Dies Irae Review: மிரட்டும் மேக்கிங்; திகிலூட்டும் பேய்; ஆனா அது மட்டுமல்ல! இந்த...
'அவளுக்கு கிரிக்கெட் செட் ஆகாது' - நிராகரிப்புகளை தகர்த்தெறிந்த ஜெமிமாவின் கதை! | Jemimah Rodrigues
எட்டு வயது சிறுமி அவள். வீட்டில் அத்தனை துறுதுறுப்பாக இருப்பாள். அண்ணன்கள் இருவரும் கிரிக்கெட் ஆடக்கூடியவர்கள். எனர்ஜியாக சுற்றித்திரியும் அந்த சிறுமியையும் கிரிக்கெட் ஆட அனுப்பி வைக்கலாம் என பெற்றோர் முடிவு செய்கின்றனர். அண்ணன்களுடன் அந்த குட்டிப்பெண்ணும் கையில் அவள் அளவுக்கு ஏற்ற பேட்டை தூக்கிக் கொண்டு கிரிக்கெட் ஆட செல்கிறாள்.
சிறுவர்கள் நிறைந்த அந்த பயிற்சி மையத்தில் ஒற்றை சிறுமியாக ஜாலியாக பயிற்சிகளில் ஈடுபடுகிறாள். ஒரு நாள் திடீரென இன்னொரு பையன் அடித்த பந்து இவளின் தலையில் விழுந்து அடிபடுகிறது. வலி தாங்க முடியாமல் அழுகிறாள். எப்படியோ தலையில் தேய்த்து விட்டு அவளை தேற்றி அண்ணன்கள் வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர். மறுநாள் அந்த மையத்தின் பயிற்சியாளரை அழைத்து, 'இனி அவளை பயிற்சிக்கு அழைத்து வர வேண்டாம். அவள் ரொம்பவே குட்டியாக இருக்கிறாள். அவளுக்கு கிரிக்கெட் செட் ஆகாது. பெண் குழந்தைதானே வேறு எதாவது ஆட வையுங்கள்!' என அறிவுரை கொடுத்து அனுப்பி வைக்கிறார்
மும்பையின் பயிற்சி மையத்திலிருந்து எட்டு வயதில் வெளியேற்றப்பட்ட அந்த குட்டிச் சிறுமிதான், இப்போது உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெல்ல காரணமாக அமைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்!

நவி மும்பையின் நேற்றைய இரவையும் அந்தப் போட்டியையும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. நாக் அவுட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது குதிரை கொம்பு. ஆனால், இந்தியா அதை சாத்தியப்படுத்தியது. காரணம், ஜெமிமா ஆடிய அந்த வரலாற்று இன்னிங்ஸ். கபில் தேவின் கேட்ச், தோனியின் சிக்சர் என இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றிகளின் அடையாளங்களில் ஒன்றாக ஜெமிமாவின் இந்த இன்னிங்ஸூம் மாறும் சாத்தியம் அதிகம் இருக்கிறது. 339 ரன்கள் டார்கெட். ஜெமிமா கடைசி வரை நின்றார்.
கறை நல்லது
போட்டியை முடித்து செல்கையில் ஜெமிமாவின் சட்டையில் படிந்திருந்த கறை, 2011 உலகக்கோப்பையில் யுவராஜின் சட்டையிலும் கம்பீரின் சட்டையிலும் படிந்திருந்த கறைகளை நியாபகப்படுத்தியது. இந்த மூன்று கறைகளுக்குமே ஒரு ஒற்றுமை இருக்கிறது. மூன்றுமே தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன்னுடைய சாதனைகளை பிரதானப்படுத்தாமல் அணிக்காக உயிரைக் கொடுத்து ஆடியதன் அடையாளங்களாக படிந்த கறைகள்.

போட்டி முடிந்த பிறகு, 'நீங்கள் உங்களின் சதத்தை கூட இன்றைக்கு கொண்டாடவில்லை?' என ஜெமிமாவிடம் கேட்டார்கள். 'என்னுடைய அரைசதத்தை விடவும் சதத்தை விடவும் அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியமாகப்பட்டது. அது மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.' என்றார். இதுதான் ஜெமிமா!. பெரும் அழுத்தத்துக்கு மத்தியில்தான் ஜெமிமா இந்தப் போட்டிக்குள் வந்தார். இந்த உலகக்கோப்பை அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட். இன்னொரு போட்டியிலும் டக் அவுட். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார். அரையிறுதிக்கு செல்ல வென்றே ஆக வேண்டும் என்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில்தான் ஜெமிமாவை மீண்டும் அணியில் எடுத்தார்கள். அந்தப் போட்டியில் ஜெமிமா அசத்திவிட்டார். ஏனெனில், அணியிலிருந்து டிராப் செய்யப்படுவதன் வேதனையை அவர் இதற்கு முன்பே உணர்ந்திருக்கிறார்.

