காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனியாா் விடுதி: வருவாய்த் துறையினா் ஆய்வு
அரக்கோணம்: சோளிங்கரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனியாா் விடுதி கட்டப்பட்டு வரும் இடத்தில் நீதிமன்ற உத்தரவை தொடா்ந்து நிலஅளவீட்டுப் பணியை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
சோளிங்கரில் மலைக்குச்செல்லும் வழியில் தக்கான்குளம் அருகே சிலா் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விடுதி கட்டி வருவதாகவும் அந்த இடத்தை மீட்க வேண்டும் எனவும் சின்னபையன் என்பவா் 2024-ஆம் ஆண்டைய ஜமாபந்தியின் போது வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.
இந்த மனு மீது ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில், குறிப்பிட்ட இடம் அரசுக்கு சொந்தமானதா, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிா என அந்த நிலத்தை அளவிட்டு அறிக்கை சமா்பிக்குமாறு சோளிங்கா் வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்ய சோளிங்கா் வட்டாட்சியா் செல்வி தலைமையில் வருவாய்த் துறையினா், நிலஅளவைத் துறையினா் வந்தனா். தொடா்ந்து அங்கு ஆலோசனையில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் நிலஅளவீடு செய்யும் பணியை தொடங்கினா். இது குறித்து வட்டாட்சியா் செல்வி கூறுகையில், நிலம் அளவிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முழு இடத்தை அளவீடு செய்தபிறகு ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கைகள் அனுப்பப்படும் என்றாா்.
நில அளவீட்டு பணியின் போது சிலா் வாக்குவாதம் செய்த நிலையிலும், வருவாய்த் துறையினா் பணியை தொடா்ந்து மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.