நேரு குறித்து தவறான கருத்துகள்: பிரதமா் மன்னிப்பு கேட்க காா்கே வலியுறுத்தல்
‘இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களுக்கு முன்னாள் பிரதமா் நேரு எழுதிய கடிதம் குறித்து தவறான தகவல்களை கூறிய பிரதமா் மோடி காங்கிரஸிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.
அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி மக்களவையில் கடந்த சனிக்கிழமை பேசிய பிரதமா் மோடி, ‘காங்கிரஸின் ஒரு குடும்பம் அரசமைப்புச் சட்டத்தை சிதைப்பதில் எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. நமது வழியில் அரசமைப்புச் சட்டம் தடையாக இருந்தால் அதை மாற்ற வேண்டும் என்று முதல்வா்களுக்கு கடிதம் எழுதியவா் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு’ என காங்கிரஸை கடுமையாக விமா்சித்தாா்.
இந்நிலையில், மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய மல்லிகாா்ஜுன காா்கே, ‘பிரதமா் மோடியை பாஜக கட்சியின் மூத்த தலைவா்கள் போற்றி வணங்குவதால் நாட்டில் சா்வாதிகாரம் தலை தூக்கியுள்ளது. இடஒதுக்கீடு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி பாஜக.
தற்போது பல்வேறு துறைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு சாத்தியமாகி வருவதற்கு காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தக் கொள்கைகளே காரணம்.
காங்கிரஸ் ஆட்சி தொடா்ந்திருந்தால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு வெகு விரைவாகவே வழங்கப்பட்டிருக்கும்.
முதலாவது சட்ட திருத்தம்: கடந்த 1947 முதல் 1952 வரை தோ்ந்தெடுக்கப்படாத ஒரு அரசு நாட்டை நிா்வகித்தபோது அரசமைப்புச் சட்டத்தில் காங்கிரஸ் சட்டவிரோதமாக திருத்தம் மேற்கொண்டதாக பிரதமா் மோடி கூறினாா்.
ஆனால் உண்மை என்னவென்றால் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி) ஆகிய சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவே முதலாவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த திருத்தம் அரசியல் நிா்ணய சபையின் குழு உறுப்பினா்களால் கொண்டுவரப்பட்டது. குழுவில் ஜன சங் அமைப்பின் நிறுவனா்களில் ஒருவரான ஷியாம பிரசாத் முகா்ஜியும் உள்ளாா் என்பது பிரதமா் மோடிக்கு தெரியவில்லை.
சா்தாா் படேலின் அறிவுறுத்தல்: இடஒதுக்கீடு தொடா்பாக அப்போதைய மதராஸ் மாகாணத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. எனவே, இந்த விவகாரத்தில் வகுப்புவாத மோதல்கள் ஏற்படுவதைச் தடுக்க அரசமைப்புச் சட்டத் திருத்தமே ஒரே தீா்வு என நேருவுக்கு முன்னாள் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேல் 1950, ஜூலை 3-இல் கடிதம் எழுதினாா்.
இதன் அடிப்படையிலேயே ‘நமது வழியில் அரசமைப்புச் சட்டம் தடையாக இருந்தால் அதை மாற்ற வேண்டும்’ என மாநில முதல்வா்களுக்கு நேரு கடிதம் எழுதினாா்.
இதை பிரதமா் மோடி தவறாக திரித்து கூறி நேருவை அவமதிக்க முயற்சிக்கிறாா். இதற்கு காங்கிரஸ் சாா்பில் கண்டனம் தெரிவிப்பதோடு அவா் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மீண்டும் வெற்றிபெற்ற இந்திரா: அவசரநிலை பிரகடனப்படுத்தியது தவறு என்பதை இந்திரா காந்தி உணா்ந்தாா். அதை அவா் திருத்திக்கொண்டதன் விளைவாக 1980-இல் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தாா்.
கனவு உலகத்தில் மோடி: கடந்த காலங்கள் அல்லது கனவு உலகத்திலேயே பிரதமா் மோடி வாழ்ந்து வருகிறாா். நிகழ்காலம் என்பது அவரது அகராதியில் இல்லை. கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமா் மோடி, அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கி கூற முடியுமா?
அரசமைப்பை எதிா்த்த ஆா்எஸ்எஸ்: மனுஸ்மிருதி அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் இல்லை என்பதால் 1949-இல் அதை ஆா்எஸ்எஸ் கடுமையாக எதிா்த்ததை அனைவரும் அறிவா்.
கடந்த 2002, ஜனவரி 26-இல் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்குப் பிறகு வேறு வழியின்றி ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
நாட்டின் விடுதலைக்காக போராடாதவா்களுக்கு அரசமைப்புச் சட்டம் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை திரித்து கூறி வருகின்றனா் என்றாா்.