இதற்கு முன்பு நடந்த 2022 உலகக்கோப்பை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தன்னுடைய பெயர் இருக்குமென ஆவலாக எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்த அணியில் ஜெமிமாவுக்கு இடமில்லை, உடைந்தே விட்டார். 'எல்லாம் முடிந்துவிட்டது. என்னுடைய உலகமே உடைந்து நொறுங்கிவிட்டதை போல இருந்தது.' அந்தக் காலக்கட்டத்தை ஜெமிமா நினைவுகூறுவார். விரக்தியில் ஹாக்கி பேட்டை தூக்கிக் கொண்டு உள்ளூரில் ஹாக்கி தொடர்களில் ஆட சென்றுவிட்டார் ஜெமிமா. கொஞ்சம் நிதானமடைந்த பிறகுதான் மீண்டு வந்து கம்பேக்கும் கொடுத்தார்.
அணியிலிருந்து டிராப் செய்யப்படுவதன் வலி என்னவென்பது அவருக்கு தெரியும். இந்தப் போட்டிக்கு முன்பாகவும் தன்னுடைய நிலையை நினைத்து ஒவ்வொரு இரவிலும் அழுதுகொண்டிருந்ததாகவும் ஜெமிமா கூறியிருந்தார். கிட்டத்தட்ட ஒரு இறுக்கமான மனநிலையில்தான் அவர் இருந்தார்.
இந்நிலையில்தான் திடீரென நம்பர் 4/5 இல் ஆடிக்கொண்டிருந்தவரை நம்பர் 3 இல் போய் இறங்கு எனக் கூறுகிறார்கள். களமிறங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புதான் இந்தத் தகவல் ஜெமிமாவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
வாய்ப்புகள் அப்படித்தான் கடைசி நிமிடங்களில் கூட கதவை தட்டும்.

ஜெமிமா அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 48 ஓவர்களுக்கு களத்தில் நின்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுகிறோம் என்ற பதட்டத்தை பக்குவமாக கையாண்டு கால்குலேட்டிவாக இன்னிங்ஸை முன்னெடுத்து சென்றார்.
ஜெமிமா சுரேஷ் ரெய்னாவை போன்றவர். அணியின் அத்தனை பேரின் வெற்றியிலும் மகிழ்ச்சி கொள்ளக் கூடியவர். டான்ஸ் ஆடுவார், பாட்டு பாடுவார், கலாட்டா செய்வார். அவர் இருக்கும் இடமே ஜாலியாக இருக்கும். அணியின் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதில் முக்கியமான ஆதாரமாக விளங்குபவர். ஆனால், அவர் மீது இங்கே மதரீதியான தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.
கர் ஜிம்கானா க்ளப் என்பது மும்பையின் பழமையான க்ளப். அதில் உறுப்பினர் அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாதான். சில மாதங்களுக்கு முன்பு ஜெமிமாவின் தந்தை அந்த க்ளப்பில் ஜெமிமாவின் பெயரை பயன்படுத்தி ஒரு ஹாலை வாடகைக்கு எடுத்து மதமாற்ற கூட்டத்தை நடத்தினார் என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என சம்பந்தப்பட்ட பல தரப்பினரும் மறுத்திருக்கின்றனர். ஆனால், அந்த குற்றச்சாட்டை காரணமாக காட்டி ஜெமிமாவை அந்த க்ளப்பிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். இதோ இப்போது வெற்றிக்குப் பிறகு பைபிளை மேற்கோள்காட்டி ஜெமிமா பேசியிருக்கிறார். இதற்கும் ஒரு கும்பல் அவர் மீது வன்மத்தை கொட்டும். ஆனால், அதற்கெல்லாம் ஜெமிமா கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை. ஜெமிமாவின் வழி இந்திய அணி ஒரு அசாத்தியத்தை நிகழ்த்தியிருக்கிறது. கோடி இதயங்கள் இப்போது அவரை வாழ்த்திக் கொண்டிருக்கிறது.





















