பாகிஸ்தான்: பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை! 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...
`அமெரிக்கா இந்தியாவுடன் நிற்கிறது' - அமெரிக்க செயலாளருடன் ராஜ்நாத் சிங் பேசியது என்ன?
பாகிஸ்தானுடனான போர் பதட்டத்துக்கு இடையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அலுவலக எக்ஸ் தள பக்கத்தில், "அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் காலையில் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குடன் பேசினார்.
தொலைபேசி உரையாடலில், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி பொதுமக்களின் இழப்புக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.

"பாகிஸ்தான் அம்பலப்பட்டுள்ளது" - Rajnath Singh
மேலும் அந்தப் பதிவில், "பீட் ஹெக்செத் அமெரிக்கா இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்றும் இந்தியாவின் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையை ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அமெரிக்க அரசின் வலுவான ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளார்." எனக் கூறப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்திடம், "பாகிஸ்தான் உலக தீவிரவாதத்துக்கு எரிபொருள் ஊற்றி பிராந்தியத்தின் அமைதியை சீர்குலைக்கும் மோசமான நாடு என்பது அம்பலப்பட்டுள்ளது.
உலகம் இனியும் தீவிரவாதம் பற்றி கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்க முடியாது" எனக் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தளம் தெரிவிக்கிறது.
India vs Pakistan

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர்பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தான் இந்திய எல்லையில் பாதுகாப்பு படைகளைக் குவித்து வருகிறது.
பாகிஸ்தான் இராணுவம், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டிய பகுதிகளில் (LoC) ஏப்ரல் 27-28 தேதிகளில் போர் நிறுத்த விதிகளை மீறியதாகவும் அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக கடந்த புதன்கிழமை வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் பஹல்காமில் நடந்த 26 பேரின் மரணத்துக்கு காரணமாக அமைந்த தீவிரவாத தாக்குதல் பற்றி உரையாடினார்.
அதன்பிறகான எக்ஸ்தள பதிவில், குற்றவாளிகள், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மற்றும் திட்டம் தீட்டுபவர்கள் அனைவரும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் எனப் பதிவிட்டார்.