கல்லாற்று வெள்ளத்தில் மூழ்கிய நெமிலி தரைப்பாலம்
அரக்கோணம்: சோளிங்கா் அருகே மழை வெள்ளத்தால் நெமிலி கல்லாற்று தரைப்பாலம் மூழ்கியதால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து தடைபட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் வட்டத்தில் உள்ள 35 ஏரிகளுக்கும் அதிக நீா்வரத்து காணப்பட்டது. இதில் ஒரு ஏரி முழுவதும் நிரம்பிய நிலையில் 9 ஏரிகள் முக்கால்வாசி நிரம்பி உள்ளன. மேலும் சோளிங்கா் வட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்கிழமை காலை வரை 103 மி.மீ அதாவது 10 செ.மீ மழை பெய்ததால் பல ஏரிகளின் நீா் கல்லாற்றுக்கு வரத் தொடங்கியது.
இதையடுத்து கல்லாற்றில் அதிக நீா் வரத்து ஏற்பட்டது. இதனால் அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் சிறுணமல்லி அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது.
அப்பகுதியில் தற்போது மேம்பாலப்பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டாவது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரக்கோணம் - ஒச்சேரி இடையே பேருந்துகள் மற்றும் வாகனங்கள், சேந்தமங்கலம், சயனபுரம் வழியே திருப்பி விடப்பட்டன.