ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்...
``அப்பாவின் அந்த ஆசையை நிறைவேத்த முடியாமப் போயிடுச்சு!'' - தந்தையை இழந்து வாடும் ஆர்த்தி கணேஷ்கர்
நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை ரவீந்தரன் உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83.
சன் டிவி ஆரம்பித்த புதிதில் அதில் டாப் டென் காமெடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிப் பிரபலமானவர் ஆர்த்தி. பிறகு சினிமாப் பக்கம் வந்தவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துப் புகழடைந்தார்.
பிறகு சக நகைச்சுவை நடிகரான கணேஷ்கரைத் திருமணம் செய்து கொண்டார். மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

ஆர்த்தியின் தந்தை ரவீந்தரன் தலைமைச் செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தனிச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.
ஆர்த்தியின் அம்மா 2006ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்டார்.ஆர்த்திக்கு ஒரேயொரு அக்கா. அவர் சீனாவில் வசித்துவருகிறார்.
ஓய்வுக் காலத்தை சொந்த ஊரான கோயம்புத்தூரில் கழித்துவந்த ரவீந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலன் பாதிக்கப்பட்டார்.
அப்போது முதல் ஆர்த்தி தந்தையை அருகில் வைத்துக் கவனித்துவந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ரவீந்திரனுக்கு ஸ்ட்ரோக் வர, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பிற்பகல் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.
ஆர்த்தியிடம் பேசியபோது,
"ரெண்டு பொண்ணுகளையும் பையன்கள் போல வளர்த்தார் அப்பா. அம்மா மறைவுக்குப் பிறகும் தன் சோகத்தை வெளியில் காட்டிக்காமல் உற்சாகமாகவே இருந்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலேயே வேலை பார்த்ததால் என்னை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்கிப் பார்க்கணும்னு ஆசைப்பட்டார், அவருடைய அந்த ஒரு ஆசையைத்தான் என்னால் நிறைவேற்ற முடியாமல் போயிடுச்சு" என்றார்.
தந்தையின் இழப்பால் வாடும் ஆர்த்திக்கு சினிமா நடிகர் நடிகைகள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ரவீந்திரனின் உடல் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்படுகிறது.