Career: NLC-ல் பயிற்சிப் பணி; தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்; ...
Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சுத்திணறலுக்கு உடனடி தீர்வளிக்குமா தாளிசாதி எனும் சித்த மருந்து?
Doctor Vikatan: ஆஸ்துமா (Asthma) மற்றும் மூச்சுத்திணறல் (Shortness of Breath) உள்ளவர்கள், சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் தாளிசாதி மாத்திரையோ, சூரணமோ தினமும் எடுத்துக்கொண்டாலே பிரச்னை சரியாகும் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா, இதனால் உடனடி நிவாரணம் கிடைக்குமா?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
ஆஸ்துமாவின் தீவிரத்தைப் பொறுத்துதான் அதற்கான சித்த மருந்தை முடிவு செய்ய வேண்டும். ஆஸ்துமா பாதிப்புக்கு தாளிசாதி சூரணம் மிகவும் நல்ல மருந்து என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்துமா பாதித்தவர்கள், வளர்ந்த, பெரியவர்களாக இருக்கும்பட்சத்தில், தாளிசாதி சூரணத்தை அரை டீஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்துக் கொடுக்கலாம்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கிற மூச்சுத்திணறல் என்பது எந்தக் காரணத்தால் ஏற்பட்டது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
வீஸிங் காரணத்தால் ஏற்பட்டதா, இதயத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதா என்பதை எல்லாம் பார்த்துதான் அதற்கான சரியான மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும்.
அதாவது, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப்பாதை தொடர்பான பிரச்னைகளுக்கு தாளிசாதி சூரணம் நன்கு வேலை செய்யும். வேறு காரணங்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு தாளிசாதி வேலை செய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா நோயாளிகள், மருத்துவரின் ஆலோசனையோடு, தாளிசாதி சூரணம் சாப்பிடலாம். வெந்நீரில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தேனில் கலந்து சாப்பிடும்போது அதன் பலன் சிறப்பாக இருக்கும்.

தாளிசாதியின் காரத்தன்மையை, தேனின் இனிப்பு குறைத்து, கேஸ்ட்ரைட்டிஸ் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் என்பதே காரணம். தொண்டைக் கமறல், எரிச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால், சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் என்ற மாத்திரை இருக்கிறது. அதை வாயில் வைத்து சப்பி சாப்பிடலாம்.
பயணம் செல்லும்போது ஏற்படும் தொண்டை பிரச்னைகளுக்கு மாத்திரைகளைத் தேடி ஓடாமல், தாளிசாதி வடக மாத்திரைகள் இரண்டை சப்பி சாப்பிட்டாலே பிரச்னை உடனே குறைவதைப் பார்க்க முடியும். இதே தாளிசாதி வடகத்தை இடித்து, வாய்க் கொப்பளிக்கவும் பயன்படுத்தலாம். தொண்டை எரிச்சலின் ஆரம்பநிலையிலேயே இதையெல்லாம் செய்தால், பாதிப்பு தீவிரமாகாமல் சரியாவதைப் பார்க்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.