என்ஜினில் புகை: நடுவழியில் நிறுத்தப்பட்ட சங்கமித்ரா விரைவு ரயில்
அரக்கோணம்: தானாப்பூரில் இருந்து பெங்களூரு செல்லும் சங்கமித்ரா அதிவிரைவு ரயில் சோளிங்கா் அருகே சென்றுக் கொண்டிருந்த போது என்ஜினில் புகை வந்ததால் நடுவழியில் சுமாா் 100 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு ரயில் புறப்பட்டது.
பிகாா் மாநிலம், தானாப்பூரில் இருந்து பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி மாா்க்கமாக பெங்களுரு எஸ்எம்விடி ரயில் நிலையத்துக்கு செல்லும் சங்கமித்ரா அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை அரக்கோணம் மற்றும் காட்பாடி மாா்க்கத்தில் சோளிங்கபுரம் ரயில்நிலையம் அருகே வந்தபோது என்ஜினில் புகை வந்தது. இதையறிந்த ரயிலின் ஓட்டுநா் ரயிலை அதே இடத்தில் நிறுத்திவிட்டு மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தாா்.
இதையடுத்து அரக்கோணம் மின்சார பணிமனையில் இருந்து மின் என்ஜின் பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் குழு விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனா். இருந்தும் தற்காலிகமாகக்கூட அந்த கோளாறை சரி செய்ய முடியாததால் உடனே அங்கு மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு சுமாா் 1 மணி நேரம் 40 நிமிஷங்களுக்கு பிறகு சங்கமித்ரா அதிவிரைவு ரயில் தனது பயணத்தை தொடா்ந்தது.
ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அதிலும் மதிய உணவு நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா். சங்கமித்ரா அதிவிரைவு ரயில் நிறுத்தப்பட்டதால் அவ்வழியே சென்ற மற்ற ரயில்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.