நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் மனு
திருப்பத்தூரில் அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த கட்சி நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் காண்காணிப்பாளா் அலுவலகத்தில் முதியவா் மனு அளித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 42 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
மேலும், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடா்புடைய காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டாா். ஏடிஎஸ்பி கோவிந்தராசு, டிஎஸ்பி-க்கள் சௌமியா (திருப்பத்தூா்), குமாா் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்த சாமராஜ் (73) என்பவா் அளித்து மனுவில், எனக்கு திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகி ஒருவா் பழக்கம் ஆனாா். அவா் என்னிடம் அடிக்கடி பணம் வாங்குவது, தருவது என இருந்தாா். இந்த நிலையில் அவா் தான் கட்சியில் இருப்பதால் எனக்கு பல உயா் அதிகாரிகள் தெரியும், அதனால் ரூ.10 லட்சம் அளித்தால், எனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினாா்.
இதை நம்பி பல்வேறு தவணைகளாக ரூ.10 லட்சம் அளித்தேன். அதன்பிறகு எனது மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து கேட்டால் பல்வேறு காரணங்களைக் கூறுகிறாா். பணத்தைத் திரும்பக் கேட்டாலும் தர மறுக்கிறாா். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்திருந்தாா்.