Career: NLC-ல் பயிற்சிப் பணி; தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்; ...
`பொறுப்புள்ள' சீனாவை எதிர்க்க இந்தியாவின் ஆதரவை நாடும் அமெரிக்கா! - என்ன பிரச்னை?
கடந்த வாரம், சீனா தனது 5 அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்தக் கனிமங்கள் செமிகண்டக்டர்கள், ராணுவ இயந்திரங்கள் போன்ற உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.
`இது உலக நாடுகளைப் பாதிக்கும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியை விதித்தார்.

'பொறுப்புள்ள' சீனா
இந்தக் கட்டுப்பாடுகள் விதிப்பிற்கு சீனா,
"தற்போது உலக அளவில் நிலையற்றத்தன்மையும், ராணுவத் தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த அரிய கனிமங்கள் ராணுவ உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதை சீனா கண்டறிந்துள்ளது.
சீனா ஒரு பொறுப்புள்ள நாடாக, உலக அளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க, அச்சுறுத்தல் இருக்கக்கூடிய கனிமங்களின் ஏற்றுமதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது" என்று காரணம் கூறுகிறது.
இந்தியாவின் ஆதரவு
ஆனாலும், இந்தக் காரணத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை போலும். அதனால் தான், நேர்காணல் ஒன்றில் நேற்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்,
"இது சீனா Vs பிற உலக நாடுகள் ஆகும். சீனா தற்போது அறிவித்துள்ள ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ளது.
இதற்கு நாம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். இந்தக் கட்டுப்பாட்டை சீனா ஏன் முடிவு செய்துள்ளது என்பது சரியாகத் தெரியவில்லை.

பாதுகாப்பு, எலெக்ட்ரிக் வாகனங்கள், எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கு முக்கிய தேவைகளான அரிய கனிமங்களின் மீது தங்களுக்கு இருக்கும் ஆதிக்கத்தை சீனா ஆயுதமாக்குவதை அமெரிக்கா அனுமதிக்காது.
நாம் நமது இறையாண்மையை பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப் போகிறோம். நாம் ஏற்கெனவே நம் கூட்டாளிகளிடம் இது குறித்து பேசிவிட்டோம். அவர்களை இந்த வாரம் சந்திக்கிறோம்.
இதற்கான உலகளாவிய ஆதரவை ஐரோப்பிய நாடுகள், இந்தியா மற்றும் ஆசிய நாடுகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்" என்று பேசியுள்ளார்.
சீனாவின் இந்தக் கட்டுப்பாடு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
உலகளவில் பெரிய அளவிலான ஏற்றுமதிகளை சீனா தான் செய்து வருகிறது. சீனா இந்த மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, அந்தக் கனிமங்களின் விலை கூடும் மற்றும் டிமாண்ட் அதிகரிக்கும்.
இதனால், உலகளவில் பல உற்பத்திகள் பாதிக்கக்கூடும். இது உலகளாவிய சவாலாக மாறலாம்.