பெங்களூர் வரை ரோடு மோசம்! Goa Ride Day 01 | Chennai to Davanagere | Royal Enfiel...
அரசமைப்புச் சட்டம் 75 ஆவது ஆண்டில் 75 நூல்கள்; மணற்கேணி பதிப்பகம் முன்னெடுக்கும் மாபெரும் திட்டம்!
அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டு இது. நவம்பர் 26 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மாண்பமை குடியரசுத் தலைவர் உரையாற்றவிருக்கிறார். இந்த ஆண்டைப் பல்வேறு விதங்களில் கொண்டாட இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் திட்டமிட்டுள்ளன.
‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தைப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இன்று முன்வைத்து வருகின்றன. அது அரசியல் முழக்கமாக மட்டுமின்றி சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதாக மாறவேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டால்தான் அது நடக்கும். எனவே, இளைஞர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் பெறுமதியை எடுத்துச்சொல்ல வேண்டும்.
இந்த அறிவார்ந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விழைகிறது மணற்கேணி பதிப்பகம்.
2025 நவம்பர் வரையிலான ஓராண்டுக்குள் அரசமைப்புச் சட்டம் குறித்து 75 சிறு நூல்களை வெளியிடும் பெரும் திட்டத்தை மணற்கேணி பதிப்பகம் அறிவிக்கிறது. இந்த நூல் வரிசையின் பதிப்பாசிரியராக முனைவர் ரவிக்குமார் இருப்பார். ஒவ்வொரு நூலும் 32 முதல் 50 பக்கங்கள் வரை இருக்கும். நூலின் பக்க எண்ணிக்கை வேறுபட்டாலும் விலை 30/- ரூபாய் மட்டுமே. 75 நூல்களின் மொத்தவிலை 2250/- ரூபாய். 2000/- ரூபாய் முன்பணமாக செலுத்திப் பதிவு செய்து கொள்வோருக்கு 75 நூல்களும் பதிப்பகத்தின் செலவில் அஞ்சலில் அனுப்பப்படும்.
அத்துடன் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களின் கையெழுத்திலான அரசமைப்புச் சட்ட முகவுரை ஒன்றும் ஃபிரேம் செய்யப்பட்டுப் பரிசாக வழங்கப்படும். எதிர்வரும் நவம்பர் 26 அன்று இந்தத் திட்டத்தின் முதல் மூன்று நூல்களை நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் டெல்லியில் வெளியிடுகிறார்.