கார்டன் ஏரியாவில் உள்ள போனில் அழைப்பு வரும். யார் முதலில் போனை எடுக்கிறாரோ, அவரிடம் செய்ய வேண்டிய டாஸ்க் சொல்லப்படும். அவர் தகுதியான நண்பரைத் தேர்ந்தெடுத்து விளக்கிச் சொல்லி அந்த டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும். 

போன் பக்கத்தில் கர்ச்சீப் போட்டு அமர்ந்தார் தீபக். “யார் எனக்கு டாஸ்க் தராங்களோ, அவங்கதான் போனை எடுக்கலாம்” என்று டீல் பேசினார். போன் அடிக்க, முத்துவும் ரயானும் மின்னல் வேகத்தில் ஓடி வந்தார்கள். ‘நான்தான் தொட்டேன்’ என்று இருவரும் அடித்துக் கொள்ள, ‘முத்துதான் தொட்டார்’ ஜாக்குலின் சாட்சியம் சொல்ல, ‘போங்கடா டேய்’ என்று சலிப்புடன் விலகினார் ராயன். இந்தப் பஞ்சாயத்து முடிவதற்குள்ளாகவே போனை எடுத்து முத்து பேசினார். 

பிக் பாஸ் வீட்டில் சவுந்தர்யா, முத்து
சவுந்தர்யா , முத்து

‘55 காலி கோப்பைகளை 90 விநாடிகளில் கோடடையாக கட்ட வேண்டும்’ என்பதுதான் டாஸ்க். ஜாக்கை தேர்ந்தெடுத்தார் முத்து. ஆனால் அவர் மறுக்கவே ரயானிடம் சென்றார். இந்த டீல் ஓகே ஆனது. புகைச்சலை மறந்து ரயான் ஒப்புக் கொண்டது ஸ்போர்டிவ்னஸ். முத்து செகண்ட் கணக்கை சொல்லிக் கொண்டே வர, ரயான் அடுக்க ஆரம்பித்தார். ஆனால் 73 செகண்டிலேயே பஸ்ஸர் அடித்து விட்டது. எனில் முத்துவின் கணக்கு தவறு. இந்த ஆட்டத்திலிருந்து முத்து வெளியேற்றப்பட்டதால் ஏமாற்றத்தை விழுங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டார். 

அடுத்த போன் காலை தீபக் எடுத்தார். ‘90 விநாடிகளில் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்பது டாஸ்க். ராணவ்வை தீபக்கிற்கு அவ்வளவாக பிடிக்காது என்றாலும் திடகாத்திரமானவர் என்பதால் அவரைத் தோ்ந்தெடுத்தார் போல. “யாருமே என்னை நம்பாதப்ப, நம்பித் தந்திருக்கீங்கண்ணே. நிச்சயம் செய்து  முடிப்பேன்” என்கிற வாக்குறுதியுடன் ராணவ் சென்றாலும் கால் பாகம் முடிப்பதற்குள்ளாகவே திணறத் துவங்கினார். காலை உணவை அப்போதுதான் ஹெவியாக முடித்தார் போல. 

போட்டியில் தோற்றதால் ராணவ் மிகவும் ஃபீல் செய்ய “டேய்.. மார்க் மட்டும் முக்கியமில்ல. நீ பண்ண முயற்சி இருக்கு பார்த்தியா.. அதுதான் முக்கியம்.” என்று தீபக் தந்த ஆறுதல் சிறப்பானது. 

ஜாக்கிற்கு வந்த வில்லங்கமான சவால்


அடுத்து போனை ஓடி வந்து எடுத்த ஜாக்கிற்கு பிக் பாஸ் தந்த சவால் மிகவும் வில்லங்கமானது. அவரால் தேர்ந்தெடுக்கப்படுவர் மீதமுள்ள டாஸக்குகளில் கலந்து கொள்ள முடியாது. விஷயம் தெரியாமல் ‘எனக்கு.. எனக்கு’ என்று கையைத் தூக்கிய அருணிடம் பொறுப்பை ஒப்படைத்தார் ஜாக். ஆனால் விஷயம் தெரிந்ததும் அருண் ரிவர்ஸ் கியர் போட்டார். “இன்னமும் எத்தனை டாஸ்க்கு இருக்குன்னு தெரியணும்” என்று அருண் கேட்டது சிறுபிள்ளைத்தனமானது. பிக் பாஸ் எப்படி அதற்கு பதில் சொல்லுவார்?|

சவுந்தர்யா, ஜாக்குலின்
சவுந்தர்யா, ஜாக்குலின்

எனவே அருணிடம் தனியாக கேட்ட கேள்வியை பொதுவில் கேட்டார் ஜாக். எவருமே இதற்கு தயாராகாமல் இருந்தது இயல்புதான். எனவே ஆட்டத்திலிருந்து ஜாக் வெளியேற்றப்பட்டார். அவருக்கு ஒரு மைனஸ் மதிப்பெண். 

