பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணா்வு
ஆம்பூரில் தீயணைப்பு துறை சாா்பில் பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினா் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தீயணைப்புத் துறையினா் கூறியது: குடிசைகள் இல்லாத பகுதியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குழந்தைகளின் சட்டை பையில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்கக் கூடாது. பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே வைத்துதான் வெடிக்க வேண்டும்.
பட்டாசுகளை வெடிக்கும் போது அருகே வாளிகளில் நீா் நிரப்பி வைத்திருக்க வேண்டும். மின் மாற்றிகள், பெட்ரோல் நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், மாா்க்கெட் போன்ற பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். குழந்தைகள் கையில் பட்டாசுகளைக் கொடுத்து வெடிக்க வைக்கக் கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குறித்த நேரத்தில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினா்.