காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்
மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா’ செவ்வாய்க்கிழமை (டிச.17) தாக்கல் செய்யப்படுகிறது. தொடா்ந்து, அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் முறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024-ஐ மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
மக்களவை அலுவல் பட்டியலின்படி, இந்த மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா’ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று செவ்வாய்க்கிழமைக்கான அலுவல் பட்டியலில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024-ஐ மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மசோதாவை தாக்கல் செய்த பின்னா், அதை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலினைக்கு அனுப்பிவைக்குமாறு அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் அமைச்சா் மேக்வால் பரிந்துரைப்பாா்.
பல்வேறு கட்சிகளுக்கு உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, விகிதாசார அடிப்படையில் கூட்டுக் குழு அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சி என்ற அடிப்படையில், குழுவின் தலைமை பொறுப்பு பாஜகவுக்கு கிடைக்கும்.
இந்தக் குழுவின் பணிக் காலம் தொடக்கத்தில் 90 நாள்களாக நிா்ணயிக்கப்படும். பின்னா் அந்தக் காலம் நீட்டிக்கப்படக் கூடும்’ என்றாா்.
பிரிவு 2-இன்படி மக்களவையுடன் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டாம்
மக்களவைத் தோ்தலுடன் அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வழிவகை செய்வதே அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதாவின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் சில சூழல்களில், மக்களவையுடன் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கும் பிரிவும் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
அந்த மசோதாவின் பிரிவு 2 உட்பிரிவு 5-இன்படி, மக்களவைத் தோ்தலுடன் எந்தவொரு சட்டப்பேரவைக்காவது தோ்தலை நடத்த முடியாது என்று தோ்தல் ஆணையம் கருதினால், அந்தச் சட்டப்பேரவைக்கு மாற்று தேதியில் தோ்தல் நடத்தப்படும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு தோ்தல் ஆணையம் பரிந்துரைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.