‘போனை எடுப்பதற்கு தைரியம் தேவை’என்று பேச்சுவாக்கில் முத்து சொன்னது பஞ்சாயத்திற்கான விதையாக மாறியது. “காலைல ரயான் பயந்துட்டே’ன்னு சொன்னப்ப உனக்கு அத்தனை கோபம் வந்துது. இப்ப நீ சொல்றது என்ன கதை. நீயும் அதையேதான் செய்யற” என்று மஞ்சரி ஆரம்பித்து வைக்க, இந்த விஷயம் முத்துவிற்கு எதிராகப் பற்றிக் கொண்டு வந்தது. “தனியா விளையாடத்தான் தைரியம் வேணும். கூட்டா விளையாடறதுக்கு இல்ல” என்று ரயான் மீண்டும் பழைய விஷயத்தைக் கிளற வாக்குவாதம் சிறப்பாக எரிந்தது. 

மீண்டும் எழுந்த ரணகளமான விவாதம்


“மஞ்சரி….சகுனி வேலை பார்த்துட்டல?” என்று தூரமாக நின்ற மஞ்சரியிடம் கேட்ட முத்து பிறகு அதை மாற்றிக் கொண்டு ‘ஒரு வேலை பார்த்துட்டல?” என்று தானாக எடிட் செய்து கொண்டார். (பயப்படுறியா குமாரு?!) “நீ கோபத்துல வார்த்தைகளை விட்றாத. அதுல மத்தவங்க தப்பு மறைஞ்சுடுது” என்று ரயானுக்கு பவித்ரா அட்வைஸ் செய்தார். அவர் ‘மத்தவங்க தப்பு’என்றது முத்துவாக இருக்கும். 

ரயான், முத்து இருவருமே செய்தது தப்பு என்கிற மாதிரி பஞ்சாயத்து போக ‘நான் தப்பு செய்யலை. போனை எடுக்க தைரியம் வேணும்னு சொன்னேன். இதுல என்ன தப்பு” என்று முத்து மல்லு கட்ட “காலைல மன்னிப்பு கேட்டு முடிஞ்ச விஷயத்தை மீண்டும் ஏன் கிளப்பணும்?” என்று சரியாக கேள்விகள் எழுந்தாலும் அந்த நியாயத்தை எவரும் உணரவில்லை.

பிக் பாஸ் வீட்டில் ரயான்
ரயான்

சைட் டிராக் மாதிரி ஜாக்கிற்கும் முத்துவிற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் மூண்டது. ‘மத்தவங்க எமோஷன்ஸை புரிஞ்சுக்கோ’ என்று முத்து சொல்ல, ‘உனக்கும் அதுதான்’ என்று விடாமல் உரையாடலை வளர்த்தார் ஜாக். 

“முத்து நீள நீளமா வியாக்கியானம் சொன்னப்புறம், எல்லாமே அவனுக்கு சாதகமா மாறிடுது. இதை ரொம்ப நாளா பார்க்கறேன்” என்று சவுந்தர்யாவிடம் ரயான் அனத்தியது உண்மையான விஷயம். 

‘ஒரு உருண்டையை சாமிக்கு கொடுத்துடு’ - சவுந்தர்யா காமெடி


அடுத்த போனை ஓடிச் சென்று எடுத்தார் சவுந்தர்யா. ஏதோ விஷ்ணுவிடம் பேசுவது போல வெட்கப்பட்டுக் கொண்டு ‘சொல்லுங்க” என்று அவர் நகத்தைக் கடிக்க ‘ஒரு செட் சாப்பாட்டை 45 நிமிடத்துல சாப்பிடணும்’ என்று டாஸ்க் சொல்லப்பட்டது. சவுண்டு.. சவுண்டு.. என்று சுற்றியிருந்தவர்கள் கூவினார்கள். ‘வெச்சுடட்டுமா?’ என்று சவுந்தர்யா கேட்க “வாங்களேன்.. இன்னம் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்” என்று கலாய்த்தார் பிக் பாஸ். 

