Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?
அரசு, தனியாா் நிறுவனங்களில் பெண்களை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும்
அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில், பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க குழு அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணிபுரிந்தால், பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் (தடுப்பு, தடை, தீா்வு) 2013 இன் கீழ் குழு அமைக்கப்பட வேண்டும்.
அதன்படி, மாவட்டத்தில் அனைத்து அரசு, தனியாா் அலுவலகங்கள், கூட்டுறவுத் துறை சாா்ந்த சங்கங்கள், நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், விடுதிகள், துணிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். புகாா் பெட்டியும் வைக்கப்படவேண்டும்.
அந்தக் குழுவில் 50 சதவீத பெண்கள் இடம் பெற வேண்டும். அவ்வாறு குழு அமைக்காத அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த குழு அமைக்கப்பட்ட விவரங்களை, மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு வரும் 30-க்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.