கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிம...
முல்லை பெரியாறு: ``வெடிகுண்டு புரளி, கேரள அரசின் சதி; ராணுவத்தை நிறுத்தணும்'' விவசாயிகள் கண்டனம்
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் ‘கேரள அரசின் சதி’ என்று பெரியாறு வைகை பாசன சங்கத்தினர் கூறியதோடு அதற்கு கண்டனம் தெரிவித்து, கம்பத்தில் உள்ள விவசாயிகள் சங்க அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கும் பகுதி யாரும் நுழைய முடியாத புலிகள் காப்பகப் பகுதி. இந்தப் பகுதிக்குள் எவ்வாறு வெடிகுண்டு எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று சிந்திக்காமல் கேரள அரசு அணையைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதற்காகவே இவ்வாறு புரளியைக் கிளப்பி உள்ளது.
இது முழுக்க முழுக்க கேரள அரசின் சதி செயல். தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரைக் குடிக்கும் 5 மாவட்டங்களில், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை முல்லைப் பெரியாறு அணைக்காக நாடாளுமன்றத்தில் பேசியதாகத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவே செயல்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள காவலர்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 26 ஆம் தேதி கம்பத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்கின்றனர்” என்று அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.