சுற்றியும் முற்றியும் பார்த்த சவுந்தர்யாவின் தேர்வு விஷாலாக இருந்தது. ‘நடுவுல தண்ணி குடிக்கலாமா?” என்று விஷால் சந்தேகம் கேட்க “அய்யோ..அதை கேக்க மறந்துட்டனே.. போய் கேட்டுட்டு வந்துடவா?” என்று பிக் பாஸை லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்தார் சவுந்தர்யா. ‘திரும்பவும் போன் பண்ணி கேட்டா என்ன?’ என்று சவுந்தர்யா சீரியஸாக சந்தேகம் கேட்க, விஷால் சிரித்துக் கொண்டே ‘அது என்ன பப்ளிக் டெலிபோனா?” என்று நக்கலடித்தார். 

பிக் பாஸ் வீட்டில் மஞ்சரி, சவுந்தர்யா
மஞ்சரி, சவுந்தர்யா

“ஓகே.. சாப்பிடறேன். எனக்கு ரெண்டு பாயிண்ட் தருவியா?” என்று டீல் பேசினார் விஷால். ‘டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவருடா” என்று சவுந்தர்யா விவாதிக்க ‘சரி. ஒழிஞ்சு போ’ என்று ஒரு பாயின்ட்டிற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அந்த ஒரு பாயின்ட்டிற்காக விஷால் எத்தனை பெரிய அவஸ்தையில் ஈடுபடப் போகிறார் என்பதை அப்போது அவர் அறிந்திருக்க நியாயமில்லை. 

ஒரு செட் மீல்ஸ் என்று பிக் பாஸ் சாதாரணமாக சொல்லி விட்டாலும் வெஜ் புலவ், ஜாங்கிரி, லஸ்ஸி, சிக்கன், பீடா என்று ஒரு மினி பிரியாணிக் கடையே டேபிளில் இருந்தது. ‘அடப்பாவிங்களா.. பசிக்குது. சாப்பிடக் கொடுங்கடா’ன்னா பச்சத்தண்ணி கூட பிக் பாஸ் தர மாட்டாரு. இப்ப பாரேன்.. இவ்வளவு அள்ளித் தந்துட்டு 45 நிமிஷத்துல சாப்பிடணும்னா எப்படி’ என்று விஷாலின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம். 

‘அதெல்லாம் பார்த்துக்கலாம்’ என்கிற மாதிரி தன்னம்பிக்கையுடன் ஆரம்பித்தார் விஷால். “அய்யோ.. பார்க்கறப்ப வாய் ஊறுதுல்ல” என்று வீடியோவில் பார்த்தவர்கள் நாக்கைச் சப்புக் கொட்டினார். வெஜ் புலவ் மீது எல்லா சைட் டிஷ்ஷையும் ஊற்றி உருண்டைகளாக ஆக்கி அதன் மீது ஜாங்கிரியைத் தூவும் காட்சியை சஸ்பென்ஸ் படம் போல கண்களை விரித்து பக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்தார் சவுந்தர்யா. “கருமம்.. என்னடா பண்றான். இந்தக் காட்சியைப் பார்க்கற யாருமே வெஜ் புலவ்வை வாழ்க்கைல சாப்பிட மாட்டாங்க” என்று வீட்டுக்குள் இருந்து கிண்டல் வந்தது. 

பவித்ரா, தீபக்
பவித்ரா, தீபக்

உருண்டை உருண்டைகளாகப் பிடித்து வைத்த விஷால் ‘சங்கிலி கருப்பா’ என்கிற கோஷத்துடன் வாய்க்குள் திணிக்க ஆரம்பிக்க ஒரு கட்டத்தில் அவருடைய கண்கள் செருகி தலை தொங்கியது. “வேணும்னா ஒரு உருண்டையை சாமிக்குன்னு வெச்சுடு. பிக் பாஸ் ஒண்ணும் சொல்ல மாட்டாரு” என்று இந்தச் சமயத்தில் சவுந்தர்யா சொன்னது அல்டிமேட் காமெடி.  உணவின் வேகம் தாங்காமல் வாந்தியெடுத்தாலும் சமாளித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார் விஷால். 

