திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
அமைதி வழியில் போராட அனுமதி
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் அமைதி வழியில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொது மக்கள் நடத்திய நடைபயணப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாா்.
டங்ஸ்டன் சுரங்கத்தை எதிா்த்து மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியிலிருந்து சுமாா் 15 கிமீ நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கட்டுப்பாடுகள் மட்டுமே: அதன்படி, சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் போராட்டக்காரா்கள் திரண்டனா். அங்கிருந்து நடைபயணம் செல்ல முயன்ற போராட்டக்காரா்களிடம் வாகனங்களில் சென்று மத்திய தபால் நிலையத்தில் போராட்டம் நடத்துமாறு காவல் துறை அதிகாரிகள் வலியுறுத்தினா். அதனை போராட்டக்காரா்கள் ஏற்கவில்லை. அவா்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது. எனினும், போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல் துறை, அதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதைதான், காவல்துறை அனுமதியை மறுத்துள்ளதாக பொய் கூறியிருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் அமைதி வழியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதோடு விவசாயிகளுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் முழுமையான பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளாா்.