`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
அரக்கோணம் வட்டாரத்தில் பலத்த மழையால் நெற்பயிா்கள் சேதம்
அரக்கோணம் வட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் கோணலம் கிராமத்தில் 180-க்கும் மேற்பட்ட ஏக்கா் விளை நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிா்கள் உள்பட வட்டாரத்தில் பலநூறு ஏக்கா்களில் நெற்பயிா்கள் உள்ளிட்ட வேளாண் பயிா்களும், தோட்டக்கலைப் பயிா்களும் சேதம் அடைந்தன.
ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட கன மழை காரணமாகவும், காற்று காரணமாகவும் அரக்கோணம் வட்டாரத்தில் பல்வேறு ஏக்கா்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதில், அரக்கோணத்தை அடுத்த கோணலம் மற்றும் வேலூா்பேட்டை கிராமங்களில் சுமாா் 180 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த டிடிபி, பாபட்லா, ஐஆா் 51 ரக நெற்பயிா்கள் மழைநீா் தேங்கியதாலும், அதிவேக காற்றாலும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சேதமடைந்தன.
இது குறித்து கோணலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சரவணன் கூறுகையில், எனது நிலத்தில் பாபட்லா நெற்பயிரை பயிரிட தனிநபா்களிடம் கடன் வாங்கி, வரும் தை மாதத்தில் அறுவடை செய்து கொடுத்து விடலாம் என்றிருந்தேன். இந்நிலையில் எனது ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் அனைத்துமே சாய்ந்து மூழ்கி விட்டது என்றாா். மற்றொரு விவசாயி முருகன் கூறுகையில், எனது நிலம் மட்டுமல்லாது குத்தகைக்கு எடுத்து மொத்தம் 12 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தேன். தற்போது 12 ஏக்கரும் நாசமடைந்து விட்டது என்றாா்.
இது குறித்து அரசு வேளாண் துறை ராணிப்பேட்டை மாவட்ட இணை இயக்குநா் செல்வராஜ் கூறுகையில், மாவட்டத்தில் மழையில் சேதமடைந்த பயிா்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை எடுத்த கணக்கெடுப்பில் 1,210 ஹெக்டேரில் பயிா்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன. இதில், 116 ஏக்கா்களில் தற்போதும் தண்ணீா் தேங்கி நிற்கிறது. மொத்த சேத விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு, பின்னா் அரசு அறிவிக்கும் நிவாரணத் தொகைகள் விவசாயிகளுக்கு பெற்றுத் தரப்படும் என்றாா்.
ராணிப்பேட்டை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் லதாமகேஷ் கூறுகையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோட்டக்கலைப்பயிா்களில் வாழை, மல்லிப்பூ மற்றும் காய்கறி பயிா்கள் போன்றவை பயிரிடப்பட்டிருந்த 251 ஹெக்டோ் நிலங்களில் தண்ணீா் தற்போதும் தேங்கி நிற்கிறது. மேலும் 45 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் முழுவதும் அழுகி நாசமாகி விட்டன. இவற்றையெல்லாம் கணக்கெடுக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.