ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: 14-வது முறையாக வென்ற பங்கஜ் அத்வானி!
ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரபல இந்திய வீரரான பங்கஜ் அத்வானி 14-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
கத்தார் நாட்டின் தோஹா நகரில் ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப். 15 முதல் பிப். 21 வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீரரான பங்கஜ் அத்வானி 14-வது முறையாக பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர், சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது 9 ஆசிய பில்லியர்ட்ஸ் பட்டங்களுடன், 2 ஆசிய பில்லியர்ட்ஸ் விளையாட்டு தங்கப் பதக்கங்கள் (2006, 2010), ஆகியவற்றுடன் 5 ஆசிய ஸ்னூக்கர் பட்டங்களையும் பங்கஜ் அத்வானி தன்வசம் வைத்துள்ளார்.
இதையும் படிக்க | எம்பாப்பே ஹாட்ரிக் கோல்..! மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்திய ரியல் மாட்ரிட்!
இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஈரானின் அமிர் சர்கோஷ் உடன் பங்கஜ் அத்வானி விளையாடினார். முன்னாள் ஆசிய சாம்பியனும், 6 முறை உலக ஐபிஎஸ்எஃப் 6-ரெட்ஸ் ஸ்னூக்கர் சாம்பியனுமான அமிர் சர்கோஷ் இறுதி ஆட்டத்தின் முதல் பகுதியில் சற்றே தடுமாறினாலும் பின்னர் ஆட்டத்தைக் கைக்குள் கொண்டு வந்தார். ஆனால், தனது வழக்கமான பாணியில் அழுத்தமின்றி விளையாடிய அத்வானி துல்லியமான ஆட்டத்தால் இறுதியில் வெற்றிபெற்றார்.
இந்த முக்கிய வெற்றியின் மூலம் தேசிய, ஆசிய, சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டங்களை ஒரே ஆண்டில் வெல்வதற்கான சாதனையை அவர் நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்த சாதனையை ஏற்கனவே அவர் செய்துவிட்டதால், ஸ்னூக்கரில் இதனை சாதிக்கும் பட்சத்தில் உலக வரலாற்றில் இத்தகைய சாதனையைச் செய்த முதல் வீரராக பங்கஜ் அத்வானி அறியப்படுவார். வெற்றி குறித்துப் பேசிய பங்கஜ் அத்வானி, “ஸ்னூக்கரில் 14 வது முறை ஆசிய சாம்பியன் கோப்பை வெல்வது எனக்கு மிகவும் சிறப்பானது. இந்த முறை ஆட்டம் மிகக் கடினமாக இருந்தது. என்னுடைய சேகரிப்பில் அடுத்த தங்கப் பதக்கத்தைச் சேர்த்துள்ளேன். இதே வேகத்தில் முன்னெடுத்துச் சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்” என்று கூறினார்.