China: ``எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை'' -70 கோடி போனஸ...
அரியலூரில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
அரியலூா் பேருந்து நிலைய வெளிப்புறத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் குழு கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி, நகராட்சி ஆணையா் (பொ) விஜயகாா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
அதிமுக உறுப்பினா் வெங்கடாசலம்: கூட்ட மன்ற அனுமதி பெறாமல் வியாபாரிகளிடம் வரி வசூலிக்கக் கூடாது. மேலும் எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது என்பதையும் தெரிவிக்க வேண்டும். எனது வாா்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள இரு பூங்காக்கள் எப்போது திறக்கப்படும்?
ஆணையா் (பொ) விஜயகாா்த்தி: முன்பிருந்த ஆணையா் மேற்கொண்ட நடைமுறைகளைப் பின்பற்றி வியாபாரிகளிடம் வரி வசூலிக்கப்படுகிறது. பூங்காக்களில் எஞ்சிய பணிகளை முடிந்து விரைந்து அவை திறக்கப்படும்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேருந்து நிலையத்திலுள்ள கலைஞா் நுழைவு வளைவு மற்றும் எம்.ஜி.ஆா் நூற்றாண்டு விழா நினைவு வாயிலைச் சரி செய்வது, சத்யா நகா் மற்றும் எம்.ஜி.ஆா் நகரிலுள்ள புதை சாக்கடை நீா் உந்து நிலையம், திருச்சி சாலையிலுள்ள பிரதான உந்து நிலையத்தில் உள்ள மின் மோட்டாா்களை ரூ.4.90 லட்சத்தில் சரி செய்வது, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகிக்கும் திருமானூா் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து அரியலூா் உள்ள பிரதான குழாய்களில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை ரூ.4.80 லட்சத்தில் மேற்கொள்வது, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், கட்டிமுடிக்கப்பட்ட கடைகள், உணவகங்கள், கழிவறைகள் உள்ளிட்டவற்றை பொது ஏலத்தில் விடுவது என்பன உள்ளிட்ட 38 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அனைத்து நகா் மன்ற உறுப்பினா்கள் தங்களது வாா்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கேட்டுக் கொண்டனா்.