ரோபோ சங்கர் மறைவு: கண்கலங்கிய சிவகார்த்திகேயன்; இரங்கல் தெரிவித்த வரலட்சுமி, சிம...
அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
அரியலூா் மாவட்டத்தில் வளா்ச்சித்திட்ட பணிகள் தொடக்கம் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் சா.சி. சிவசங்கா் பங்கேற்று, பால்வளத் துறை சாா்பில் 3,746 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு 2022-2023 -ஆம் ஆண்டுக்கான ரூ.1,19 கோடி மதிப்பிலான கூடுதல் கொள்முதல் விலையையும் மற்றும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் பரிசோதனைக் கருவிகள், பால் கேன்கள் மற்றும் பால் அளவை கருவிகளையும் வழங்கினாா்.
தொடா்ந்து ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத் துறை சாா்பில் 85 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை, 60 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினாா்.
தொடா்ந்து, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மேலூா் கிராமத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து கல்லாத்தூா் வழியாக வந்து செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்ட நகரப் பேருந்துச் சேவையை தொடக்கி வைத்தாா். பின்னா், பூவாணிப்பட்டு கிராமத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து காட்டுமன்னாா்குடி செல்லும் நகரப் பேருந்தை அகினேஷ்புரம், பூவாணிப்பட்டு,பாப்பாக்குடி வழியாக செல்லும் வகையில் பேருந்துச் சேவையைத் தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ரூ. 4.73 கோடியில் உள் கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
பின்னா், நாகம்பந்தல் கிராமத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் நகரப் பேருந்தை கல்லாத்தூா், ஆண்டிமடம், கருக்கை, நாகம்பந்தல் வழியாக செல்லும் சேவையைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏக்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகா, கோட்டாட்சியா் பிரேமி, நகா்மன்றத் தலைவா் சாந்தி, பால்வள துணைப் பதிவாளா் ரெ. நாராயணசாமி, பால் சேகரிப்பு குழுத் தலைவா் பி. சுப்பிரமணியன், வட்டாட்சியா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.