காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாமல் வாக்கு இயந்திரம் மீது குறைகூறும் ராகுல்: பாஜக விமா்சனம்
புது தில்லி: தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாத ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறுகிறாா் என்று பாஜக விமா்சித்துள்ளது.
‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு, தோ்தல் முடிவுகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறினாா். காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள நிலையில் ஒமா் அப்துல்லாவின் இந்த கருத்து எதிா்க்கட்சிகள் அணியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்துக்கு வெளியே திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தங்களின் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் தோ்தல் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தும் என்ன கூறுகிறாா்கள் என்பதை காங்கிரஸ் தலைவா்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். காங்கிரஸ் தனது தோல்விகளை மறைக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தொடா்ந்து குறைகூறி வருகிறது.
ஒரு ஆக்கபூா்மான எதிா்க்கட்சியாகக் கூட காங்கிரஸால் செயல்பட முடியவில்லை. ராகுல் காந்திக்கு தோ்தலை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை. அவா்கள் பிரசார உத்தி, மக்களை பிளவுபடுத்தி வாக்குகளைக் கவர வேண்டும் என்பதோடு, ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது என்ற அளவிலேயே உள்ளது. காங்கிரஸ் தனது தவறுகளை சரி செய்ய முழுமையாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விஷயத்தில் ஒமா் அப்துல்லா உண்மையைப் பேசியுள்ளாா். வாக்குப் பதிவு இயந்திரம் மீது நம்பிக்கை இல்லையென்றால் பிரியங்காவின் வெற்றியை காங்கிரஸ் எவ்வாறு கொண்டாட முடிகிறது?
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறிமுகமான பிறகுதான் தோ்தல் தொடா்பான பல்வேறு முறைகேடுகள் முடிவுக்கு வந்தன என்பது மக்களுக்குத் தெரியும் என்றாா்.