அரை பாயிண்ட் தியாகம் செய்தால் பிட்ஸா கிடைக்கும்


“வயிறு கிழிஞ்சு வெளிய வந்துடப் போவுதுடா. என்னாச்சு அழறியா என்ன?” என்று சவுந்தர்யாவின் காமெடிகள் தொடர்ந்தன. “விஷாலு.. வி்ட்றாதடா.. சாப்பிட்டு முடி” என்று வீட்டுக்குள் இருந்து உற்சாக ஆதரவுகள் வந்தன. இன்னமும் ஐந்து நிமிடம்தான் என்னும் போது மீண்டும் வேகமெடுத்தார் விஷால். “முடியலைன்னா விட்டுறுடா” என்று சொன்னாலும் காலியான லஸ்ஸி கிளாஸை நிரப்பி வைத்தார் சவுந்தர்யா. பஸ்ஸர் அடிக்கும் போது கொஞ்சம்தான் உணவு மிச்சமிருந்தது. பிக் பாஸ் சற்று கருணை காட்டியிருக்கலாம். 

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

விஷால் இந்தப் போட்டியில் தோற்றுப் போனாலும் செய்த முயற்சிக்காக அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். சில நிமிடங்களுக்கு முன் அவஸ்தையாக இருந்த விஷயம், இப்போது சிரிப்பாக மாறி விட்டது. ‘ஆரம்பத்துல புது மாப்பிள்ளை விருந்து மாதிரி ஜோரா உக்காந்தான். அப்புறம் டொய்ங்ங்க்குன்னு ஆயிட்டான்” என்று அருண் கிண்டலடிக்க அனைவரும் சிரித்தார்கள். 

“எனக்காக யாரும் டாஸ்க் பண்ண மாட்டீங்கள்ல. எனக்குத் தெரியும். கிச்சான்னாலே இளிச்சவாயன்தானே?” என்று கண்ணைக் கசக்க ஆரம்பித்தார் பவித்ரா. ஜாக்கும் மஞ்சரியும் டீல் போடுவதைப் பார்த்து அவருக்குள் எழுந்த ஆட்சேபம் அது. “நீ எனக்கு சொன்னியா?” என்று ஜாக் கேட்க பவித்ராவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. 

போன் டாஸ்க்கை முடித்து விட்டு அடுத்த சவாலை ஆரம்பித்தார் பிக் பாஸ். இது தனியாக ஆட வேண்டிய ஆட்டம். பேலன்ஸ் செய்வது முக்கியம். பல்வேறு துண்டுகளால் ஆன ஒரு கொம்பின் மீது பெயிண்ட் நிரப்ப்பட்ட ஜார் இருக்கும். கொம்புகளை இணைக்கும் அதே சமயத்தில் ஜார் கீழே விழாமல் நடக்க வேண்டும். இரண்டு பகுதிகளாக நடந்த இந்த ‘கழைக்கூத்தாடி’ டாஸ்க்கில் முத்து, ரயான், ஜாக், தீபக், பவித்ரா ஆகியோர் முதல் ஐந்து இடத்தைப் பிடித்தார்கள். அவர்களுக்கு முறையே மதிப்பெண்கள் தரப்பட்டன. முத்து லம்ப்பாக ஐந்து மதிப்பெண்களைப் பெற்றார். 

பவித்ரா, ஜாக்குலின்
பவித்ரா, ஜாக்குலின்

புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு விருந்து அளிக்க முடிவு செய்தார் பிக் பாஸ். அதன் கூடவே மருந்தும் இருந்தது. ‘பாயின்ட் வேணுமா, சாப்பாடு வேணுமா?’ என்று பிக் பாஸ் கேட்க ‘பாயின்ட்டே’ என்று மக்கள் அலறினார்கள். அதிலும் டிவிஸ்ட் வைத்த பிக் பாஸ், “ஐந்து பேருக்கு உணவு, ஐந்து பேருக்கு பாயின்ட். நீங்களே முடிவு பண்ணிக்கங்க” என்று அவர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டார். 

பாயின்ட் வேண்டும் என்பவர்கள் காலை வரை சாப்பிட முடியாது. அனைவருமே இதற்கு சம்மதித்தார்கள். “தண்ணி கூட குடிக்கக்கூடாது” என்கிற புதிய பாயின்ட்டை முத்து கொண்டு வர “நீ என்ன ரூல்ஸ் சொல்றது?” என்று ரயான் ஆட்சேபித்தார். “அப்பதானே.. சவால் அதிகமாகும். மக்கள் யோசிப்பாங்க” என்றார் முத்து. 

