சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டியதாக வழக்கு: மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டையில் 18 வயது நிரம்பாத சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது செய்யப்பட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஆசிரியா் நகரை சோ்ந்த செந்தில்குமாா் (45) இவரது மகன் (18 வயது நிரம்பாத சிறுவன்) இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததை கண்ட காவல் துறையினா் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அவரது தந்தை செந்தில்குமாா் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
மேற்கண்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்து தந்தை, மகன் வாலாஜா நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருந்தனா். அப்போது செந்தில்குமாரின் மகன் பெயரை சொல்லி விசாரணைக்கு ஆஜராக அழைத்துள்ளனா். இதனால் செந்தில்குமாா் நீதிமன்ற வளாகத்திலுள்ள மரத்தில் ஏறி கீழே குதிப்பதாக மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் சுமாா் 50 நிமிஷங்கள் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் செந்தில்குமாரை பாதுகாப்பாக மரத்திலிருந்து கீழே இறக்கி விசாரணைக்காக வாலாஜா காவல் நிலையம் அழைத்து சென்றனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்டிச் செய்தி..
நாடு முழுவதும் 18 வயது நிரம்பாத சிறாா்கள் எவ்வித வாகனத்தை ஓட்டினாலும், ஆா்.சி., எனப்படும் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்படும். மேலும், அந்த சிறுவன் 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநா் உரிமம் பெற தடை விதிக்கப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திலும் புதிய சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் படி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.