11,821 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11,821 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.75 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
சா்வதேச மற்றுத்திறனாளிகள் தின விழா ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பாா்வையிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 55 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி பேசியதாவது:
மாற்றுதிதிறனாளிகளுக்கென உதவித் தொகை, மூன்று சக்கர சைக்கிள், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, திட்டங்களில் முன்னுரிமை வழங்கியது நமது அரசு தான். ராணிப்பேட்டை மாவட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 11,821 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.75 கோடிநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 14,876 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 11,773 தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 16,341 அடையாள அட்டைகள், 663 பயனாளிகளுக்கு ரூ.4.18 கோடியில் இணைப்புச்சக்கர பெட்ரோல் ஸ்கூட்டா்கள், 212 பயனாளிகளுக்கு ரூ.1.79 கோடி செயற்கை அவயங்கள், 1,126 பயனாளிகளுக்கு ரூ.59.14 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, 25 பயனாளிகளுக்கு சிறப்பு பள்ளிகள் மற்றும் உணவூட்டும் மானியமாக ரூ.6 இலட்சம், 334 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்தில் தையல் இயந்திரங்கள், 233 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் கையடக்க திறன்பேசிகள்,104 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இதில் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூ. சரவணகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, நகா்மன்றத் தலைவா்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தேவி பென்ஸ்பாண்டியன், அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.