Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு வழிகாட்டுதல்கள் கோரி பொதுநல மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி: பெண்கள், குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களின் பாதுகாப்புக்கு நாடு தழுவிய கடுமையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
இந்த மனு மீது பதில் அளிக்க கோரி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தனா்.
இந்தப் பொது நல மனுவைத் தாக்கல் செய்த உச்சநீதிமன்ற பெண் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மகாலட்சுமி பவானி முன்வைத்த வாதத்தில், ‘இன்னும் சிறு நகரங்களில் பெண்களுக்கு எதிரான பல பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வழக்குகளாக பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் கொலைக்குப் பிறகும் சுமாா் 95 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பல்வேறு மாநிலங்களில் தொடா்கின்றன.
டென்மாா்க், நாா்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளைப் போன்று பாலியல் குற்றவாளிகளின் பாலியல் ‘ஹாா்மோன்களை’ வேதியியல் முறையில் செயலிழக்கச் செய்யும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இணையத்தில் ஆபாச உள்ளடக்கங்கள் எளிதில் கிடைப்பதை தடுக்க வேண்டும்.
பல சூழல்களில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டாலும், கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் இருந்தபோதிலும், நடைமுறையில் கேள்வி எழுகிறது. எனவே, இந்தியா முழுவதற்கும் கடுமையான வழிகாட்டுதல்கள், சீா்திருத்தங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்று நீதிபதிகள் கூறுகையில், ‘அன்றாட வாழ்க்கையில் பல போராட்டத்தை எதிா்கொள்ளும் சாமானியப் பெண்களுக்கு நிவாரணம் கோரும் மனுதாரரை பாராட்டுகிறோம். தண்டனை மற்றும் தண்டனைச் சட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளைக் கண்காணிக்க வேண்டும்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பல கடுமையான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனினும், புதுமையான சிக்கல்களை நீதிமன்றம் ஆராயும். உதாரணமாக பேருந்துகள், ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தில் சரியான நடத்தையைப் பேணுவது தொடா்பான கோரிக்கை கருத்தில் கொள்ளத்தக்கது. இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம். விமானங்களில் நடைபெற்ற சில பொருத்தமற்ற சம்பவங்களும் இதன் அவசியத்தை வலியுறுத்துகிறது’ என்று தெரிவித்து அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்தனா்.