“நீ என்ன ரூல்ஸ் சொல்றது?’ - முத்துவிற்கு எதிராக ஒலிக்கும் குரல்கள்


டாஸ்க்கில் உபவிதிகளைச் சோ்ப்பதில் முத்து மட்டுமே விற்பன்னராக இருக்கிறார். “எப்படில்லாம் கோத்து விடறான் பாரேன்” என்று மற்றவர்கள் இதை ஆட்சேபிக்கிறார்கள். “சரிப்பா.. நீயே ஏதாவது ஐடியா சொல்லேன்” என்று முத்து கேட்டால் மௌனம்தான் வருகிறது. மீண்டும் முத்துவேதான் ஏதாவதொரு ஐடியாவை கிரியேட் செய்ய வேண்டியிரு்ககிறது. 

“ஓகே.. பிக் பாஸ் தர்ற அஞ்சு பாயிண்ட்டை ஆளுக்கு அரை பாயிண்ட்டா பிரிச்சுப்போம். இன்னொரு அரை பாயிண்ட்டை ஒருத்தர் தியாகம் பண்ணிட்டு சாப்பிடப் போகலாம்” என்கிற ஐடியாவிற்குள் நுழைந்தார்கள். சாப்பாடு விஷயத்தில் விஷாலை கேட்கவே முடியாது. இப்போதுதான் அவர் வெஜ்புலாவில் உருண்டு மிதந்து விட்டு வந்திருக்கிறார். தீபக் விஷாலுக்கும், முத்து மஞ்சரிக்கும், ஜாக் பவித்ராவிற்கும், சவுந்தர்யா அருணிற்கும் அரை பாயிண்ட் விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் ராணவ் - ரயான் ஜோடி மட்டும் ‘நீதான் சொல்லேன்.. ஏன் நீ சொல்றது’ பாணியில் விட்டுத் தராமல் அமர்ந்திருந்தார்கள். 

ரயான், அருண்
ரயான், அருண்

அவர்களின் மனதைக் கலைப்பதற்காக பிட்ஸா பெட்டிகளை களத்தில் இறக்கினார் பிக் பாஸ். ‘இதைத்தான் புத்தாண்டு விருந்துன்னு சொன்னாரா?’ என்று தியாகம் செய்தவர்களின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கும். அவர்களின் எதிரேயே உணவைப் பிரித்து சாப்பிட, ராயன் விட்டுக் கொடுக்க முடிவு செய்தார். ‘நான் ஜெயிச்சி வாங்கிக்கறேன்’ என்று அவர் சொன்னது ஸ்போர்டிவ்னஸ். 

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைச் சொன்னதோடு எபிசோட் நிறைவுற்றது

BB Tamil 8: 'ரயானுக்கு டிக்கெட் கிடைச்சிருக்கக்கூடாது' - விஜய் சேதுபதியிடம் சொன்ன முத்துக்குமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 90-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருகிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடந்தது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர... மேலும் பார்க்க

BB Tamil 8: மீண்டும் டபுள் எவிக்‌ஷன்; வெளியேறப்போகும் இருவர்!

கடைசிக்கட்ட பரபரப்புடன் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மேலும் ஆறு பேர் சேர மொத்தப் போட்... மேலும் பார்க்க

BB Tamil 8: `இனி எப்படி விளையாடணும்னு சொல்ல போறது இல்ல,ஆனா...'- சாட்டை சுழற்றும் விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 90-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருகிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடந்தது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர... மேலும் பார்க்க

Siragadikka Aasai : ஷோரூமை இழந்த மனோஜ்; ரோகிணி ரூ.27 லட்சத்தை எப்படி புரட்டுவார்?

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகிணி மற்றும் மனோஜை விஜயா மன்னித்துவிடுகிறார். ஆனால் ரோகிணிக்கு மற்றொரு நெருக்கடியை விஜயா கொடுத்துவிட்டார்.சீரியலில் சமீபத்திய எபிசோடுகளில், ரோகிணி கதை ஒரு ப... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 89: `நான் என்ன காமெடி பீஸா?'- கடுப்பான சவுந்தர்யா; இருவர் வெளியேற்றமா?

இறுதி டாஸ்க் முடிந்தாலும் TTF ரிசல்ட்டை வெளியிடாமல் சஸ்பென்ஸில் வைத்திருக்கிறார் பிக் பாஸ். சனிக்கிழமை தெரியுமாம். டிவிஸ்ட் இருக்குமாம். வடிவேலு பாணியில் சொன்னால் ‘என்னவா இருக்கும்?’ இதுதான் போட்டியாள... மேலும் பார்க்க

BB Tamil 8: 'பணப்பெட்டிய எடுக்கிற ப்ளான்லதான் ராயன் இருந்தான், ஆனா...' - மஞ்சரி சொல்வதென்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வ... மேலும் பார்க்க