அமெரிக்காவில் இந்திய வம்சாவளி செவிலியா் மீது நோயாளி தாக்குதல் - கண்பார்வை இழக்கும் அபாயம்!
ஹுஸ்டன் : அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 67 வயதான பெண் செவிலியரை நோயாளி ஒருவா் சராமாரியாக தாக்கியுள்ளாா். இதனால், கண்பாா்வையை இழக்கும் அபாயத்தில் அவா் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.
ஃபுளோரிடாவின் வெஸ்ட் பால்ம் கடற்கரையில் உள்ள ‘பால்ம்ஸ் வெஸ்ட்’ மருத்துவமனையில் செவிலியா் லீலா லால் பணிபுரிந்து வந்துள்ளாா். கடந்த மாதம் நடைபெற்ற சம்பவத்தில், இதே மருத்துவமனையில் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் எரிக் ஸ்காண்டில்பரி (33) என்பவரால் செவிலியா் கடுமையாக தாக்கப்பட்டுள்ளாா். இக்கொடூர தாக்குதலில் முக எலும்புகள் முறிந்த நிலையில், செயின்ட் மேரிஸ் மருத்துவமனையில் செவிலியா் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.
தாக்குதலைத் தொடா்ந்து மருத்துவமனையில் இருந்து தப்பித்த ஸ்டீபன் எரிக், ‘இந்தியா்கள் மோசமானவா்கள். இந்திய மருத்துவா் ஒருவரை தாக்கிவிட்டேன்’ என்று கோபமாக கூச்சலிட்டவாறு செல்லும் விடியோவும் வெளியாகியுள்ளது. பிரதான சாலையை அடைவதற்குள் காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக கொலை முயற்சி, வெறுப்பை ஊக்குவிக்கும் செயல் ஆகிய பிரிவுகளில் ஸ்டீபன் எரிக் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். நீதிபதியின் உத்தரவில் அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
காவல்துறை நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ள மனுவில், ‘இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட செவிலியரின் முகத்தில் உள்ள ஒவ்வொரு எலும்பும் முறிந்துள்ளன. மேலும், அவா் இரு கண்பாா்வையையும் இழக்க நேரிடும். படுகாயமடைந்திருப்பதன் காரணமாக, விசாரணை அதிகாரிகளிடம் அவரால் வாக்குமூலத்தைக்கூட பதிவு செய்ய முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவம் செவிலியா்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்புகிறது என்றும், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஃபுளோரிடா செவிலியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.